COVID-19: மற்ற நாடுகளை விட இந்தியா உண்மையில் ‘சிறப்பாக’ செயல்படுகிறதா?
மத்திய அரசு வேண்டுமென்றே சில தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளை வைத்து சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் COVID-19 பாதிப்பு அதிகரிப்பை மறுப்பதுடன், லாக்டவுனை வெற்றிகரமாகப் பாராட்டுகிறது
புதுதில்லி: எல்லாவற்றிற்கும் "சான்றுகள்" உள்ளன. இந்திய அரசின் குறிக்கோள் தான் என்ன? மத்திய அரசு வேண்டுமென்றே சில தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளை வைத்து சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் COVID-19 பாதிப்பு அதிகரிப்பை மறுப்பதுடன், லாக்டவுனை வெற்றிகரமாகப் பாராட்டுகிறது
ஆதாரங்களை மறைப்பதும், சிரமமான தரவுகளை புறக்கணிப்பதும் சமீபத்திய முயற்சியாக உள்ளது. சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால், "உலகின் மிகக் குறைந்த COVID-19 இறப்பு விகிதங்கள் வரிசையில் இந்தியா உள்ளது" என்று கூறினார்.
செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், "ஒரு லட்சம் பேரில் நோய் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை என்ற விகிதம் (ஸ்பெயின், பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவை விடக் குறைவானது) இந்தியாவில் குறைவாக உள்ளது" மற்றும் "இந்தியாவில் கொரொனா பரவலுக்கு சாத்தியமான நிலையையும், மக்கள் தொகையையும் கருத்தில் கொண்டால் இது குறிப்பிடத்தக்க அளவில் குறைவானதாகும்" என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் மத்திய அரசுக்கு தோல்வி ஏன்!! விரிவான பார்வை
சில நாடுகளின் சான்றுகளை மட்டும் வைத்து, கவலைப்பட ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்க முயற்சிக்கிறது அரசு. இந்த அறிவிப்புக்களின் நம்பகத்தன்மையை ஆராயும்போது, நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை மற்றும் பல நாடுகளின் இறப்பு விகிதங்கள் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆகவே தான் உலகின் 171 நாடுகளின் COVID-19 உடனான போராட்டம் எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள ஒரு விரிவான தரவுத்தளத்தை நாம் பார்க்க வேண்டும்.
மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த அட்டவணையை வரிசைப்படுத்தினால், துருக்கி, பிரான்ஸ், ஈரான், பெரு மற்றும் கனடாவை விட பின் தங்கி, இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது என்பதை பார்க்க முடிகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் COVID-19 இன் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மாத லாக்டவுனிற்கு பின்னரும் அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க: தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்கு சட்ட வாரிசுகள்: நீதிமன்ற அறிவிப்பு
தற்போதுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையைப் பார்த்து பிற நாடுகளில் COVID-19 இன் நிலையைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடியும். அதிக பாதிப்பு உள்ள மக்கள் அதிகமான அளவில் சிகிச்சைக்காக வருகிறார்கள். இது வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிகமாக உள்ளனர் என்பதற்கான சான்றாகும். பாதிப்பு ஏற்பட்ட மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அட்டவணையை வரிசைப்படுத்தினால், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகியவற்றிற்குக் கீழே இந்தியா 5வது இடத்தில் தான் உள்ளது.
இங்கே தரவுகளில் ஒரு முக்கியமான விஷயம் இரட்டிப்பாவது தான். மொத்த உறுதிப் படுத்தப்பட்ட பாதிப்புகள் இருமடங்காக எத்தனை நாட்கள் ஆகும் என்பதையும் தரவுகள் காட்டுகின்றன மற்றும் COVID-19 இன் வளர்ச்சியை புரிந்து கொள்ள இது உதவுகிறது.
இரட்டிப்பு வீத அட்டவணையில் மேல் வரிசையில் இருக்கும் நாடுகளை விட இந்தியாவில் இரட்டிப்பு வீதம் அதிகம். ஒவ்வொரு 14 நாட்களுக்கும் பாதிப்புகள் இரட்டிப்பாகிறது. ஆனால் அமெரிக்கா (35), ரஷ்யா (20), இங்கிலாந்து (35), ஸ்பெயின் (56), இத்தாலி (55), மற்றும் ஜெர்மனி (54) என்ற கணக்கில் இரட்டிப்பாகின. இதில் ஒரே விதிவிலக்கு பிரேசில் ஆகும். அங்கு 13 நாட்களில் நோய் தொற்று இரட்டிப்பானது.
மேலும் படிக்க: எச்சரிக்கை! உங்கள் வீடும் இப்படி இருந்தால், கொரோனா தொற்றின் அபாயம் ஏற்படும்!!
இதேபோல், மொத்த பாதிப்புகளின் பட்டியலில் கீழ் வரிசையில் உள்ள நாடுகள் கூட, இந்தியாவை விட அதிகமான இரட்டிப்பாகும் நேரத்தைக் கொண்டுள்ளன.
இறப்பு விகிதம் (Fatality rate):
இந்தியாவில் இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது. ஸ்பெயின், பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவை விட இந்தியா நிச்சயமாக குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், மொத்தம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளும், முதல் 20 நாடுகளில், அதாவது ரஷ்யா, துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகளும் இந்தியாவை விட குறைவான இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன என்பது அமைச்சகம் குறிப்பிடவில்லை.
இறப்பு விகிதம் லாக்டவுனின் வெற்றியைக் காண்பிப்பதற்கான ஒரு நல்ல குறிகாட்டியாக இல்லை. ஏனெனில் அரசுகள் சில இறப்புகளைச் சேர்க்காததன் மூலம் எளிதில் தரவுகளை மாற்ற முடியும்.
ஒரு மில்லியன் மக்களுக்கு...:
இந்தியாவின் MoHFW பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அங்கு அவர்கள் இந்தியாவின் பெரிய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, அதாவது ஒரு லட்சம் மக்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகள் இருப்பதை காட்டுகிறார்கள். இந்தத் தரவை முழுமையாகப் புரிந்துகொள்ள, நாடுகளின் சோதனை விகிதங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஒரு நாடு குறைவாக சோதனை செய்தால், ஒரு லட்சத்தின் விகிதத்தில் உள்ள பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே தோன்றும் என்பதும் ஒரு உண்மையாக இருக்கிறது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டிற்கு வந்த வெட்டுக்கிளிகள்!! விவசாயிகள் அச்சம்.. தமிழக அரசு ஆலோசனை
உண்மையில், இந்தியவில் ஒரு லட்சத்தில் 117 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு லட்சதில் 5197 பேருக்கு பாதிப்புகள் மற்றும் இத்தாலியில் ஒரு லட்சத்தில் 3825 பேருக்கு பாதிப்புகள் என்று உள்ளன. இருப்பினும், இந்த எல்லா நாடுகளை விட இந்தியா குறைவான சோதனையே செய்கிறது. அமெரிக்கா 19 முறை சோதனை செய்கிறது. இத்தாலி இந்தியாவை விட 25 மடங்கு அதிக எண்ணிக்கையில் சோதனை செய்கிறது.
84 நாடுகளின் சோதனை தரவுகளின் எண்ணிக்கை அட்டவணையில் இந்தியா 71வது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லட்சத்தில் 2486 பேருக்கு மட்டுமே மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப் படுகிறது. இது கிட்டத்தட்ட பாகிஸ்தானுக்கு சமமாக உள்ளது.
குறைவான பாதிப்பு விகிதம் அல்லது பாதிப்புகள் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு கூட இந்தியாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவின் பல மாநிலங்கள் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்தியாவில் COVID-19 பாதிப்புகளின் தொற்றுநோய் வரைபடம் ஏறுமுகத்தில் உள்ளது. அது குறையவே இல்லை. அதே நேரத்தில் ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, துருக்கி, கனடா, பெல்ஜியம் போன்ற பிற நாடுகளும் வரைபட உயர்வை கட்டுப்படுத்தி உள்ளன. நோய் தொற்றை குறைக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகளை முன்னிலைப் படுத்துவதில் நாமும் கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக தென் கொரியாவைப் பாருங்கள். தற்போது உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கையை வெறும் 735 ஆகக் குறைப்பதன் மூலமும், இரட்டிப்பாக்கும் நேரத்தை 85 நாட்களாக அதிகரிப்பதன் மூலமும், இறப்பு விகிதத்தை 2 ஆகக் குறைப்பதன் மூலமும்தான் தென் கொரியா வரைபடத்தின் ஏறுமுகத்தை கட்டுப்படுத்தியது. அதிக சோதனைகள் செய்து அவர்கள் அடைந்த நிலை அது. ஒரு லட்சத்தில் 16,823 சோதனைகள் செய்யப்பட்டன. இது கிட்டத்தட்ட இந்தியாவை விட ஏழுமடங்கு அதிகம்.
ஒரு நாடு சிறப்பாக செயல்பட்டால் அது இந்த புள்ளிவிவரங்களில் தெரிந்துவிடும். நமக்கு சாதகமானவற்றை மட்டும் பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.
(மொழி பெயர்ப்பு - தெய்வ பிந்தியா.த)