ரிசர்வ் வங்கியின் முக்கிய கடன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகளைக் குறைக்கிறது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் பதவியேற்ற பின் அதன் முதல் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 - 20 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 புள்ளி 4 சதவீதமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.


பணவீக்க விகிதம் ஆண்டின் முதல் பாதியில் 3 புள்ளி 2 சதவீதத்தில் இருந்து 3 புள்ளி 4 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 3 புள்ளி 9 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். பிணையில்லா விவசாயக் கடன் வரம்பை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



நகர கூட்டுறவு வங்கிகளை இணைக்கும் ஒருங்கிணைப்பு அமைப்பை ஏற்படுத்துவது குறித்து விரைவில் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன் முறையாக RBI ரெப்போ வட்டி விகிதத்தை 2019 பிப்ரவரி மாதம் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது!