நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி திட்டமிடுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இன்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. பொதுவாக சோனியா காந்தி செய்தியாளர் சந்திப்புகளில் கலந்துக் கொள்வதில்லை. அதிலும், கடந்த  ஓராண்டாக உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால், அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் கலந்துக் கொள்ளவில்லை என்ற நிலையில், இன்று அவர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது தொடர்பாக வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கைகளின் எதிரொலியாகவே சோனியா காந்தி செய்தியாளர்களை சந்திக்க முடிவெடுத்ததாக நம்பப்படுகிறது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடினார்கள். 


நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கினால் காங்கிரஸ் கட்சியால் வலுவாக செயல்பட முடியாது என்று பிரதமர் மற்றும் அவரது அரசாங்கம் கீழ் இருப்பதாக காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை கூறியது. இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, இந்திய தேசிய காங்கிரஸை நிதி ரீதியாக முடக்க திட்டமிட்ட முயற்சி நடந்து வருவதாகக் கூறினார்.


மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன அதிமுக! புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு


பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் நிதி முடக்கப்பட்டு, வங்கிக் கணக்குகளில் இருந்து பலவந்தமாக பணம் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சியின் காந்தி குடும்பத்தின் முக்கியத் தலைவரான சோனியா காந்தி, தேர்தல் பிரச்சாரத்தை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ள முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, “ஒருபுறம், உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர விவகாரம் இருக்கும் நிலையில், தேர்தல் பத்திரங்கள் பா.ஜ.க.வுக்கு பெரிதும் பயனளித்தது என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. மறுபுறம், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் நிதியை முடக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இதுவரை நடந்திராத ஒன்று அதாவது முன்னோடியில்லாதது மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது" என்று சோனியா காந்தி தெரிவித்தார். 


இந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாக்கன், ஆகியோர், தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தங்களுக்கு சொந்தமான நிதியைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.



மேலும் எதிர்கட்சிகளின் பொருளாதாரத்தை முடக்குவது, போன்ற செயல்கள் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் பாதிக்கும் என்று சோனியா காந்தி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியையும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடினார். "இன்று காங்கிரஸ் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை மிகவும் தீவிரமானது. இந்த பிரச்சனை காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் பாதிக்கும். இந்திய தேசிய காங்கிரஸை நிதி ரீதியாக முடக்குவதற்கு பிரதமரால் திட்டமிட்ட முயற்சி நடந்து வருகிறது" என்று சோனியா காந்தி கூறினார்.


ஒருபுறம் தேர்தல் பத்திரப் பிரச்சினை என்றால் மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியின் நிதியும் தாக்கப்படுவது "ஆபத்தான விளையாட்டு" என்று கூறிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, "தேர்தலில் சமநிலையான களம்" இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | Mudumalai: நீலகிரியின் முதுமலைக் காடுகளை பற்றிய இந்த செய்திகள் தெரியுமா? சர்வதேச வன நாள் மார்ச் 21!


"தேர்தல் பத்திரங்கள் சட்டத்திற்கு புறம்பானது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், அந்தத் திட்டத்தின் கீழ் பாரதிய ஜனதா கட்சி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பெற்றுள்ளது. அவர்கள் அந்த பணத்தை பயன்படுத்துவார்கள். மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது என்பது, தேர்தல் களத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, எதிர்கட்சியை முடக்கி வெற்றி பெறும் சதித்திட்டம். இப்படி சமநிலையற்ற நிலையை ஏற்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது" என்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.


பாரபட்சமின்றி தேர்தல் நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கு அவசியம் என்று வலியுறுத்திய கார்கே, "மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற முறையில் தேர்தல் நடத்தப்படுவதும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான தேர்தல் தளம் இருக்க வேண்டியதும் அவசியம்.


அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உட்பட தன்னாட்சி அமைப்புகள் கட்டுப்படுத்தப்படக்கூடாது. அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு வெளிவந்துள்ள தேர்தல் பத்திரங்கள் பற்றிய உண்மைகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.


பாஜக தலைமையிலான அரசாங்கம் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பணம் வசூலித்து அதன் மூலம் சொகுசான அலுவலகங்களை அமைத்துக் கொண்டிருப்பதாகவும், பொதுக்கூட்டங்களுக்கு செல்ல பாஜக பிரமுகர்கள் விமானங்களைப் பயன்படுத்துவதாகவும் காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டுகிறது. 


பாஜக எப்படி பணம் வசூலிக்கிறது என்பதை குறிப்பிட விரும்பவில்லை என்றும், உண்மை விரைவில் அம்பலமாகும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த வேண்டுமானால், தங்கள் கட்சியின் வங்கிக் கணக்குகளை அணுக அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


மேலும் படிக்க | ’மாட்டுக்கறி திங்கிற பொறுக்கி நாய்களே’ நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சர்ச்சை பேச்சுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ