பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள் - கோவையில் பரபரப்பு

Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 18, 2024, 09:21 AM IST
  • ஏப். 19ஆம் தேதியான நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.
  • கோவை நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.
பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள் - கோவையில் பரபரப்பு title=

Coimbatore Latest Updates: மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப். 19) நடைபெறுகிறது. கடைசி கட்டமான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். 

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கும், விளவங்கோடு உள்பட 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. 

ஓய்ந்தது பரப்புரை

மார்ச் 20ஆம் தேதி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். மார்ச் 30ஆம் தேதி இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பரபரப்பான பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கூட்டணிகள் மட்டும் பாஜகவின் கூட்டணியும் இம்முறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

தொடர்ந்து, நேற்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. தொடர்ந்து, இன்று தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டுவார்கள். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்களை அரசியல் கட்சிகள் கொடுப்பதை தவிர்க்க கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில், பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்.. 19ம் தேதி வாக்குப்பதிவு.. “மறக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்”

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவபட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. தகவலை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் பறக்கும் படையினருக்கு அனுப்பப்பட்டது. தகவலின் அடிப்படையில், துணை மாநில வரி அலுவலர் புஷ்பா தேவி, சிறப்பு உதவி ஆய்வாளர் காளீஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர், முத்துக்குமார் ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படை குழு இந்த சோதனையில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டம் பூலுவபட்டி மாரியப்பன் டீக்கடையில் வைத்து வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை நள்ளிரவு பறக்கும் படையினர் பிடித்தனர். தொடர் சோதனையில், ஆலந்துறை பாஜகவின் மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 81,000 பணத்தை கைப்பற்றியதுடன், பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர். மேலும், அவர்களை பிடிக்கும்போது வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லீப்பையும் கைப்பற்றினர். 
 
பணம், வாக்காளர்கள் விவரம் பறிமுதல் செய்யப்பட்ட பாஜகவை சார்ந்த ஆலாந்துறை மண்டல் தலைவர் ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தாங்கள் விவசாயிகள் என பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியான விளக்கம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும் படையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். 

முன்னதாக, பூலுவபட்டி பஞ்சாயத்தில் வார்டு எண் 12,13,14,15 ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாகவும், அடுத்த வார்டுகளுக்கு பணம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலில் மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆலந்துறை காவல் நிலையத்தில் இன்று வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க மோடி சதித்திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News