கொல்கத்தா கொடூரம்: பலியான பெண்ணின் பெற்றோருக்கு வந்த 3 கால்கள்... நீடிக்கும் மர்மம்?
Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அன்று அவரின் பெற்றோருக்கு மூன்று மொபைல் கால்கள் வந்துள்ளன. இந்த மொபைல்கள் கால்களில் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது என்ன என்பதை இதில் காணலாம்.
Kolkata Woman Doctor Rape And Murder Case Latest Updates: கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஜூனியர் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கொல்கத்தா மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த கொடூர குற்றத்தை கண்டித்து கடும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்றன.
சிபிஐ இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. சஞ்சய் ராய் என்பவர் முக்கிய குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டுள்ளார், இருப்பினும் தொடர் விசாரணை நடைபெறுகிறது. ஆக. 9ஆம் தேதி அன்று அதிகாலையில் அந்த பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். முந்தைய நாள் இரவில்தான் அந்த பெண் தனது தாயாரிடம் மொபைலில் பேசியுள்ளார். தாயார் குறைவான நேரமே அவருடன் பேசியுள்ளார். அதாவது தன் மகள் தன்னுடன் பேசுவது அதுதான் கடைசியாக இருக்கும் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். மருத்துவராகி தங்களுக்கு பெருமை சேர்ந்த மகள், இறந்துவிட்டார் என்ற தகவல் வந்தவுடன் அந்த பெற்றோரின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தவிடுபொடியானது. அந்த தகவல் அவர்களின் மனதில் இடியாய் இறங்கியது.
தாமதமாக கூறிய மருத்துவமனை... ஏன்?
ஆனால், அவர்களின் மகளுக்கு அங்கு என்ன நடந்தது என்பது பெற்றோருக்கு உடனடியாக தெரியப்படுத்தவில்லை. காலையில் மூன்று மொபைல் கால்கள் பெற்றோருக்கு வந்துள்ளது. அந்த மூன்று கால்களிலும் தனது மகளுக்கு என்ன நடந்தது என்பதை மருத்துவமனை நிர்வாகிகள் முறையாக தெரிவிக்கவில்லை என பெற்றோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அதிலும் தங்களின் மகள் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகவும் பெற்றோர் அதில் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையின் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் உரிய முறையில் தகவல் தொடர்பு வைத்துக்கொள்ளாதது உச்ச நீதிமன்றத்திலும், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சுமார் 3 மணிநேரத்திற்கு பின்னரே மகள் இறந்துவிட்டாள் என மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் கூறி இருக்கிறது, இந்த தாமதத்திற்கு பின் ஏதும் உள்நோக்கம் இருக்கலாம் எனவும் பெற்றோர் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
பெற்றோருக்கு வந்த அந்த 3 கால்கள்
ஆக. 9ஆம் தேதி காலை 10.53 மணியளவில்தான் மகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து பெற்றோருக்கு வந்த முதல் மொபைல் கால் அதுதான். அந்த காலில் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் என ஒரு பெண் பெற்றோரிடம் பேசியுள்ளார். போலீசாரின் கூற்றுப்படி, மருத்துவமனை நிர்வாகம் ஒரே ஒரு கால் செய்து சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் சொல்லியதாக கூறப்படுகிறது.
ஆனால், மருத்துவமனை தரப்பில் இருந்து அரைமணி நேரத்தில் மூன்று கால்கள் வந்திருக்கின்றன. அதில் கடைசி காலில்தான் பெண் உயிரிழந்த தகவலையே பகிர்ந்துள்ளனர் என கூறப்டுகிறது. இந்நிலையில், இந்த 3 கால்களில் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டவை என்ன என்பது குறித்து வெளியான தகவல்களை இங்கு காணலாம்.
முதல் மொபைல் கால்
உயிரிழந்த பெண்ணின் தந்தை: என்ன நடந்தது? தயவுசெய்து சொல்லுங்கள்.
மருத்துவமனை தரப்பு: அவரின் நிலைமை மோசமாக இருக்கிறது. முடிந்தளவிற்கு சீக்கிரம் வாருங்கள்.
தந்தை: அவளுக்கு என்ன ஆனது என தயவுசெய்து சொல்லுங்கள்?
மருத்துவமனை தரப்பு: அதை மருத்துவர்கள் கூறுவார்கள். நீங்கள் சீக்கிரம் வாருங்கள்.
தந்தை: நீங்கள் யார்?
மருத்துவமனை தரப்பு: நான் உதவி கண்காணிப்பாளர், மருத்துவர் இல்லை.
தந்தை: அங்கு வேறு மருத்துவர்கள் இல்லையா?
மருத்துவமனை தரப்பு: நான் மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளர் பேசுகிறேன். அவசர சிகிச்சை பிரிவுக்கு உங்கள் மகளை கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் இங்கு வந்துவிட்டு எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
தாய்: என்ன நடந்தது?, அவள் வேலையில் தானே இருந்தாள்?
மருத்துவமனை தரப்பு: நீங்கள் முடிந்தளவு சீக்கிரம் வாருங்கள்.
இரண்டாவது மொபைல் கால்
இந்த மொபைல் கால் வரும் முன்னரே, பெற்றோர் மருத்துவமனைக்கு புறப்பட்டுவிட்டனர். இதில் ஒரு ஆண் பேசியுள்ளார்.
மருத்துவமனை தரப்பு: நான் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து பேசுகிறேன்.
தாய்: சொல்லுங்கள்...
மருத்துவமனை தரப்பு: நீங்கள் வருகிறீர்கள் அல்லவா...?
தாய்: நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம். இப்போது அவள் எப்படி இருக்கிறாள்?
மருத்துவமனை தரப்பு: நீங்கள் வாருங்கள், நாம் முதலில் பேசுவோம். நேராக, ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் மார்பு துறையின் தலைவரிடம் வாருங்கள்.
தாய்: சரி. (என சொல்லி தொடர்பை துண்டித்துள்ளார்)
மூன்றாவது மொபைல் கால்
இதை அந்த மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளரான பெண் பேசியுள்ளார். இதில்தான் பெண் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோரிடம் மருத்துவமனை தரப்பு கூறியிருக்கிறது. ஏன் மருத்துவமனை தரப்பு பெற்றோரிடம் தவறான தகவலை அளித்தது என நீதிபதிகள் தொடர் கேள்விகளை எழுப்பினர்.
தந்தை: ஹலோ, சொல்லுங்கள்.
மருத்துவமனை தரப்பு: நான் உதவி கண்காணிப்பாளர் பேசுகிறேன்
தந்தை: சொல்லுங்கள்...
மருத்துவமனை தரப்பு: விஷயம் என்னவென்றால் உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என நம்புகிறோம். அவர் உயிரிழந்துவிட்டார். காவல்துறை இங்கு உள்ளது. நாங்கள் இங்கேதான் இருக்கிறோம். சீக்கிரம் வாருங்கள்.
தந்தை: நாங்கள் நேராக அங்குதான் வருகிறோம். (பின்னணியில் தனது மகள் இறந்துவிட்டதை கேட்டு தாயார் கூச்சலிட்டு கதறியுள்ளார்)
ஆக. 9ஆம் தேதி மதியம் 1 மணியளவிலேயே பெற்றோர் ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்கள் வந்து 10 நிமிடத்தில் கொலை நடந்த கருத்தரங்கு கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவை ஒருபுறம் இருக்க, ஏன் மருத்துவமனை நிர்வாகம் முறையான புகாரை காவல் துறையிடம் அளிக்கவில்லை என்றும் ஏன் இதனை சந்தேகத்திற்கு இடமான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் என்றும் கேள்வி எழுப்பினர். அதுவும் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் ஆக. 9ஆம் தேதி அன்று கொடுத்த புகாருக்கு பின்னரே போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ