சரத் பவாருடன் ரகசிய சந்திப்பு நடந்ததா; மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றமா?
பணியிட மாற்றம் செய்யப்பட்ட மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய ஒரு கடிதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மும்பையில், சில நாட்களுக்கு முன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் நிரப்பப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் நதி மூலம், ரிஷி மூலத்தை ஆராய்ந்ததில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அம்பலமாகின.
அந்த காரின் உரிமையாளரான மான்சுக் ஹிரன், தானே பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில், அந்த காரின் உரிமையாளரான ஹிரன், அந்த காரை அங்கே நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பிச் சென்றது தெரிந்தது. அந்த காரை சச்சின் வாஸ் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சச்சின் வாஸை தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் கைது செய்தனர். ஹிரன் கொலை வழக்கு தொடர்பாக வினாயக் ஷிண்டே மற்றும் நரேஷ் தாரே ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ALSO READ | 75வது மன் கீ பாத் நிகழ்ச்சி; ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி
இந்நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங், மகாராஷ்டிரா (Maharashtra) முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய ஒரு கடிதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், காவல் துறை உதவி ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட பிற காவல் துறை அதிகாரிகளிடம், மாதந்தோறும் மும்பையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பார்களிடமிருந்து ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அனில் தேஷ் முக், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனை கட்சிக்கும், அரசில் அங்க வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான பிரபுல் படேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சரத் பவாருடனான ரகசிய சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித் ஷா ‘‘எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியமில்லை’’ என பதிலளித்தார். அதேசமயம் சந்திப்பு நடந்ததா, இல்லையா என்பது குறித்து எதுவும் கூறவில்லை.
இதனால், மகாராஷ்டிராவில், சிவ சேனை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்ளுமா, மகாராஷ்டிரா அரசு கவிழுமா என பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. அனைத்திருக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ALSO READ | பங்குனி உத்திரம்: வெற்றி வேல்! வீர வேல்! என அமித் ஷா, ஜே.பி.நட்டா தமிழில் வாழ்த்து
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR