சாலை பாதுகாப்பு உலக தொடரின் இரண்டாவது சீசன் இந்தியாவின் 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.
நடப்பு சாம்பியனான இந்தியா இத்தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய லெஜண்ட் - ஆஸ்திரேலிய லெஜண்ட் அணிகள் நேற்று (செப். 28) மோதின. சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் உள்ள சாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்தபோது, மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர், தொடர் மழை மற்றும் மைதானத்தில் நீர் தேங்கிய காரணங்களால், போட்டி செப். 30ஆம் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, நாளை மதியம் 3.30 மணிக்கு, போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பென் டன்க் 46 ரன்களை அடித்தார். 26 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய பந்துவீச்சை சிதறடித்திருந்தார். அப்போது, அபிமன்யூ மிதுன் வீசிய 16ஆவது ஓவரின் கடைசி பந்தில், டன்க் கட் ஷாட் ஆடினார்.
பந்து பவுண்டரியை நோக்கி ராக்கெட் வேகத்தில் பறந்த நிலையில், அதை சுரேஷ் ரெய்னா தனது இடது புறத்தில் அபாரமாக டைவ் அடித்து அந்த கேட்சை பிடித்தார். ரெய்னாவின் நேரடி ரன்-அவுட், ஸ்லிப் கேட்ச், டைவ் கேட்ச் ஆகியவற்றை கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாள்களாக காணவில்லை என்பதால், ரெய்னாவின் நேற்றைய கேட்ச் பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
What a dive. What a catch @ImRaina you beauty
Dekhte rahiye @India__Legends vs @aussie_legends in the #RoadSafetyWorldSeries now, only on @Colors_Cineplex, @justvoot, Colors Cineplex Superhits and @Sports18. pic.twitter.com/gXMHxd1KTy
— Colors Cineplex (@Colors_Cineplex) September 28, 2022
தற்போது, அந்த வீடியோவும் ட்வீட்டரில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரெய்னா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த செப். 6ஆம் தேதி அறிவித்திருந்தார். முன்னதாக, 2020ஆம் ஆண்டு, ஆக.15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் அறிவித்திருந்தார். அதே நாளில்தான், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் தனது ஓய்வை அறிவித்தார்.
பீல்டிங்கிற்கு பேர் போன ரெய்னா, 332 சர்வதேச போட்டிகளில் விளையாடி, மொத்தம் 167 கேட்ச்களை பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் 205 போட்டிகளில் விளையாடி 109 கேட்ச்களை பிடித்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் அல்லாத ஒருவர் 100-க்கும் மேற்பட்ட கேட்ச்களை பிடித்தவர் சுரேஷ் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | INDvsSA: கூட்டணி போட்டு தென்னாப்பிரிக்காவை காலி செய்த அர்ஷ்தீப் - சாஹர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ