COVID-19 தொற்றுக்கு மத்தியில் Red Alert எச்சரிக்கை!! மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை: அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை (Mumbai), ரத்னகிரி மற்றும் ராய்காட் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (The India Meteorological Department- IMD) தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது. சனிக்கிழமை பால்கர், மும்பை, தானே மற்றும் ராய்காட் ஆகிய இடங்களில் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக, மும்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் சனிக்கிழமை, சில இடங்களில் கனமழை (Heavy Rainfall) முதல் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு, அதாவது ஜூலை 3 முதல் 4 வரை, மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில், சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும் அவர் கூறுகையில், "ஜூலை 4 ஆம் தேதி, பால்கர், மும்பை, தானே மற்றும் ராய்காட் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெள்ளிக்கிழமை காலை மும்பை உள்ளிட்ட புறநகர்ப்பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மும்பை நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் எல்லா இடங்களிலும் வெள்ளத்தில் மூழ்கின. இதில் தாதர், மாட்டுங்க, வொர்லி, லால்பாக், கிங்ஸ் சர்கல், சைன் (Sion), குர்லா, அந்தேரி மற்றும் பல பகுதிகள் அடங்கும்.
மேலும் செய்தி வாசிக்க | தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
ஹிந்த்மாதா மற்றும் கோல்டெவல் பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து வேறு பாதைக்கு மாற்றி விடப்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல இடங்களில் மரங்கள் சாலைகளில் சாய்ந்து கிடந்தது. மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேநேரத்தில் மும்பையில் ஊரடங்கு (Lockdown) அமலில் இருப்பதால், சாலைகளில் அதிக அளவில் நடமாட்டம் இல்லை. ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், மேலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருபக்கம் மும்பை மாநகரம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மறுபுறம் அங்கு கனமழை காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மகாராஷ்டிரா (Maharashtra) அரசு தேவையான நடவடிக்களை எடுத்து வருகிறது.