Karnataka Election 2023: தேர்தல் கணிதத்தை மாற்றக்கூடிய டாப் அம்சங்கள் இவைதான்!!
Karnataka Election 2023: மக்களவைத் தேர்தலுக்கு முன் நடக்கும் இந்த கர்நாடக சட்டசபை தேர்தலின் தாக்கம் நாடு முழுவதும் பெருமளவு இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் நிற்கும் வேட்பாளர்களின் தலைவிதி மக்களால் நிர்ணயிக்கப்படும். இதைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த கட்சி களம் இறங்கி உள்ளது. அதே சமயம், பல நேர்மறை மாறுதல்களுடன் காங்கிரஸ் கட்சி இம்முறை கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு முன் நடக்கும் இந்த கர்நாடக சட்டசபை தேர்தலின் தாக்கம் நாடு முழுவதும் பெருமளவு இருக்கும். இந்த காரணத்தினால்தான் சோனியா காந்தி முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை, அனைத்து கட்சிகளின் மூத்த தலைவர்களும் மாநிலத்தில் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். கர்நாடக தேர்தலில் லிங்காயத் வாக்கு வங்கி, வொக்கலிகா வாக்கு வங்கி, ஆளும் கட்சிக்கு எதிரான அலை உள்ளிட்ட பல விஷயங்கள் முக்கிய காரணிகளாக இருந்துள்ளன. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக அரசியல் நிபுணர்கள் கருதும் விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
லிங்காயத் காரணி
கர்நாடக தேர்தலில் லிங்காயத்துகள் கிங் மேக்கர்களாக உள்ளனர். மாநிலத்தில் அவர்களின் எண்ணிக்கை சுமார் 18 சதவீதம் உள்ளது. சுமார் 50 தொகுதிகளில் இவர்களது நேரடி தாக்கம் உள்ளது. ஆகையால் லிங்காயத் சமூக வாக்காளர்களை கவர பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய மூன்று கட்சிகளும் பிரச்சாரத்தின் போது தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா கட்சிக்கு இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கடந்த காலங்களில் இந்த சமூகத்தின் வாக்குகளை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த முறையும் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா என இந்த சமூகத்தின் இரண்டு பெரிய தலைவர்கள் அவர்களுடன் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த முறையும் பாஜகவுக்கு இந்த சமூகம் ஆதரவு அளித்தால் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.
வொக்கலிகா காரணி
கர்நாடகாவில் வொக்கலிகா சமூகத்தின் மக்கள் தொகை 16 சதவீதம் ஆகும். லிங்காயத் மற்றும் வொக்கலிகா ஆகிய இரு சமூகத்தினரும் நீண்ட காலமாக தேர்தல் போரில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இந்த சமூகத்தின் ஆதரவு பாஜகவுக்கு இல்லை என்று பொதுவாக நம்பப்படுகிறது. அதே சமயம், டி.கே.சிவகுமார் வடிவில் வொக்கலிகா சமூகத்தின் முக்கிய பிரமுகர் காங்கிரஸ் கட்சியிடம் உள்ளார். இவர்களைத் தவிர, வொக்கலிக சமூகத்தின் பல முக்கிய பிரமுகர்களும் காங்கிரசில் உள்ளனர். ஆனால், இச்சமூகத்தின் வாக்கு வங்கியில் ஒரு பகுதியை பா.ஜ.க பெற அமுடிந்தால், அது அவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற மிகப்பெரிய வாய்ப்பை அளிக்கும்.
ஆளும் கட்சிக்கு எதிரான அலை
ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைப் பயன்படுத்திக் கொள்ள, காங்கிரஸ் கட்சி பல சிறப்பான உத்திகளைப் பயன்படுத்தியது. இந்த தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளில் கட்சி மேலிட பிரபலங்களின் முகங்கள் அவ்வளவாக காணப்படவில்லை. கட்சியின் போஸ்டர்களில் உள்ளூர் தலைவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இது தவிர, தேர்தல் பொதுக்கூட்டங்களிலும், பேரணிகளிலும் உள்ளூர் பிரச்னைகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி அதிகம் விவாதித்தது. அதே சமயம் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி கட்டத்தில் பஜ்ரங்பாலி மற்றும் பஜ்ரங்தள் விவகாரத்தை மையமாக வைக்க பாரதிய ஜனதா விரும்பியது. பிரதமர் மோடியும் இந்த விவகாரம் பற்றி வெளிப்படையாகப் பேசியதோடு ஜெய் பஜ்ரங்பலி என்ற கோஷங்களையும் எழுப்பினார்.
பஜ்ரங் தளம் தடை அறிவிப்பு: காங்கிரசுக்கு பலன் அளித்ததா?
தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாட்களில், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளால் பல விவாதங்கள் கிளம்பின. பஜ்ரங் தளம் தடை செய்யப்படுவது குறித்த விஷயத்தை காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறிதிகளில் குறிப்பிட்டிருந்தது. ஆட்சி அமைத்தவுடன் இந்த அமைப்பு தடை செய்யப்படும் என்று அக்கட்சி கூறியிருந்தது. இதை பாஜக பஜ்ரங்பலி அமைப்பின் அவமானமாக காட்டி, மொத்த தேர்தல் பிரச்சாரத்தையும் இந்த திசையில் திருப்பியது.
விவகாரம் கை மீறி போகவே, இது குறித்து பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான காங்கிரஸ் தலைவர்கள், இது தொடர்பான விளக்கங்களை அவ்வப்போது அளித்து வந்தனர். ஆனால், இந்த விவகாரத்தை பாஜக எந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு சென்றது? இதனால் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான தாக்கம் ஏற்படுமா? இவை அனைத்துக்குமான பதில் மே 13-ம் தேதி வரும் தேர்தல் முடிவுகள் மூலம்தான் தெரியவரும்.
ஜேடிஎஸ் கட்சியின் பங்கு
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் மதச்சார்பற்ற கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது. தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சி இந்த தேர்தலில் துருப்பு சீட்டாக கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபையின் பக்கமும் செல்லக்கூடும். இதுபோன்ற சூழ்நிலையில், யார் ஆட்சி அமைப்பது என்பது ஜேடிஎஸ் எந்த கட்சி பக்கம் சாய்கிறது என்பதையும் சார்ந்திருக்கக்கூடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ