இஸ்லாமாபாபாத்: பாகிஸ்தான் கடந்த சில காலமாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து உலக நாடுகளின் விமர்சனத்திற்கு ஆளாகி வருவது அனைவரும் அறிந்ததே. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் கருத்துகளும் தடாலடியாகவே இருக்கும். விமர்சனங்கள் வலுத்த பிறகு அவர் அதிலிருந்து சில சமயங்களில் பின்வாங்குவார், பல சமயங்களில் அமைதிகாப்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அவர் உலகமே தீவிரவாதி என்று கருதும் ஒசாமா பின்லேடனை தியாகி என குறிப்பிட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  


2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு காரணமானவர் ஒசாமா பின்லேடன். சரித்திரத்தில் தீராத வடுவாக பதிந்திருக்கும் அந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருந்தார்.  அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நுழைந்து ஒசாமாவை ஒழித்துக் கட்டியது. 


இந்த சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இது குறித்து கருத்துக் கூறுகையில் ’பாகிஸ்தானுக்குள் நுழைந்து தியாகி ஒசாமா பின்லேடனை கொன்றது அமெரிக்கா’என்று கூறியுள்ளார். உலகின் ஆபத்தான தீவிரவாதிகளில் ஒருவராக கருதப்படும் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலேயே தியாகி என்று அந்நாட்டின் தற்போதைய பிரதமர்  கூறியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


பயங்கரவாத எதிர்ப்புப் போரில் அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்பட்டிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.  மேலும், அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமாவை தாக்கிக் கொன்றபோது பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுதான் பாகிஸ்தானை அனைவரும் எதிர்மறையாக விமர்சிக்கத் தொடங்கியதற்கான தொடக்கப்புள்ளி என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.


Also Read | இங்கிலாந்தின் கால்பந்து மைதானத்தில் 'ஒசாமா பின்லேடன்' தவறை சரிசெய்யும் நிர்வாகம்


அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் பங்கேற்றிருக்கவே கூடாது என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.  


ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோதும் பாகிஸ்தானில்  பரவலான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் பாகிஸ்தான் பங்கேற்கக் கூடாது என்று அப்போதிருந்தே பாகிஸ்தானில் பலதரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.  அதே தொனியை தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளார்.  இம்ரான் கானின் குரலுக்கு எதிரொலி தற்போதே சர்வதேச அளவில் தொடங்கிவிட்டது.


அமெரிக்காவிடம் இருந்து நிதியுதவி பெறும் பாகிஸ்தான் ஐ.நா.சபையில் பல விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Also Read | இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சாதனை நாள் 1983 ஜூன் 25


பாகிஸ்தானுக்கு பல மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா கொடுத்து வரும் நிலையில், ஆயுதப் போராளி குழுக்களுக்கு அந்நாடு புகலிடம் அளித்து வருகிறது` என டிரம்ப் சில ஆண்டுகளுக்கு முன்னரே பாகிஸ்தானுக்கு எதிராக பேசத் தொடங்கிவிட்டார்.


அதுமட்டுமல்ல, ‘நாகரிகம், ஒழுங்கு மற்றும் அமைதி ஆகியவற்றை பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டிய சமயம் இது’ என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக தெரிவித்திருந்தார்.


தற்போது பாகிஸ்தானுக்கு கொடுத்து வரும் நிதியுதவியும் கணிசமாக குறைக்கப்பட்டுவிட்டது.  மிகவும் மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்துக்காக அந்நாடு மிகப்பெரிய விலையை செலுத்த வேண்டியிருக்கலாம்.