கொரோனா COVID-19 பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் ₹87,422 கோடி மட்டுமே கிடைத்துள்ளது என நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் மத்திய ஜிஎஸ்டி (CGST ) ₹16,147 கோடி, மாநில ஜிஎஸ்டி (SGST) ₹21,418 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) ₹42,592 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இறக்குமதி மூலம் வசூலான ₹20,324 கோடி அடங்கும். இதுபோல் மற்றும் செஸ் வரி ₹7,265 வசூலாகியுள்ளது.
இதில் இறக்குமதி வரியாக வசூலிக்கப்பட்ட ₹807 கோடி அடங்கும் என அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | விற்பனை சரிந்தாலும் இனி ஏற்றம் தான்... சமூக இடைவெளியை நம்பும் வாகன நிறுவனங்கள்
ஜிஎஸ்டியின் மாத சராசரி வருவாய் ₹1 லட்சம் கோடிக்குமேல் இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. கடந்த நிதியாண்டில் இந்த சராசரி இலக்கு எட்டப்படாததால், கடைசி காலாண்டில் இலக்கை உயர்த்தியது. ஆனால், எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ₹1.02 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூலை மாதத்தில் வசூல்ஆன ஜிஎஸ்டி மிகவும் குறைவுதான். இதுபோல் கடந்த ஜூன் மாதத்திலும் ஜிஎஸ்டி வருவாய் குறைந்தது. அதாவது, ₹90,917 கோடி மட்டுமே வசூல் ஆனது.
இதில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ₹ 23,320 கோடி, மாநில ஜிஎஸ்டிக்கு ₹ 18,838 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஜூலை மாதத்துடன் சேர்த்து மத்திய மாநில அரசுகளுக்கு மத்திய ஜிஎஸ்டி ₹ 39,467 கோடி, மாநில ஜிஎஸ்டி ₹ 40,256 கோடி ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலான தொகையுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் 86 சதவீதம் வசூலாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி ₹90,917 கோடி வசூலானது. இதுவும் முந்தைய ஆண்டை விட குறைவுதான்.
ALSO READ | அரசின் கனவுத் திட்டத்தில் இணைய வரிசை கட்டும் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள்..!!
கொரோனா COVID-19 பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மீதான வாட் வரிகள், கலால் வரிகள் உயர்த்தப்பட்டன. இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு வரி வருவாய் கிடைக்கவில்லை.
ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, மாநில அரசுகளுக்கு வரி வருவாய் குறைந்தால் இழப்பீடு வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து குறைந்து வருவது இழப்பீடு வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.