சாதிய கொடுமைகள் பற்றி தமிழில் வெளிவந்த திரைப்படங்கள்..!

Tamil Movies Based on Caste Oppression: தமிழில் சாதிய கொடுமைகள் பற்றி வெளிவந்த படங்களை இங்கு பார்க்கலாம். இவை சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா..?   

Written by - Yuvashree | Last Updated : Aug 12, 2023, 12:53 PM IST
  • தமிழில் சாதிய அடக்குமுறைகள் குறித்து பல படங்கள் வந்துள்ளன.
  • பரியேறும் பெருமாள் முதல் ஜெய் பீம் வரை..
  • முழு லிஸ்ட் இங்கே...!
சாதிய கொடுமைகள் பற்றி தமிழில் வெளிவந்த திரைப்படங்கள்..!  title=

கோலிவுட் சினிமாவை பொறுத்தவரை, பலதரப்பட்ட இயக்குநர்கள் அனைத்து தலைமுறைகளிலும் வந்து காெண்டே இருக்கின்றனர். சுமார் 20-25 வருடங்களுக்கு முன்னர் வரை, “சாதியை கதை வழியே திணிக்கிறோம்..” என்று தெரியாமலேயே சில இயக்குநர்கள் படங்களை இயக்கி வந்தனர். ஆனால் இந்த தலைமுறை இயக்குநர்கள் அதற்கு அப்படியே மாற்றாக “சாதி என்றால் கெட்ட பெயர்” எனும் வகையில் படங்களை இயக்கி வருகின்றனர். குறிப்பாக கடந்த 5 வருடங்களில் சாதி கொடுமைகள் குறித்து பல படங்கள் வெளிவந்து விட்டன. அவை என்னென்ன படங்கள் என்பதையும் அவை மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் பார்ப்போம். 

பரியேறும் பெருமாள்:

தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ்ஜின் முதல் படம், பரியேறும் பெருமாள். பட்டியலின சாதியை சேர்ந்த பரியேறும் பெருமாள், சாதிய அடக்கு முறைகளால் பாதிக்கப்படுவோருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு சட்டம் பயிலும் கதை இது. ஆனால் படிக்கும் இடம், நடக்கும் இடம் என அவன் எங்கு சென்றாலும் சாதிய அடக்குமுறைகள் அவனை விடாமல் துரத்துகிறது. இந்த படத்தில் மாரி செல்வராஜ் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் பல காட்சிகளை இணைத்திருப்பார். படம் பார்த்த பலர், இந்த படத்தை மீண்டும் பார்க்க தைரியமில்லை என்றும் கூறுவதுண்டு. க்ளைமேக்ஸ் காட்சியில் நாயகனான பரியன் பேசும் டைலாக் இன்றும் பலரது மனதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “நீங்க நீங்களாக இருக்கும் வரை..நான் நானாக இருக்கும் வரை..இந்த சாதியையும் அடக்குமுறைகளையும் யாராலும் மாற்ற முடியாது..” என்று கூறுவார். இந்த உண்மை இன்றளவும் பலருக்கு உறைத்துக்கொண்டு இருக்கிறது. இப்படம், கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. 

மேலும் படிக்க | பிரபல நடிகைக்கு ஆறு மாதம் சிறை தண்டனை-5 ஆயிரம் ரூபாய் அபராதம்! என்ன காரணம்..?

காலா:

மும்பையில் உள்ள தாராவி பகுதியில் வாழும் மக்கள் அடிப்படை வசதிகளுக்காக படும் அவதியை காண்பித்த படம், காலா. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தன் பகுதி மக்களுக்காக போராடும் கதாப்பாத்திரமாக காலாவின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கும். கடைசியில், காலாவை அழித்து விட்டதாக அந்த பகுதிக்குள் வரும் வில்லனையும் விரட்டி ஓட வைக்கும் அளவிற்கு காலா செய்த சம்பவங்கள் அவரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இப்படம், ரஜினி வழக்கமாக நடிக்கும் படங்களில் இருந்து முற்றிலும் வேறாக பார்க்கப்பட்டது. 

அசுரன்:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த படம், அசுரன். தன் குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக தனக்குள் இருந்த அசுரனை அடக்கி வாழும் சிவசாமியாக வாழந்திருப்பார் தனுஷ். ஒரு கட்டத்தில் சாதியால் தன் மகனையே இழந்த நிலையில்தான் இவருக்குள் இருக்கும் அந்த இன்னொரு முகமே வெளியில் வரும். “படி சிதம்பரம்..படிப்ப மட்டும் நம்ப கிட்ட இருந்து யாராலையும் எடுத்துக்க முடியாது..” என்று பேசிவிட்டு கடைசியில் சிவசாமி ஜெயிலுக்கு செல்லும் காட்சி ரசிகர்களின் கண்களுக்குள் இன்னும் நிற்கிறது. புனையப்பட்ட கதை என்றாலும், படத்தில் சாதி தலைவிரித்து ஆடினால் என்னவெல்லாம் நேரும் என்பதை மக்களின் மனங்களில் அழுத்தமாக பதியும் வகையில் காண்பித்திருப்பார் வெற்றிமாறன். 

கர்ணன்:

மாரி செல்ராஜ் படம் என்றாலே அதில் கண்டிப்பாக சாதிய ஒடுக்குமுறைகள் குறித்த டச் இருக்கும். ஒரு கிராமமே தங்களது பகுதிக்கும் பேருந்து நிறுத்தம் வேண்டும் என்று போராடுதில் இருந்து படம் ஆரம்பிக்கும். இதில், சாதியினரின் அடக்குமுறைகள் மட்டுமல்லாது, சாதி வெறிப்பிடித்த அரசு அதிகாரிகள் அதிகாரத்தில் இருந்தால் என்னென்ன நேரும் என்பதை காண்பித்திருப்பார் மாரி. இதிலும் நடிகர் தனுஷ்தான் ஹீரோ. கடைசியில் “பொறுத்தது போதும் பொங்கியெழு..” என்பது போல ஒரு கிராமமே ஒன்று திரண்டு பாேருக்கு தயாராவது அவர்கள் எந்த அளவிற்கு பொறுமையை இழந்திருப்பர் என்பதை எடுத்தியம்பியிருந்தது. மனதை கனக்க வைக்கும் காட்சிகளை ரசிகர்களின் இதயங்களில் தைத்திருப்பார் மாரி செல்வராஜ்.

ஜெய் பீம்:

சூர்யா நடிப்பில் வெளியாகி தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படம், ஜெய்பீம். சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருப்பர். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் அரசு அதிகாரிகளாலும், சாதிய அடக்குமுறை செய்பவர்களாலும் என்னென்ன வகையிலான கொடுமைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை இப்படம் காண்பித்திருந்தனர். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கியிருந்தார். சினிமாவில் புரட்சி மிகு இயக்குநராக வர வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்களுக்கு தூண்டுகோளாக இருககும் படம் இது. 

மாமன்னன்:

மாரி செல்வராஜ்ஜின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மக்களை திரும்பி பார்க்க வைத்த படம், மாமன்னன். நகைச்சுவை நடிகர் வடிவேலு, மாமன்னனாக இதுவரை நடித்திராத புதிய பரிமாணத்தில் வந்தார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தில் மேல் சாதியை சேர்ந்தவராக ரத்ன வேலு என்ற கதாப்பாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருந்தார். தற்போது நாங்குநேரி பகுதியில் சாதி பிரச்சனையினால் ஒரு மாணவனை வீடு புகுந்து வெட்டியுள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலர், “மாரி செல்வராஜ் அவர் படங்களில் உண்மையைத்தான் கூறி வருகிறார்..” என்று தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி சம்பவம்..! கொதித்தெழுந்த சினிமா பிரபலங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News