புதுடெல்லி: ஆயுர்வேதம்  (Ayurveda) என்பது, இந்தியாவின் மரபுவழி மருத்துவ முறை ஆகும். வெளிநாடுகளிலும், மாற்று மருத்துவ முறையாக ஆயுர்வேத சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.  நீண்ட ஆயுளை பெற்று வாழ்வதற்கான வழி முறை என்ற பொருள் கொள்ளும் வகையில் ஆயுர்வேத என்னும் சமஸ்க்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆயுர்வேதம் ஆகும். சமஸ்கிருதத்தில் ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேத என்பது கல்வி தொடர்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து மத நம்பிக்கையின்படி, தேவர்களின் மருத்துவரான தன்வந்திரியின் கொடை ஆயுர்வேதம். தன்வந்திரியே, உடல் மற்றும் மனநலத்துக்கும் இறைவன் என்பது இந்து மத நம்பிக்கை. சரகர், சுஸ்ருதர் மற்றும் வாக்பட்டர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைசிறந்து விளங்கியவர்கள்.


நோயால் அவதியுறும் உயிரினங்களுக்கு மருத்துவம் அளித்து நோய் நீக்கும் ஆயுர்வேத கல்வி பயில்வது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றது மட்டுமல்ல, அவசியமானதும் கூட. உயிரினங்கள் இருக்கும் வரை நோய் ஏற்படுவதும், அதற்கான சிகிச்சை அளிப்பதும் தொடரும் என்பதால், என்றென்றும் பயனுள்ள படிப்புகளில் ஒன்று ஆயுர்வேத படிப்பு.


ஆர்வம் உடையவர்களுக்கு ஆயுர்வேதக் கல்வி நிறைவு தரும் தொழில் வாய்ப்பாகும். கடந்து வரும் காலகட்டத்தில் ஆயுர்வேதக் கல்வி ஏராளமான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. ஆயுர்வேத கல்விக்கு வேலை வாய்ப்பின் அடிப்படையில்   சிறந்த எதிர்காலம் உள்ளது. 


ஆயுர்வேத மருத்துவம் என்பது ஒரு தொழில் என்பதை விட சேவை என்றே கூறலாம். காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை சந்தித்து வரும் மனிதர்களின் சிக்கல்கள், மருந்து எதிர்ப்புத் திறன், பக்க விளைவுகள், தடுப்பாற்றல் குறைப்பாடுகள் ஆகியவை பல்வேறு புதிய நோய்ப்போக்குகளை உண்டாக்குவதால் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தற்போதைய கொரோனா காலத்தில் ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று அனைவரும் அலைந்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆயுர்வேதத்தின் மகத்துவம் அதிகரித்துள்ளது.


Read Also | Delhi AIIA COVID19 சுகாதார மையத்தில் நோயாளிகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை


ஆயுர்வேதத்தின் முக்கிய சிறப்புக் கல்விப் பிரிவுகள் எட்டு.  அவை:  
சல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு
சாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்
காய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்
பூதவித்யை- மன நலம் பேணுதல்
குமாரப் பிரியா- குழந்தை வளர்ப்பு
அக்தம் – முறிமருந்துகள் அளித்தல்
ரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்
வாஜீகரணம்- புத்துயிர்ப்பு மருத்துவம்


பி.ஏ.எம்.எஸ்., எம்.டி (ஆயு), எம்.எஸ் (ஆயு) பட்டம் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன் டாக்டர் என்று இட்டுப் பயன்படுத்தலாம்.
அடிப்படை ஆயுர்வேதப் படிப்பு இளநிலை ஆயுர்வேத மருத்துவம் & அறுவையியல் ஆகும். இது 5 ½  ஆண்டு படிப்பாகும்.  எம்.டி (ஆயு) அல்லது எம்.எஸ். (ஆயு) ஆகியவை கூடுதலாக நன்மை அளிக்கும்.


5 ½ ஆண்டு இளநிலைப் படிப்பிற்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி 12-ஆம் வகுப்பு அல்லது மாநில அரசுகளாலும் கல்வி வாரியங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட இணையான கல்வி ஆகும். இயற்பியல். வேதியல், உயிரியல் பாடங்களில் மொத்தம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அயல் நாட்டு மாணவர்கள் பல்கலைக் கழகம் அங்கீகரித்துள்ள ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.


மூன்றாண்டு முதுநிலை அளவில் எம்.டி., அல்லது எம்.எஸ்., பட்டம் பெற 22 சிறப்பு துறைகள் உள்ளன. 3-7 ஆண்டுகளுக்குள் முதுநிலை பட்டம் பெற்ற பின் சிறப்புப் பாடத்தில் ஆய்வு செய்து பி.எச்.டி., பட்டமும் பெறலாம்.
பஞ்ச கர்மா, க்‌ஷர்கர்மா, ஆயுர்வேத மருந்தாக்கவியல், த்வக் ரோகா, ஆயுர்வேத உணவியல்,  ஸ்வஸ்தவிருத்தா & யோகா, பிரசுதி மற்றும் ஸ்திரிரோகா, பாலரோகா, ஆயுர்வேதத் தாவர மருந்தியல் & தரப்படுத்தல், மனசீக ஸ்வஸ்த்தய, நேத்ரரோக விஜ்யான், ரசயான் மற்றும் வஜிகரன், ஆயுர்வேத சங்க்யாஹரா, சாயா மற்றும் விக்கிரன் விஜ்யன், மர்மா மற்றும் அஷ்தி சிகித்சா, ரோக நிதன் விதி ஆகியவற்றில் இரண்டாண்டு முதுநிலை பட்டயப் படிப்புகள் 2010-ல் இருந்து நடைமுறையில் உள்ளன.
இந்தப் படிப்புகள் அனைத்தும் இந்திய மருத்துவ மையக் கழகச் சட்டத்தின் படி அமைக்கப்பட்ட குழுவால் முறைப்படுத்தப் படுகின்றன.