மகாராஷ்டிராவில் ஜனநாயக வழியில் அரசு அமைவதில் சிக்கல்: உச்சநீதிமன்றம் கவலை
மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து இன்று உச்சநீதிமன்றம் தெரிவித்த முக்கியமான கருத்து என்ன? என்று பார்ப்போம்.!!
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிராக என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டாக தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இறுதி தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் நாளை மாலை 5 மணிக்கு முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றனர். அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த மகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட அவசர வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது.
நேற்று இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இறுதி தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனர். இந்தநிலையில், இன்று காலை மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது,
> மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெற வேண்டும்
> இந்த வாக்கெடுப்பு இரகசியமாக இருக்கக் கூடாது.
> மேலும் வாக்கெடுப்பு நடைபெறுவதை நேரலை செய்ய வேண்டும்.
> வாக்கெடுப்பின் போது நடுநிலையான சபாநாயகரை நியமிக்க வேண்டும்.
> அதேவேளையில் அனைத்து கட்சிகளும் ஜனநாயக மாண்பை கண்டிப்பாக கடைபிடிக்கவும், காப்பாற்றவும் வேண்டும்.
இதுபோல மகாராஷ்டிராவில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிருபிக்க நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பல நிபந்தனைகளை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றம் தரப்பில், மஹாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் காலம் ஆகியும், இதுவரை எம்எல்ஏகள் பதவி கூட ஏற்கவில்லை. அதை வைத்து பார்க்கும் போது சட்டவிரோத நடவடிக்கையான குதிரை பேரம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனத் தெரிகிறது. இதை கருத்தில் கொண்டு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடைபெற வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது எனக் கூறியுள்ளது.
நேற்று (திங்கள்கிழமை) மாலை, தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party) கட்சி, சிவசேனா (Shiv Sena), மற்றும் காங்கிரஸ் (Congress) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை ஊடகங்களுக்கு முன்னால் அணிவகுத்தனர். மும்பையில் உள்ள ஹோட்டல் கிராண்ட் ஹையாட்டில் மூன்று கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களைத் தவிர, சமாஜ்வாடி கட்சி மற்றும் வேறு சில சிறிய கட்சிகள் மற்றும் சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை அணிவகுப்பு நடத்தினர். அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்கள் சட்டமன்றத் தொகுதி மற்றும் தங்கள் பெயர்களைக் கூறி, சட்டசபையில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக தான் வாக்களிப்போம் என்று சத்தியம் செய்தனர்.
நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்களின் அணிவகுப்பின் போது என்சிபி தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா காங்கிரஸ் (Congress) மாநிலத் தலைவர் பாலாசாகேப் தோரத் மற்றும் மூன்று கட்சிகளின் பல பெரிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அணிவகுப்பின் போது ஷரத் பவார் அவரது மகள் சுப்ரியா சுலேவுடன் இருந்தார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.