ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மாதவன், அண்ணன் மகன் ஆகியோர் அவருடைய சட்ட வாரிசுகள் என சென்னை உயர் நீதிமன்ற அறிவிப்பு...
சென்னை: அண்மையில் வழங்கப்பட்ட உத்தரவைத் திருத்தி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மாதவன் மற்றும் தீபாவின் சகோதரர் தீபக் ஆகியோரை மறைந்த முதல்வரின் சட்டப்பூர்வ வாரிசுகளாக மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
புதன்கிழமை நீதிமன்றம் இந்து வாரிசு சட்டத்தின் கீழ், அவர்ளை 'கிளாஸ் II" சட்ட வாரிசுகளாக அறிவித்தது. ஜெயலலிதாவின் சொத்துக்களைக் கவனிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று ஒரு அதிமுக செயல்பாட்டாளரின் வேண்டுகோளை நிராகரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றுவதற்கான தனது திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. சமீபத்தில் தான், தமிழக ஆளுநர் ஜெ.ஜெயலலிதாவின் வீடு மற்றும் அசையும் சொத்துக்களை தற்காலிகமாக கையகப்படுத்தும் கட்டளை ஒன்றைப் பற்றி தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவை வரவேற்ற தீபா மாதவன் என்.டி.டி.வி யிடம், "இந்த உத்தரவு செல்லுபடியாகுமா இல்லையா என்பது இப்போது எனக்குத் தெரியவில்லை. அதைப் பொருட்படுத்தாமல் இந்த பிரச்சினைகளை எழுப்பும் ஆளுநருக்கு நான் ஒரு மனுவைக் கொடுக்கவுள்ளேன்." என்று கூறினார்
சிறையில் உள்ள ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஜெயலலிதா இறந்த பிறகு போயஸ் கார்டன் இல்லத்தில் கடைசியாக வசித்தவர். தனது அத்தை தனது சொத்துக்களை யாருக்கும் கொடுத்தததாக எந்த ஒரு ஆவணமும் இல்லை என்று தீபா கூறினார். "இந்த கட்டத்தில் ஏதேனும் உரிமை கோரப்பட்டால், அது போலியானதாகத் தான் இருக்க வேண்டும். அப்படி கோரப்படும் உரிமை ஒரு பதிவு செய்யப்பட்ட உயிலாக இருக்க வேண்டும். அவர் ஒரு முதலமைச்சராக இருந்ததால், எந்த முக்கியமான விஷயத்தையும் தனிப்பட்ட முறையில் செய்திருக்க முடியாது. "
நீதிமன்ற உத்தரவின் ஆதரவுடன், தீபா, 1,000 ஏக்கர் கோடனாட் எஸ்டேட் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மூதாதையர் திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும், அவர்களிடம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் மேலும் கூறுகையில், "அவை பாதுகாக்கப்பட வேண்டும். அவை அழிக்கப்படக் கூடாது. எந்த வெளி ஆளும் சட்டவிரோதமாக அவற்றை ஆக்கிரமிக்க முடியாது." என்று தெரிவித்தார்.
தனது இளமை பருவத்தில் ஜெயலலிதாவுடனான தனது அன்பான உறவுகளைப் பற்றி பேசிய தீபா மாதவன், ஒரு முறை அவரைப் பார்க்கச் சென்றபோது தான் மயக்கமடைந்ததால், ஜெயலலிதா மிகவும் கவலைக் கொண்டார் என்பதை நினைவு கூர்ந்தார். தன் அத்தை மருத்துவர்களை வரவழைத்து தன்னை நன்றாக கவனித்துக்கொண்டதாகவும், அப்போது, ஒரு குடும்பம் என்ற முறையில் அவர்கள் அவருக்கு எத்தனை முக்கியத்துவம் பெற்றுள்ளார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.
ஜெயலலிதா ஏன் அவரது குடும்பத்தை தொலைவிலேயே வைத்திருந்தார், அவர்களை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, "முதலமைச்சராக இருந்தபோதும் எங்கள் அத்தை எங்களை வீட்டிற்கு அழைத்திருக்கிறார். தீபாவளி மற்றும் பொங்கல் நாட்களில் அழைப்பார். ஆனால் அது தனிப்பட்ட முறையில் இருக்கும். நாங்கள் ஒரு குடும்பமாக நேரத்தை செலவிட்டோம். அவர் அச்சத்தின் காரணமாக இவற்றை பொது வாழ்க்கைக்கு முன் கொண்டு வந்ததில்லை" என்று தீபா கூறினார்.
அரசியல் மன்றம் ஒன்றை தொடங்கிய தீபா, விரைவிலேயே அதைக் கலைத்தார். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது, "காலம் மட்டுமே அதற்கு பதில் சொல்ல முடியும்" என்று கூறினார்.
அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஜெயலலிதா நினைவுத் திட்டத்தின் மூலம், கட்சித் தொண்டர்கள், தொடர்ச்சியான மூன்றாவது வெற்றிக்காக உழைக்க மும்முரமாக உள்ளார்கள் என ஆளும் அஇஅதிமுக நம்புகிறது. மக்களவை தேர்தலில், தமிழகத்தைப் பொறுத்த வரை, அஇஅதிமுக படுதோல்வி அடைந்தது. திமுக-காங்கிரஸ் கூட்டணி அந்தத் தேர்தலில் திடமான வெற்றியைப் பெற்றது.
-மொழியாக்கம்: ஸ்ரீப்ரியா சம்பத்குமார்