குஜராத் பிஜேபியில் அரசியல் குழப்பம்.. இந்தமுறை பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம்?
Gujarat Bharatiya Janata Party: குஜராத் பிஜேபியில் உட்கட்சி பூசல்.. வேட்பாளர்களை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதால், குஜராத் பாஜகவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவின் வலுவான கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் சில தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை திரும்ப பெற வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு குஜராத் வெற்றி முக்கியக் காரணமாக இருக்கிறது. 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக 26 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், தற்போது குஜராத் பாஜகவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிக்கு ஆபத்து?
குஜராத் மாநில பாஜகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜகவின் முக்கிய தலைவர்கள் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராஜ்கோட், அம்ரேலி, சபர்கந்தா, வல்சாத் மற்றும் சுரேந்திரநகர் ஆகிய தொகுதிகளுக்கு பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்று உள்ளூர் தலைவர்கள், பாஜக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் அக்கட்சியின் வெற்றிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநில பாஜகவில் குழப்பம்
குஜராத் மாநில பாஜகவினரின் எதிர்ப்பால் இரண்டு வேட்பாளர்களின் டிக்கெட்டை பாஜக மாற்றியுள்ளது. எனினும், இந்த விவகாரம் முடிவுக்கு வந்தாகத் தெரியவில்லை. மேலும் மூன்று தொகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், 'டிக்கெட் ரத்து' என்ற வாள் தொங்கிக் கொண்டிருக்கிறது. குஜராத் பா.ஜ.,வில் முதன்முறையாக இப்படி நடக்கிறது. இது கட்சிக்கு சரியில்லை என்ற கேள்விகள் பாஜகவினர் இடையே எழுந்துள்ளன.
ஒருபக்கம் பாஜக - மறுபக்கம் இந்தியா கூட்டணி
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டமாக மே 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 26 தொகுதிகளிலும் பாஜக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மறுபுறம் குஜராத் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 24 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி பரூச் மற்றும் பாவ்நகர் ஆகிய இரண்டு இடங்களிலும் போட்டியிடுகின்றன.
குஜராத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படலாம்?
குஜராத் மாநிலத்தை பொறுத்த வரை காங்கிரஸுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால் கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும், அங்கு ஒரு தொகுதிகளில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அனைத்து சவால்களும் பா.ஜ.,வுக்கு முன் உள்ளதால், அக்கட்சியில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், இந்தமுறை குஜராத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படலாம் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் சபர்கந்தா மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாற்றம்
தற்போது வரை குஜராத்தில் தாண்டு சொந்த கட்சியினரின் எதிர்ப்பால் இரண்டு வேட்பாளர்களை பாஜக மாற்றியுள்ளது. சபர்கந்தா மக்களவைத் தொகுதிக்கு பிகாஜி தாக்கூர் வேட்பாளராக பாஜக அறிவித்தது, அதன் பிறகு எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கின. இதனையடுத்து பிக்காஜி தாக்கூர் தேர்தலில் போட்டியிட மறுத்ததால், அவருக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை கட்சி அறிவித்தது.
கட்சியில் உறுப்பினராக இல்லாதவருக்கு டிக்கெட் கொடுப்பதா?
மறுபுறம் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மகேந்திர சிங் பரையாவின் மனைவி ஷோபனா பரையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜகவின் ஹிம்மத்நகர் தாலுகா பஞ்சாயத்து உறுப்பினர் ஜிதேந்திரசிங் ஜாலா ஷோபனா பரையாவின் வேட்புமனுவை எதிர்த்துள்ளார். அவர் கூறுகையில், கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒரு பெண்ணுக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது. அவர் (ஷோப்னா) கட்சியுடன் இணைந்தவர் அல்ல. அவரது கணவர் தான் பாஜகவில் இணைந்தார். அவர் கட்சியில் உறுப்பினராக இல்லை. அவருக்கு சீட் கொடுக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து க்ஷத்ரிய சமாஜ் தலைவர் ராஜ் ஷெகாவத் விலகல்
ராஜ்கோட் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பர்ஷோத்தம் ரூபாலாவின் கருத்துக்களுக்கு எதிராக க்ஷத்ரிய சமாஜ் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து க்ஷத்ரிய சமாஜ் தலைவரும், குஜராத்தின் கர்னி சேனா தலைவருமான ராஜ் ஷெகாவத் கூறுகையில், "எங்கள் சமூகத்திற்கு எதிராக அருவெறுப்பான கருத்துக்களை கூறியதையடுத்து, பாஜகவில் இருந்து சனிக்கிழமை ராஜினாமா செய்தார். ரூபாலா மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று ஷெகாவத் கூறினார். எவ்வாறாயினும், ரூபாலா கூறிய கருத்துக்கு இரண்டு முறை மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் இந்த மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
குஜராத் அம்ரேலி மக்களவைத் தொகுதியில் அதிருப்தி
அதேபோல அம்ரேலி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக பாரத் சுதாரியா அறிவிக்கபட்டதற்கு அக்கட்சியின் இரு பிரிவினர் சனிக்கிழமை இரவு மோதிக்கொண்டனர். அமரேலியில் இருந்து சுதாரியாவை வேட்பாளராக நிறுத்தும் கட்சியின் முடிவால், தற்போதைய எம்பி நரன் கச்சியாவின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குஜராத் சுரேந்திரநகர் மக்களவைத் தொகுதியில் அதிருப்தி
சுரேந்திரநகர் தொகுதியில் கூட, சில பாஜகவினர் சந்து ஷிஹோரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போதைய பாஜக சிட்டிங் எம்பி மகேந்திர முஞ்ச்பராவுக்கு டிக்கெட் கொடுக்காமல், சந்து ஷிஹோராவை வேட்பாளராக குஜராத் பாஜக நிறுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ