இங்கிலாந்தின் கால்பந்து மைதானத்தில் 'ஒசாமா பின்லேடன்' தவறை சரிசெய்யும் நிர்வாகம்

இங்கிலாந்து கால்பந்து மைதானம் ஒன்றில் முன்னாள் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் கட்-அவுட் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2020, 08:41 PM IST
  • இங்கிலாந்தின் ஜூன் 27 ஆம் தேதி எலண்ட் ரோடு ஸ்டேடியத்தில் லீட்ஸ் மற்றும் புல்ஹாம் கால்பந்து கிளப்புகள் இடையே போட்டி நடைபெற உள்ளது
  • அதில் பார்வையாளர் இருக்கையில் ஒசாமா பின்லாடனின் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது
  • கொரோனா பரவலால் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
  • லீட்ஸ் யுனைடெட் கால்பந்து கிளப் ரசிகர்களின் கட்-அவுட்களை மைதானத்தில் வைக்க விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுத்தது
  • ஒரு கட்-அவுட் வைக்க 25 பிரிட்டிஷ் பவுண்டுகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இங்கிலாந்தின் கால்பந்து மைதானத்தில் 'ஒசாமா பின்லேடன்' தவறை சரிசெய்யும் நிர்வாகம் title=

இங்கிலாந்து: புதன்கிழமையன்று இங்கிலாந்து கால்பந்து மைதானம் ஒன்றில் முன்னாள் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் கட்-அவுட் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் ருந்து செயல்பட்டவர் பயங்கரவாதத் தலைவர் ஒசாமா பின்லாடன். பிறகு அவர் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலினால் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.  சமூக விலகல், தனிநபர் இடைவெளி, அடிக்கடி கைகழுவுவது, சானிடைசர் பயன்படுத்துவது, பொது போக்குவரத்து முடக்கம், லாக்டவுன் என கடந்த ஐந்தாறு மாதங்களாக உலகத்தையே வியாபித்திருக்கிறது கொரோனா தொடர்பான அச்சங்களும், அனுமானங்களும். கொரோனா தீவிரத்தின் தன்மையையும், பலி எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு படியாக, ஏற்கனவே திட்டமிடப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில்  ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள்  ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.  நடைபெறும் சில விளையாட்டுப் போட்டிகளும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறுகிறது. 

விளையாட்டுப் போட்டிகளில் ரசிகர்கள் கலந்துக் கொள்ளாவிட்டாலும், அவை நேரடியாக தொலைகாட்சிகளிலும், ஆன்லைன் ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. இதுபோன்ற சமயத்தில், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரசிகர்களின் கட்-அவுட்களை அரங்கத்தில் காலியாக இருக்கும் இருக்கைகளில் வைத்து, ரசிகர்கள் நேரில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் புதன்கிழமையன்று இங்கிலாந்தில் நடந்த ஒரு கால்பந்து போட்டியின் போது முன்னாள் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் கட்-அவுட்டும் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. லீட்ஸ் யுனைடெட் கால்பந்து கிளப் பார்வையாளர்களுக்கு பதிலாக தங்கள் ரசிகர்களின் கட்-அவுட்களை மைதானத்தில் வைக்க விண்ணப்பிக்கலாம் என்று ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தது, இதற்காக 25 பிரிட்டிஷ் பவுண்டுகள் என்ற கட்டணம் வசூலிக்கப்படும்.  

ஒரு கால்பந்து ரசிகர் ஒசாமா பின்லேடனின் படத்தை இந்த கிளப்புக்கு அனுப்பி கட்டணமும் செலுத்தி விட்டார். விஷயத்தின் விபரீதத்தை உணராத அமைப்பாளர்கள் கட்டணம் செலுத்தப்பட்ட கட்-அவுட்டை பார்வையாளர்களின் இருக்கையில் வைத்தனர். ஜூன் 27 ஆம் தேதி எலண்ட் ரோடு ஸ்டேடியத்தில் லீட்ஸ் மற்றும் புல்ஹாம் கால்பந்து கிளப்புகள் இடையே போட்டி நடைபெற உள்ளது. பல ட்விட்டர் பயனர்கள் கிளப்பின் இந்த தவறை சுட்டிக் காட்டி, '2020 ஆம் ஆண்டில் வேறு என்ன எதிர்பார்க்கலாம்?' என்று கேள்விக்கணைகளை தொடுக்கின்றனர்.

வீ ஆல் லவ் லீட்ஸ் (We All Love Leeds) என்ற ஒரு பயனர், 'நன்றி லீட்ஸ் யுனைடெட் கால்பந்து கிளப், நான் பின்லாடனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறேன்' என்று நக்கலான பதிவை பதிவிட்டிருக்கிறார்.

எலியட் ஹாக்னி என்பவர் தனது ட்வீட்டர் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்: "ஒசாமா பின்லாடனை லீட்ஸ் கிளப்பின் பார்வையாளர்களிடையே வைத்திருக்க கட்டணம் செலுத்தியவர் மிகப்பெரிய முயற்சியை செய்திருக்கிறார்".

'பின்லேடன் ஏன் தற்போது பிரபலமாக டிரெண்டில் இருக்கிறார் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன், இந்த கட்அவுட்டைப் பார்த்தேன், அது விரும்பத்தகாதது தான். பொறுப்பானவர்களிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டு, தவறு சரி செய்யப்பட்டுவிடலாம், ஆனால் என்னால் சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை’ என்று மற்றொரு பயனர் எழுதியிருக்கிறார். 

சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த பிறகு, கால்பந்து கிளப் பின்லாடனின் கட்-அவுட்டை நீக்கியுள்ளது. ரசிகர்கள் அனுப்பும் படங்களும், கட்-அவுட்களும் முழுமையாக ஆராயப்படும் என்றும், இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய படங்கள் அரங்கத்தில் வைக்கப்படமாட்டாது என்றும் லீட்ஸ் யுனைடெட் கிளப் உறுதியளித்துள்ளது.

Trending News