தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ குழு அடங்கிய நடமாடும் வாகனங்களின் சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். மேலும் 2,000 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் சார்பில் வழங்கினார்.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்.... நெருக்கடியான காலத்தில் ஆர்வத்துடன் பணிக்கு வந்துள்ள மருத்துவர்களுக்கு பாராட்டுகள். சென்னையில் சிகிச்சை அளிக்க கூடுதல் சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்தியுள்ளோர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 2,000 செவிலியர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு பணி நியமன ஆணை பெற்ற 2000 செவிலியர்கள் இன்று பணியில் சேருகின்றனர். சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது.


கூடுதல் ஆம்புலன்கள் சென்னையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்களுடன் 254 வாகனங்கள் சென்னை மாநகராட்சியில் பணியில் உள்ளன. அரசு இயந்திரம் இரவு, பகல் பாராமல், ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளிலேயே தொற்று ஏற்பட்டாலும், தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பது பெரிய செய்தி அல்ல, அதையும் தாண்டி களத்தில் பணியாற்றுவதுதான் செய்தி. தமிழகத்தில் சோதனை அதிகரிப்பதால் அதிக கொரோனா பாதிப்பை கண்டறிய முடிகிறது. தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரத்தைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது. 


READ | ICMR-ன் சமீபத்திய ஆன்டிபாடி சோதனை முடிவுகளுக்குப் பின் உள்ள முக்கிய தகவல்...


சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஸ்டான்லி மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் வரதராஜன் தனது செயலுக்கு தொலைபேசி மூலம் வருத்தம் தெரிவித்தார். முன்னதாக புதிதாக பணியில் சேர்ந்த செவிலியர்களை வாழ்த்தி, பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர். உடன் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தார்.