சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா... சிக்கவைத்தது இந்த 6 பேர் - ராகுல் காந்தி பேசியது என்ன?
Rahul Gandhi Chakravyuh Speech: மகாபாரதத்தில் அபிமன்யூவை ஆறு பேர் சேர்ந்து சக்ர வியூகத்தில் சிக்கவைத்து கொலை செய்ததை போல், இந்த 6 பேர் சேர்ந்து அமைத்த சக்ர வியூகத்தில் இந்திய நாட்டையே சிக்கவைத்திருப்பதாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
Rahul Gandhi Chakravyuh Speech In Parliament: 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த வாரம் செவ்வாய்கிழமை (ஜூலை 23) அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.
இந்த உரையில்,"பிரதமர் நரேந்திர மோடி அவரது நெஞ்சில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தாலான ஒரு சக்ர வியூகத்தில் இந்திய நாடே சிக்கியுள்ளது. இளைஞர்கள் 'அக்னிவீர்' சக்ர வியூகத்தில்ஸ சிக்கியுள்ளனர். இந்த பட்ஜெட்டில் அக்னிவீர் திட்டத்தின் வீரர்களின் ஓய்வூதியம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
தாமரை அமைப்பில் சக்ர வியூகம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த குருக்ஷேத்ர போரில், சக்ர வியூகத்தில் அபிமன்யூவை ஆறு பேர் சிக்க வைத்து அவரை கொல்வார்கள். நான் இதுகுறித்து சற்று ஆராய்ந்தேன். சக்ர வியூகத்தின் மறுபெயர் பத்ம வியூகம், அதாவது தாமரை அமைப்பு. சக்ர வியூகம் தாமரை போன்றுதான் இருக்குமாம்.
மேலும் படிக்க | அரசியல் கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்! தேர்தலில் போட்டியிட உள்ளார்!
இப்போது 21ஆம் நூற்றாண்டில், புதிய சக்ர வியூகம் அமைக்கப்பட்டுள்ளது, அதுவும் தாமரை அமைப்பில் தான். பிரதமர் நரேந்திர மோடி அதனை தனது நெஞ்சில் அணிந்துள்ளார். அபிமன்யூவுக்கு அப்போது என்ன நடந்ததோ, அது தற்போது இந்தியாவுக்கு நடக்கிறது. இந்தியாவின் இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு, மகளிருக்கு, சிறு குறு வியாபாரிகளுக்கு நடக்கிறது.
இந்த ஆறு பேர்...
ஆறு பேரால் அபிமன்யூ கொல்லப்பட்டார். இன்றும் சக்ர வியூகத்தின் மத்தியில் நரேந்திர மோடி (பிரதமர்), அமித் ஷா (மத்திய உள்துறை அமைச்சர்), மோகன் பகவத் (ஆர்எஸ்எஸ் தலைவர்), அஜித் தோவால் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்), அம்பானி மற்றும் அதானி ஆகியோர் இருக்கின்றனர்" என்றார்.
அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டார். அதன்பின் பேசிய அவர்,"உங்களுக்கு வேண்டுமென்றால், நான் அஜித் தோவல், அம்பானி, அதானி பெயர்களை நீக்கிவிட்டு மற்ற மூன்று பேரின் பெயர்களை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.
சக்ர வியூகத்தின் இதயம்
தொடர்ந்து பேசிய அவர்,"இந்தியாவை கட்டியாளும் இந்த சக்ர வியூகம் மூன்று சக்திகளால் இயக்கப்படுகிறது. இந்தியாவின் முழு செல்வத்தையும் இருவருக்கு வாரி கொடுப்பது, அதற்கு அனுமதிப்பது. ஏகபோக மூலதனம் சார்ந்த சிந்தனை. அதாவது, சக்ர வியூகத்தின் முதல் சக்தி, நிதியில் அதிகாரத்தை குவிப்பது ஆகும்.
இரண்டாவது, அரசு அமைப்புகள். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை.... மூன்றாவது, இதன் அரசியல் நிர்வாகி. இந்த மூன்றுதான் சக்ரவியூகத்தின் இதயம். இதுதான் நாட்டை சீரழிக்கிறது. நீங்கள் அமைத்த இந்த சக்ர வியூகம் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது. நாங்கள் இந்த சக்ர வியூகத்தை தகர்க்கப்போகிறோம். அதை செய்ய நாங்கள் எடுக்கும் மிகப்பெரிய அஸ்திரம், நீங்கள் அஞ்சும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆகும்" என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,"முன்பு நான் சொன்னது போல், இந்தியா கூட்டணி உத்தரவாதம் அளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அவையில் நிறைவேற்றுவோம். அதேபோல், நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி இதே அவையில் சாதிவாரி கணக்கெடுப்பையும் நிறைவேற்றுவோம். இந்திய நாட்டில் தற்போது அச்சம் கலந்த சூழல் நிலவுகிறது. இந்த அச்சம் நாட்டின் அனைத்து விஷயங்களிலும் ஊடுருவி உள்ளது. எனது நண்பர்கள் (பாஜகவினர்) இங்கு சிரித்துக்கொண்டிருந்தாலும் அவர்களும் அச்சத்தில்தான் இருக்கிறார்கள்.
பாஜகவில் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே கனவு காண அனுமதிக்கப்பட்டவர். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரதமர் ஆக வேண்டும் என நினைத்துவிட்டால், பெரிய பிரச்னையாகிவிடும், அங்கு பயம் வந்துவிடும். இந்த பயம் நாடு முழுவதும் பரவி உள்ளது" என்றார்.
சக்ர வியூகத்தை பலமாக்கும் பட்ஜெட்
மேலும், 2024-25 பட்ஜெட்டையும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கினார். அப்போது அவர்,"பட்ஜெட்டில் வரி பயங்கரவாதம் பிரச்னை பேசப்படவில்லை. இது சிறு வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளது. பட்ஜெட் இந்த சக்ர வியூகத்தை பலவீனப்படுத்தும் என எதிர்பார்த்தேன். இந்த நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகளுக்கு உதவும் என நினைத்தேன்.
ஆனால், இந்த பட்ஜெட்டின் முழு நோக்கமாகனது என்னவென்றால், வியாபார ஒற்றைத்தன்மை, அரசியல் ஒற்றைத்தன்மை ஆகியவற்றை பலமாக்குவதன் மூலம் ஜனநாயக அமைப்பையும், அரசு மற்றும் அதன் அமைப்புகளை அழிப்பதாகும். இதன் விலைவாக, இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறு மற்றும் குறு வியாபாரிகள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வரி பயங்கரவாதம் ஆகியவற்றால் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்" என்றார். அம்பானி, அதானி பெயர்களை குறிப்பிட கடும் எதிர்ப்பு வந்தது. எனவே, அவர்களை A1, A2 என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ