Palestine Israel Conflict: பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே ஏன் மோதல்? ஆயிரக்கணக்கான உயிர் பலிக்கு யார் காரணம்?
Israel Palestine Issue: பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே என்னதான் பிரச்சனை? ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பலிக்கு காரணம் யார்? இரு நாடுகளின் பிரச்சனைக்கு தீர்வு என்ன? முழு அலசல்
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: இஸ்ரேலும் பாலஸ்தீன் இடையே போர் தொடங்கிவிட்டது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 07, 2023) அதிகாலை பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது 5000 ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலாக இருந்தது. பாலஸ்தீன அமைப்பான ஹமாஸுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, எதிரிகளுக்கு நாங்கள் தரும் பதிலடி அவர்களின் தலைமுறை தலைமுறையாக எதிரொலிக்கும் எனக் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இதற்கு முன்னரும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அதைவிட தீவிரமாக யுத்தம் நடந்து வருகிறது. அதேநேரத்தில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போரை அறிவிக்கவில்லை. ஆனால் நடக்கும் சம்பவங்களை வைத்து பார்த்தால் போர் நடப்பது போல தான் உள்ளது.
உலக நாடுகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நிற்கிறது
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் காரணமாக உலக நாடுகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளது. அரபு நாடுகளும் இஸ்லாமிய நாடுகளும் ஹமாஸுடன் நிற்கின்றன. இந்தியா, அமெரிக்கா,, யூரோப் போன்ற நாடுகள் இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன.
இரண்டு நாடுகள் கோட்பாடு என்ன?
இரண்டு நாடுகள் தீர்வு என்ற முன்மொழிவு முதலில் 1937 இல் பேசப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பீல் கமிஷன் தனது அறிக்கையில் இந்த முன்மொழிவை வழங்கியது. அதில் நெகேவ் பாலைவனம், மேற்கு மற்றும் காசா பகுதிகளை அரபு மக்களுக்கு வழங்க முன்மொழியப்பட்டது. அதேசமயம், கலிலேயாவில் உள்ள கடல் கடற்கரையின் பெரும்பகுதியையும், பாலஸ்தீனத்தின் வளமான நிலத்தையும் யூதர்களுக்குக் கொடுப்பது பற்றி பேசப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஜெருசலேமை தங்களுக்கென வைத்திருக்க விரும்பினர். இரண்டு நாடுகள் தீர்வு என்ற முன்மொழிவு திட்டத்தை யூதர்கள் ஆதரித்தனர். ஆனால் அரேபியர்கள் அதை நிராகரித்தனர்.
இஸ்ரேல் நாடு எப்பொழு உருவாக்கப்பட்டது?
1947 இல் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பிரிவினையை முன்மொழிந்தது. இதில் மும்முனைப் பிரிவு குறித்து திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது ஜெருசலேமை சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதேசமயம், யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் தனி நாடுகளை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது. இம்முறையும் யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் அரபுத் தலைவர்கள் அதை எதிர்த்தனர். 1948ல் மே 14 அன்று இஸ்ரேல் நாடு (State of Israel Declare) உருவாக்கப்பட்டது.
பாலஸ்தீன் இஸ்ரேல் முதல் போர் எப்பொழுது, எதனால் தொடங்கியது?
இஸ்ரேல் 1948 மே 14 அன்று உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டவுடன் முதல் அரபு-இஸ்ரேல் போர் தொடங்கியது. ஒரு வருட காலப் போருக்குப் பிறகு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
1967-ம் ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் திருப்புமுனையாகும். 1967ல் ஆறு நாட்கள் போர் நடந்தது. இந்த ஆறு நாள் போரில், எகிப்து மற்றும் சிரியாவின் வான்படைகளை இஸ்ரேல் தாக்கியது.
இந்தப் போரில் சினாய் தீபகற்பம், காசா பகுதி, மேற்குக் கரை, ஜெருசலேம் மற்றும் கோலன் குன்றுகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இந்தப் போருக்கு முன், எகிப்து காசா பகுதியையும், ஜோர்டான் மேற்குக் கரையையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
இந்தப் போருக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதில் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறும் என்று அறிவிக்கப்பட்டது.
1964 இல் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO), எப்போதும் இரு நாடுகளின் தீர்வை எதிர்த்தது. இருப்பினும், 1970களின் மத்தியில் பிஎல்ஓ தனது ஆதரவை தெரிவித்தது.
1976 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இரு நாடுகளின் தீர்வுக்கான மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது 1967க்கு முந்தைய எல்லைக் கோட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் வீட்டோவைப் பயன்படுத்தி அமெரிக்கா அதை கைவிட்டது. இந்த தீர்மானம் இரு மாநில தீர்வை ஆதரித்தது. மேலும் அனைத்து நாடுகளும் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறியது.
ஏன் இன்னும் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை?
-- எல்லை: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான எல்லை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 1967 அரபு-இஸ்ரேல் போருக்கு முந்தைய கோடு எல்லையாகக் கருதப்பட வேண்டும் என்று பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். எனினும், இஸ்ரேல் இதற்கு ஆதரவாக இல்லை.
-- ராணுவ கட்டுப்பாடு: இஸ்ரேல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குக் கரை, காசா பகுதி, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை தனது ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து வைத்திருக்கிறது. சர்வதேச சட்ட விதிகளின் படி மேற்குக் கரை, காசா பகுதி இரண்டுமே பாலஸ்தீனய மக்களுக்கு சொந்தமானவை.
-- ஜெருசலேம்: இருவரும் ஜெருசலேமைத் தங்கள் தலைநகரமாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இஸ்ரேல் அதை தனது அதிகாரப்பூர்வ தலைநகராகவும் அறிவித்தது. ஜெருசலேம் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கான மத மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மையமாகும். இது மட்டுமின்றி, ஜெருசலேமில் இஸ்ரேல் பல உள்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளதால், இங்கு அது வலுப்பெற்றுள்ளது.
-- அகதிகள்: 1948ல் நடந்த முதல் அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு, லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தப்பி ஓடினர். அவர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இருநாடுகளுக்கும் எல்லைகள் வகுக்கப்பட்டு, அவர்களை மீண்டும் பாலஸ்தீனத்தில் குடியமர்த்தப்பட்டால், பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை அதிகமாகும், மறுபுறம் யூதர்களின் விகிதம் குறையும்.
மேலும் படிக்க - 5000 ராக்கெட்டுகள் தாக்குதல்... போரை அறிவித்தது இஸ்ரேல் - அடுத்தது என்ன?
பாலஸ்தீன் நாட்டை ஆக்கிரமித்து இரு நாடுகள் தீர்வு?
மே 14, 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து இங்கு பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளின் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று நிலைமை மிகவும் மாறுபட்டதாக இருந்திருக்கும்.
இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே நிலையான எல்லை கிடையாது
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நிலையான எல்லை இல்லை என்பதுதான் இப்போதைய பிரச்சனை. பாலஸ்தீனமும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மேற்குக் கரை, மற்றொன்று காசா பகுதி. மேற்குக் கரையானது மஹ்மூத் அப்பாஸ் ஃபதாவின் அரசியல் கட்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதேசமயம், காஸா பகுதியில் இஸ்லாமிய போராளி அமைப்பான ஹமாஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சர்வதேச அளவில் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிப்பு
தற்போது இஸ்ரேல் தனி நாடாக இருந்தாலும் பாலஸ்தீனம் தனி நாடாக இல்லை. 1948 இல் உருவாக்கப்பட்ட இஸ்ரேல், அடுத்த ஆண்டே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. இஸ்ரேல் மே 11, 1949 முதல் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ளது. இதைத் தவிர பாலஸ்தீனம் இன்னும் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.
ஜெருசலேமை கைப்பற்றிய இஸ்ரேல்
பாலஸ்தீனம் ஜெருசலேமை தனது தலைநகராக உரிமை கொண்டாடுகிறது. அதேசமயம், 1967ல், ஆறு நாள் போரில் ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. அதை தனது தலைநகராக அறிவித்தார்.
இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்திருந்தாலும். ஆனால் இன்னும் பெரும்பாலான நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவில்லை.
மேலும் படிக்க - இஸ்ரேலில் ஹமாஸ் படை தாக்குதல்: தொடர்ந்து அதிகரிக்கும் உயிர் பலி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ