AI தொழில்நுட்பத்தால் இவ்வளவு பிரச்சனையா? பக்காவா பிளான் பண்ணி அடிக்கும் குயுக்தி நுட்பம்!

False Propaganda By AI Technology : AI தொழில்நுட்பத்தால் இயங்கும் 'செய்தி' தளங்களால் இணையம் நிரம்பி வழிகிறது என்றும் பொய்யான தகவல்கள் செயற்கை நுண்ணறிவால் பரப்பப்படுவதாக அதிர்ச்சித் தகவல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 11, 2024, 02:56 PM IST
  • செயற்கை நுண்ணறிவின் தாக்கம்
  • தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ தொழில்நுட்பம்
  • செயற்கை நுண்ணறிவால் பரப்பப்படும் போலி செய்திகள்
AI தொழில்நுட்பத்தால் இவ்வளவு பிரச்சனையா? பக்காவா பிளான் பண்ணி அடிக்கும் குயுக்தி நுட்பம்! title=

போலி செய்தி தளங்களை அதிகரிக்கும் ஏஐ தொழில்நுட்பம்! எச்சரிக்கையும் இல்லாவிட்டால் ஏமாறும் வாய்ப்புகள் அதிகம்... இது வாசகர்களுக்கும் பொதுமக்களுக்குமான சிக்கலாக மட்டுமல்ல, வர்த்தகரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கவலைகள் பெருகுகின்றன.

AI தொழில்நுட்பத்தால் இயங்கும் 'செய்தி' தளங்களால் இணையம் நிரம்பி வழிகிறது என்றும் பொய்யான தகவல்கள் செயற்கை நுண்ணறிவால் பரப்பப்படுவதாகவும் அறிக்கை ஒன்று எச்சரிக்கிறது. 

AI கருவிகள், செய்திகளின் உள்ளடக்கத்தை தயாரிப்பதற்கு மலிவான மற்றும் வேகமான வழியாக மாறிக் கொண்டிருக்கிறது. அதிலும், இந்த 2024ம் ஆண்டில் அமெரிக்கா, இந்தியா என பல நாடுகளில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மக்களை திசைதிருப்ப ப்ராக்ஸிகள் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள மோசடி செய்பவர்களும், பிரச்சாரகர்களும் போலி செய்தி தளங்களை உருவாக்க AI கருவிகளை பயன்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். AI கருவிகள் மூலம் செய்திகளை உருவாக்குவதும் பரப்புவதும் சுலபமாக உள்ளது. 

'மனநல மருத்துவர்' தற்கொலை
செயற்கை தொழில்நுட்பம் செய்தித் துறையில் செய்யும் சேட்டைகளுக்கு மிகப் பெரிய உதாரணம் ஒன்றை சொல்லலாம். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மனநல மருத்துவர் "தற்கொலை" செய்துக் கொண்டதாக, குளோபல் வில்லேஜ் ஸ்பேஸ் (Global Village Space) என்ற பாகிஸ்தான் டிஜிட்டல் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி அது இணையத்தில் வைரலானது.

நவம்பம் மாதம் வெளியான இந்தக் கட்டுரையில், தன்னுடைய தற்கொலைக்கு நெதன்யாகு காரணம் என ‘மனநல மருத்துவர்’ தற்கொலைக் குறிப்பில் குற்றம் சாட்டியதாக செய்தி தெரிவித்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் வைரலானது.

மேலும் படிக்க | ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ.. பதறிப்போன பாலிவுட், பாடாய் படுத்தும் Deep Fake

தவறான தகவல்கள், போலிச் செய்திகளைக் கண்காணிக்கும் நியூஸ்கார்ட் (NewsGuard) என்ற அமைப்பு, சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த செய்தியை ஆராயந்தபோது, இது செயற்கை நுண்ணறிவு கருவிகளால் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கம் என்று தெரியவந்தது. உடனடியாக இந்த செய்தி முக்கிய ஆன்லைன் ஆதாரங்களில் இருந்து அகற்றப்பட்டது. 

நியூஸ்கார்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியில், போலிக் கட்டுரைக்கும், 2010 ஆம் ஆண்டு நையாண்டி இணையதளத்தில் ஒரு கற்பனையான கட்டுரைக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டது.

"AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்திகள் மற்றும் தகவல் ஆதாரங்களின் அதிவேக வளர்ச்சி ஆபத்தானது, ஏனெனில் இந்த தளங்கள் சராசரி பயனரால் முறையான, நம்பகமான தகவல் ஆதாரங்களாக உணரப்படலாம்" என்று நியூஸ்கார்ட் ஆய்வாளர் மெக்கென்சி சதேகி தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.  

பிரச்சாரத்தில் ஏஐ தொழில்நுட்பம்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில் நெதன்யாகுவின் மனநல மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டதான போலிக் கட்டுரை வைரலானபோது, ஈரானிய தொலைக்காட்சி சேனல் ஒன்று குளோபல் வில்லேஜ் ஸ்பேஸ் பற்றிய முழுக் கட்டுரையையும் படிக்கும்படி தனது பார்வையாளர்களிடம் கூறும் அளவுக்கு உண்மைச் செய்திக்கும் போலிச் செய்திக்குமான வித்தியாசங்கள் குறைந்துவிட்டது எதிர்காலத்தில் செய்திகளின் நம்பகத்தன்மை தொடர்பான கவலைகளை அதிகரிக்கிறது. 

மேலும் படிக்க | ஜாபர் சாதிக் விவகாரத்தில் திமுக மீது அவதூறு பரப்பினால் வழக்கு - எம்பி வில்சன்

நெதன்யாகுவின் மனநல மருத்துவர் தொடர்பான போலிக் கட்டுரை, அரபு, ஃபார்ஸி மற்றும் பிரஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது என்பதும், பின்னர் சமூக ஊடக தளங்களில் பலரால் பகிரப்பட்டு மேலும் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும், ஒரு சில தளங்கள் கற்பனையான "மனநல மருத்துவரின்" மரணத்திற்கு இரங்கல் செய்திகளையும் வெளியிட்டன.

ஆட்சியை நிர்ணயிக்கும் போக்கு
அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் இந்த ஆண்டில், மோசடி செய்பவர்கள் தவறான தகவல்களைப் பரப்ப AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

"2024 தேர்தல்களில், தானாக உருவாக்கப்படும் தவறான தகவல் தேர்தலில் மக்களின் மனதில் யாருக்கு வாக்களிப்பது என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பகுதியாக இருக்கும்", "மோசடி செய்பவர்கள் AI கருவிகளை தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்துகின்றனர்" என்று நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் கேரி மார்கஸ் தெரிவித்துள்ளார் என AFP தெரிவித்துள்ளது.  

குறைந்தபட்சம் 739 AI-உருவாக்கப்பட்ட செய்தித் தளங்கள் உள்ளன, அவை மனித மேற்பார்வையின்றி செயல்படுகின்றன என்று நியூஸ்கார்ட் (NewsGuard) கூறுகிறது. 

இது மக்களுக்கு மட்டுமல்ல, விளம்பரதாரர்களுக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனெனில் போலிச் செய்திகளுக்கு இடையில் வரும் விளம்பரங்களை பார்ப்பவர்கள், செய்தியின் உள்ளடக்கத்தை விளம்பரங்கள் மறைமுகமாக ஆதரிப்பதாக எண்ணலாம். 

மேலும் படிக்க | பாகிஸ்தானில் பதவியேற்று கொண்ட சீக்கிய அமைச்சர்... யார் அந்த ரமேஷ் சிங் அரோரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News