AMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா... திரையுலகில் அதிர்ச்சி - அடுத்தது என்ன?
Mohanlal Resigned: AMMA என்றழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னணி நடிகர் மோகன்லால் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
Mohanlal Resigned From AMMA President Post: AMMA என்றழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னணி நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அவர் மட்டுமின்றி அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். கேரள திரையுலகில் கடந்த சில நாட்களாக பாலியல் புகார்கள் எழுந்து வந்த நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் பிரபல நடிகை ஒருவருக்கு, மலையாள நடிகர் திலீப் பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, தொடர்ந்து படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, திரையுலகில் நிலவும் பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் குறித்து ஆய்வு செய்யவும் நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை குழு கடந்த 2017ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டது.
வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் நடிகர் சாரதா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.பி. வல்சலா குமாரி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த குழுவினர் மலையாள திரையுலகில் பல்வேறு பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளான 51 பேரிடமும் விசாரணை நடத்தி, அங்கு நிலவும் பாலின பாகுபாடுகள், பாலியல் அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து விரிவாக அறிக்கையை தயார் செய்தது. 2019ஆம் ஆண்டில் இந்த குழு கேரள அரசிடம் சமர்பித்தது.
இந்த ஹேமா கமிட்டி அறிக்கை சமர்பிக்கப்பட்டு சுமார் பல ஆண்டுகளாக அரசு தரப்பில் வெளியிடப்படாமல் இருந்தது. மேலும் ஹேமா கமிட்டி சமர்பித்த அறிக்கையை ஆய்வு செய்ய தனி குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்திருந்தது. இந்த நிலையில், திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கேரள அரசு கடந்த ஆக.19ஆம் தேதி வெளியிட்டது. இருப்பினும், இந்த அறிக்கையில் சர்ச்சையான பல பகுதிகள் நீக்கப்பட்டு 233 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.
தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள்
இந்த அறிக்கை வெளிவந்தது முதல் மலையாள திரையுலகில் பரபரப்பான சூழல் நிலவியது. மீண்டும் பல்வேறு நடிகைகள் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதிலும் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் (Association of Malayalam Movie Artists - AMMA) பொதுசெயலாளராக இருந்த சித்திக் மீது துணை நடிகை ரேவதி சம்பத் என்பவர் போலீசாரிடம் பாலியல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, சித்திக் தனது பொதுச்செயலாளர் பொறுப்பை நற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
மேலும், வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா என்பவர் மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் புகார் அளிக்க கேரள மாநில சலசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகினார். இவை கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோகன்லாலும் நிர்வாகிகளும் ராஜினாமா
திரையுலகில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள், ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் ஏற்பட்ட அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை அடுத்து, இன்று AMMA சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார். மோகன்லால் ராஜினாமா செய்ததை தொடர்ந்து 17 செயற்குழு உறுப்பினர்களும் தங்களது பொறுப்பில் இருந்து விலகினர்.
தலைவர் மோகன்லால், பொதுச்செயலாளர் சித்திக் மட்டுமின்றி செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஷ், ஜெயன் சேர்த்தலா, டொவினோ தாமஸ், ஜோமோல், பாபுராஜ், உன்னி முகுந்தன், கலாபவன் ஷாஜோன், சரயு மோகன், சுராஜ் வெஞ்சாரம்மூடு, ஜாய் மேத்யூ, சுரேஷ் கிருஷ்ணா, டினி டாம், அனன்யா, வினுமோகன், அன்சிபா ஹாசன் உள்ளிட்டோரும் பதவியில் இருந்து விலகினர்.
மேலும் படிக்க | நடிகர் சித்திக் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்! பிரபல நடிகை குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ