விற்பனை சரிந்தாலும் இனி ஏற்றம் தான்... சமூக இடைவெளியை நம்பும் வாகன நிறுவனங்கள்

காற்றுமாசுவை குறைக்க வாகனங்களின் தரநிலையை பிஎஸ்4ல் இருந்து  பிஎஸ்6க்கு மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்ததால் நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்தன.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 1, 2020, 05:11 PM IST
விற்பனை  சரிந்தாலும் இனி ஏற்றம் தான்... சமூக இடைவெளியை நம்பும் வாகன நிறுவனங்கள்

விற்பனை தற்போது சரிந்தாலும் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்ற நிலை உள்ளதால், இனி வாகன் விற்பனை அதிகரிக்கும் என வாகன நிறுவனங்கள் நம்புகின்றன.

வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. காற்றுமாசுவை குறைக்க வாகனங்களின் தரநிலையை பிஎஸ்4ல் இருந்து  பிஎஸ்6க்கு மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கேற்ப நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்தன. எனவே, புதிய மாடல்களை வாங்க விரும்பிய வாடிக்கையாளர்கள், வாகனங்கள் வாங்கும் தங்கள் முடிவை ஒத்தி வைத்தனர். இதுமட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் வாகன விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது. 

 நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனை ஆட்டோமொபைல் துறைக்கு பேரிடியாகவே அமைந்து விட்டது. தேவை குறைந்ததால் வாகன விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், விவசாயம் கைகொடுத்ததால், டிராக்டர்களுக்கு ஓரளவு தேவை ஏற்பட்டது.

இந்நிலையில் ஜூலை மாதத்துக்கான விற்பனை விவரங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதன்படி, நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஜூலையில் 1,08,064 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

ALSO READ |  ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிதான சில படிகளில் செய்து முடிக்கலாம்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒட்டு மொத்த அளவில் இது 1.1 சதவீதம் சரிவு. இருப்பினும், உள்நாட்டு வாகன விற்பனை 1.3 சதவீதம் அதிகரித்து 1,01,307 ஆக உள்ளது. சிறிய ரக கார்கள் விற்பை 49.1 சதவீதம் உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில், காம்பாக்ட் கார்கள் மற்றும் செடான் கார்கள் விற்பனையில் சற்று  சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதியும் 27 சதவீதம் குறைந்துள்ளது.

 ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த ஜூலையில் 38,200 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை 2.07 சதவீதம் சரிவு. ஆனால், கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 79.14 சதவீதம் அதிகரித்துள்ளது. 

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஜூலையில் 5,386 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 48.32 சதவீதம் குறைந்துள்ளது. 

இருப்பினும் கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை சீசனை கருத்தில் கொண்ட துவக்கநிலை எஸ்யுவி மாடல்களை இந்த நிறுவனம் களம் இறக்குகிறது.

 இதுபோல், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் 2,105 வாகனங்களை விற்றுள்ளது. 

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை 36 சதவீதம் சரிந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் 25,678 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு வாகன விற்பனை 35 சதவீதம் சரிந்து 24,211 ஆக உள்ளது. ஏற்றுமதி 45 சதவீதம் குறைந்துள்ளது. 

ALSO READ | போக்குவரத்து விதிமீறல்களுக்காக சலானை அதிகரித்த இந்த மாநிலம்....

அதேநேரத்தில், கடந்த ஜூன் மாதத்தை விட வாகன புக்கிங் மற்றும் மாடல்கள் பற்றிய விசாரிப்புகள் நம்பிக்கை அளிப்பதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.

விற்பனை தற்போது சற்று சரிவை சந்தித்திருந்தாலும், எதிர்வரும் காலங்களில் வாகன விற்பனை ஏற்றம் அடையும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. அதோடு பயணிகள் வாகனங்கள், கார்கள் விற்பனை சரிவை சந்தித்தபோதும், டிராக்டர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. 

விவசாயம் ஏற்றம் பெற்றால் ஊரக பகுதிகளில் வாகன விற்பனை அதிகரிக்கும். 
 மேலும், கொரோனா பரவலில் இருந்து காத்துக்கொள்ள சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 

எனவே, சமூக இடைவெளி காரணமாக வாகனங்கள் தேவை அதிகரிக்கும். கார்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களுக்கான தேவையும் அபரிமிதமாக உயரும். கடந்த ஆண்டை விட விற்பனை சரிந்திருந்ததற்கு கொரோனா ஊரடங்கு முக்கிய காரணமாக அமைந்த விட்டது. 

ALSO READ |  ஆன்லைனில் வீடு! Rental Housingக்கு 100 % FDI ஐ அரசாங்கம் விரைவில் அனுமதிக்கும்

ஆனால், கடந்த மாத விற்பனை அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சற்று ஏற்றம் பெற்றுள்ளது. எனவே, பொருளாதார ஏற்றத்துக்கு ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு கணிசமானதாக இருக்கும் என ஆட்டோமொபைல் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.