தாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்... EVM குளறுபடி - பகீர் சம்பவம்!
Kasaragod EVM Issue: கேரளாவின் காசர்கோடு தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு மட்டும் ஒரு முறை வாக்கு செலுத்தினால், இரண்டு வாக்குகள் பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kasaragod Election Voting Machine Issue: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு இயந்திரங்களை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும்.
கோளாறான வாக்கு இயந்திரம்
தேர்தல் காலம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. பல இடங்களில் பணம், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்படும். தேர்தல் விதிமுறைகள் சார்ந்த வழக்குகள் பதிவாகும். எதிர்க்கட்சிகள் வாக்கு இயந்திரம் குறித்த புகார் எழுப்புவார்கள். இவை ஒவ்வொரு தேர்தல்களிலும் நடைபெறும். குறிப்பாக, வாக்கு இயந்திரங்கள் மீதான சந்தேகங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தாலும் தேர்தல் ஆணையத்தால் அதுபோன்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் மறுக்கப்பட்டு வந்துள்ளன.
மேலும் படிக்க | Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்
அந்த வகையில், இம்முறை வாக்கு இயந்திரம் குறித்து அதிர்ச்சகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நான்கு வாக்கு இயந்திரங்களில் பாஜகவுக்கு வாக்களித்தபோது, ஒருமுறை அழுத்தினால் 2 வாக்குகள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள்
இதை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் இந்த கோளாறு உள்ள வாக்கு இயந்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேரளாவின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராஜ்மோகன் உன்னிதனின் முகவர் முஹம்மது நாசர் செர்களம் அப்துல்லா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.வி. பாலகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரும், காசர்கோடு மாவட்ட தலைவர் இன்பசேகர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் கூறுகையில், காசர்கோடு தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்கு இயந்திரங்களை சோதனை செய்தபோது, பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவாகின. அதுமட்டுமின்றி, வாக்கு இயந்திரங்களில் மற்ற வேட்பாளர்களின் சின்னங்களை விட காங்கிரஸின் கை சின்னம் மிக சின்னதாக இருந்ததாகவும், அதனை மாற்றும்படியும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
1 வாக்குக்கு, 2 ஒப்புகைச்சீட்டு
காசர்கோடு தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நோட்டா சேர்த்து 10 பெயர்கள் இயந்திரங்களில் இடம்பெற்றுள்ளன. அதில் பாஜக வேட்பாளர் முதலில் இடம்பெற்றுள்ளார். முதல் கட்ட மாதிரி வாக்குப்பதிவில் 190 வாக்கு இயந்திரங்களில் சோனதை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சமயத்தில் 20 இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டது. அதில் ஒவ்வொரு ஆப்ஷன்களும் தலா 1 முறை அழுத்தப்பட்டது. அதில் 4 இயந்திரங்களில் பாஜகவின் சின்னத்திற்கு 1 முறை வாக்கு செலுத்தினால், VVPAT இயந்திரத்தில் 2 வாக்குகள் பதிவாகியிருப்பதாக சீட்டுகள் வந்துள்ளன.
அந்த 4 இயந்திரங்களில் மற்ற சின்னங்களில் வாக்களித்தால் சரியாக 1 முறை வாக்கு பதிவாகிறது. இதுகித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், பழுதான இயந்திரங்களில் வந்த VVPAT சீட்டுகளில் "இது எண்ணப்படாது" என அச்சிடப்பட்டு வந்துள்ளது என விளக்கம் அளித்துள்ளனர். வாக்கு எண்ணும் போது குளறுபடிகள் வரும் என்பதால் அந்த இயந்திரங்களை மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளதாக எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாமரை சின்னத்திற்கு மட்டும்...
மேலும், இரண்டு முறை இதேபோல் 2 வாக்குகள் வந்த நிலையில், 3வது முறை சோதிக்கும்போது தானகவே சரியானது. இருப்பினும், அடுத்தடுத்த கட்டங்களில் அது பழுதாகாது என்பதில் எந்த நிச்சயமும் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். மேலும், இது வினோதமான ஒரு விஷயம் என்னவென்றால் காங்கிரஸின் சின்னமோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளின் சின்னமோ மாதிரி வாக்குப்பதிவின்போது அழுத்தப்பட்டால் ஒரு வாக்குதான் பதிவானது. இதே தாமரைக்கு செலுத்தினால் மட்டும் இரண்டு முறை வந்தது, வினோதமாக இருந்து என முஹம்மது நாசர் செர்களம் அப்துல்லா தெரிவித்தார்.
அதிகாரியின் விளக்கம் என்ன?
அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், வாக்கு இயந்திரத்தில் பவர் சப்ளை வந்த உடன் இந்த நான்கு இயந்திரங்களில் இந்த பழுது ஏற்பட்டுள்ளது. எல்லா இயந்திரங்களிலும், முதல் VVPAT சீட்டில் "எண்ணப்படாது" (Not To Be Counted) என அச்சிடப்ப்டு வரும். மேலும், அந்த சிலிப்பில் முதலில் இடம்பெற்றுள்ள வேட்பாளரின் சின்னம் வரும் அவ்வளவுதான். இதுகுறித்து தொழில்நுட்ப பொறியாளர்கள் இதில் தவறு இல்லை என கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுத்துள்ளேன்" என்றார். முதல் இரண்டு முறை அந்த 4 இயந்திரங்களில் பிரச்னை வந்த நிலையில், 3ஆம் முறை அந்த பிரச்னை வரவில்லை. அடுத்து 1000 வாக்குகள் அதில் செலுத்தி சோதித்து பார்த்தபோது கூட பிரச்னை வரவில்லை என கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதுகுறித்து உத்தரவு ஒன்றையும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பித்துள்ளனர். முன்னதாக VVPAT சீட்டை 100 சதவீதமும் எண்ண வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சிவ் கண்ணா, தீபன்கர் தத்தா ஆகியோர் விசாரித்தனர்.
இந்த மனு விசாரணையின் போது, காசர்கோடு வாக்கு இயந்திரங்கள் பழுதான விவகாரம் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதுகுறித்து வாய்மொழியாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்கள். அதில், கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின் போது, வாக்கு இயந்திரங்களில் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக முன்வைக்கப்படும் புகாரை ஆய்வு செய்யும்படி கூறியது.
தொடர்ந்து, VVPAT சீட்டை 100 சதவீதமும் எண்ண வேண்டும் என வழக்கில், மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்து வருகிறார். தற்போது VVPAT சீட்டுகளில் 2 சதவீதம் மட்டுமே எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ