9வது ஐ.எஸ்.எல் : சென்னையின் எப்.சி வெளிநாட்டு வீரர்களின் முழு விவரங்கள்
Chennaiyin FC Foreign Players : தோல்வியில் இருந்து மீளுமா சென்னையின் எப்.சி அணி ? புதிய வெளிநாட்டு வீரர்களின் விவரங்கள்!
9வது இந்தியன் சூப்பர் லீக் 2022-2023 ஆண்டுக்கான சீசனில் சென்னை ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தொடர் தோல்வி, கொரோனா தொற்று என பல்வேறு இடர்பாடுகளில் சிக்கித்தவித்த அணியில் தற்போது பல்வேறு மாற்றங்கள். சென்னையின் எப்.சி அணியின் புதிய பயிற்சியாளராக தாமஸ் பிரட்ரிக் நியமிக்கபட்டுள்ளதில் இருந்தே எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் சென்னையின் எப்.சி அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் படிக்க | 20 போட்டிகளை குறைக்க வேண்டும் - ரவிசாஸ்திரி பரபரப்பு கருத்து
ஒரு அணி அதிகபட்சமாக 6 வெளியாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்னும் நிலையில், சென்னையின் எப்.சி அணி அனைத்து வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களையும் நிரப்பிவிட்டது. ஏற்கனவே, 5 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், 6வது வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது ஆறாவது வீரரையும் சென்னை அணி ஒப்பந்தம் செய்துவிட்டது. ஜூலியஸ் டக்கரை 6வது வீரராக எடுத்துள்ளதால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னையின் எப்.சி அணியின் பயிற்சியாளர் தாமஸ் பிரட்ரிக். அவரது படையில், குவாமே கரிகாரி, ஃபாலோ டியாக்னே டிவேன்டர், வஃபா ஹகமானேஷி, பீட்டர் சிலிஸ்கோவிக், ரஃபேல் கிரிவெல்லாரோ, ஜூலியஸ் டக்கர் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சென்னை அணியில் ‘கலக்க’ உள்ளனர்.
பயிற்சியாளர் தாமஸ் பிரட்ரிக்
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தாமஸ், அற்புதமான ஸ்டிரைக்கர் என்பதால் சென்னை ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. அதுமட்டுமல்லாமல், கடந்த 10 சீசன்களில் அவர் பயிற்சியளித்த ஒவ்வொரு கிளப்பும் ஒரு ஆட்டத்திற்கு சராசரியாக 2 கோல்கள் அடித்துள்ளன.
ஜெர்மனி அணிக்காக 8 சர்வதேச போட்டிகளில் விளையாடியவரான தாமஸ் பிரட்ரிக் ஜெர்மனி மற்றும் அல்பேனியாவில் கிளப் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தாக்குதல் கால்பந்து விளையாடவே தான் விரும்புவதாக தாமஸ் பிரடாரிக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை அணி மீண்டெழும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘ஃபைர்’ விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
குவாமே கரிகாரி
அற்புதமான ஸ்டிரைக்கர். இந்த முறை சென்னையின் எப்.சி அணி பெரும்பாலும் கோல் மழைக்கு கரிகாரியையே நம்பியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், சென்ற ஆண்டு தாய் பிரீமியர் லீக்கில் நகோன் ரட்சசிமா அணிக்காக ஆடிய கரிகாரி 29 ஆட்டங்களில் 13 கோல்களை அடித்து அதகளப்படுத்தியுள்ளார்.
கானா நாட்டைச் சேர்ந்தவர் தற்போது சென்னையின் எப்.சி அணியின் செல்லக்குட்டி.!
ஃபாலோ டியாக்னே டிவேன்டர்
ஆறடி உயரமுள்ள டியாக்னே ‘சென்டர் பேக்’ பொசிஷனில் ஸ்டிரைக்கர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்க கூடியவர். பயிற்சியாளர் தாமஸ் ஏற்கனவே இருந்த அணியில் இடம்பெற்றிருந்தவர் என்பது கூடுதல் தகவல்.
இந்த முறை சென்னையின் எப்.சி கோல்களை தடுக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துப் பார்க்கலாம்.
மேலும் படிக்க | 20 நிமிடங்கள் போதும்: விராட் கோலிக்காக பேசிய முன்னாள் இந்திய வீரர்!
வஃபா ஹகமானேஷி
ஈரான் நாட்டைச் சேர்ந்த வஃபா உள்ளூர் போட்டிகளில் பல ரசிகர்களைக் கொண்டவர். குறிப்பாக ‘சென்டர் பேக்’ பொசிஷனில் அசத்தலாக விளையாடியக் கூடிய இவர், தற்போது சென்னையில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
போட்டியில் ‘வஃபா’ நிச்சயம் அசத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பீட்டர் சிலிஸ்கோவிக்
குரோஷிய வீரரான பீட்டர் ஸ்லிஸ்கோவிக்கை, சென்னை அணிக்காக நியமனம் செய்த போது, சென்னையில் எப்.சி அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ‘பீட்டர் பராக்’ என்று வரவேற்பு தெரிவித்தது. சி.வி. வெஹன் அணிக்காக ஆடிய 12 போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காத பீட்டர், தற்போது சென்னை அணியில் உள்ளார். அதற்காக அவரை லேசாக எடைபோட வேண்டாம். 310 போட்டிகளில் 104 கோல்களை அடித்தவர்தான்.
அட்டாகிங் மிட்பீல்டரான பீட்டர், கொஞ்ச நாட்களாக ஃபார்மில் இல்லாமல் இருக்கிறார். சென்னை, அவரை நிச்சயம் மீட்டு ஃபார்முக்கு கொண்டுவரும் என்று பீட்டர் மட்டுமல்ல சென்னை ரசிகர்களும்தான் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
ரஃபேல் கிரிவெல்லாரோ
ப்ரேஸில் நாட்டைச் சேர்ந்த ரஃபேல், அட்டாகிங் மிட் பீல்டர்.
பந்தை லாவகமாக கால் மாற்றுவதில் கில்லாடியான ரஃபேல், சென்னையின் எப்.சி அணியின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார். களத்தில் ரஃபேல் நிச்சயம் அசத்துவார் என எதிர்பார்ப்போம்.!
ஜூலியஸ் டக்கர்
கடைசியா தான் வந்தார் விநாயக் என்பது போல, இந்த வெளிநாட்டுப் படையில் கடைசியாக வந்து சென்னையின் எப்.சி அணியில் சேர்ந்தவர்தான் ஜூலியஸ் டக்கர். நல்ல டிபென்சிவ் மிட் பீல்டர். பந்து இவரைத் தாண்டாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஸ்டிரைக்கர்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழக்கூடியவர்.
ஜெர்மன் கிளப்புகளில் 35 கோல்களை அடித்து அசத்தியவர். சென்னை அணியில் சேர்ந்ததை பரவசமாக உணர்வதாக கூறிய அவர், முதலில் அணியில் உள்ளவர்களிடம் பழகி அனைவரும் வடிவத்திற்கு தயாராக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். கலக்குங்க ‘டக்கர்’!.
மேலும் படிக்க | Ben Stokes: பென் ஸ்டோக்ஸ் திடீர் ஓய்வு- உலக்கோப்பை நாயகனின் உருக்கமான அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ