காபூலின் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் 16 வயதான நெஜின் அஃப்ஷர் உற்சாகத்துடன் இருக்கிறார். ஆனால் போராட்டம் என்பது கரடுமுரடான பாதையில் பயணிப்பது மட்டுமா என்ன? பெண் என்பதால் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களும் சேர்ந்தது தானே?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது பெற்றோரின் ஊக்கத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் அஃப்ஷர், ஒரு வருடத்திற்கு முன்பு  பைக் ரைடராக மாறினார். வெள்ளை ஹெல்மெட் மற்றும் கருப்பும் சிவப்பும் கலந்த மோட்டார் பைக்கில் ரைடராக காட்சியளிக்கும் Negin Afshar, ஆண்களுடன் இணைந்து கிடங்குகள் மற்றும் வீடுகள் உள்ள பகுதியின் காலியிடங்களில் பைக் ஓட்டி பயிற்சி பெறுகிறார். 


"இங்கே ஆண்கள் மட்டுமே மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை நான் பார்த்தேன். ஏன் நான் மோட்டர் பைக் ஓட்டக்கூடாது என்று நினைத்தேன். ஆப்கானிய பெண்களை ஊக்குவிப்பதற்காக பைக்கராக முடிவு செய்தேன். கடினமான விளையாட்டுத் துறையிலும் ஆஃப்கன் பெண்களால் முன்னேற முடியும் என்பதை உலகுக்குக் காட்ட முடிவு செய்தேன்" என்று நெஜின் அஃப்ஷர் கூறுகிறார்.


"இந்தத் துறையில் ஈடுபட்ட ஆஃப்கன் பெண்களின் முதல் வரிசையில் நான் இருக்க முயற்சித்தேன்.  என்னால், மற்றவர்களும் ஊக்கம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்."


2001 ல் இருந்து கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெறும் நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் கொடுக்காத கடும் போக்கு கொண்ட பழமை இஸ்லாமியவாதிகளும், தலிபான் இயக்கம் போன்றவர்களின் கடுமையான கட்டுப்பாடுகளும் இருப்பதால், எதிர்காலத்தில் நெஜின் அஃப்ஷர் மோட்டர் ரைடராக தொடர முடியுமா என்ற கவலை குடும்பத்தினரை வாட்டுகிறது.


Read Also | நம்பிக்கையே வாழ்வின் மகத்தான சொத்து... நம்பிக்கையின்மை ஆலகால விஷம்.. 


1990 களின் பிற்பகுதியில் தாலிபன்களின் ஆதிக்கம் வந்த பிறகு பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை, பெண்கள் வேலை செய்ய முடியவில்லை, அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது அவர்கள் முழு உடலையும் மூடும் புர்காக்களை அணிய வேண்டியிருந்தது.


சமீபத்திய மாதங்களில், தலிபான் தன்னை மிகவும் மிதவாதியாகக் காட்டிக் கொள்கிறது. தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பெண்கள் முடக்கப்படுவார்கள் என்ற கவலை ஏற்படுகிறதா என்ற கேள்விக்கு அஃப்ஷர் இவ்வாறு பதிலளித்தார்:


"கடவுளின் விருப்பம் என்னவோ அதுதான் நடக்கும். எங்கள் அரசாங்கம் தலிபான்களை அவ்வாறு செய்ய அனுமதிக்காது... அவர்கள் எங்கள் உரிமைகளை அடக்க விரும்பினால், நாங்கள் அவர்களுக்கு எதிராக நிற்போம்.  எனது நாட்டை விட்டு வெளியேற மாட்டேன், இங்கேயே தங்கி என் நாட்டுக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன்."


ஆப்கானிஸ்தானின் தேசிய மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பின் மகளிர் குழுவின் தலைவராக இருக்கிறார் அஃப்ஷரின் அம்மா ஃபிரிஷ்டா அஃப்ஷர். 


"சிலர் பெண்கள் இதுபோன்ற விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதற்கு ஒத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு எதிர்மறையான பார்வை இருக்கிறது, மற்றவர்கள் ஒப்புக்கொண்டு ஊக்குவிக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.


"எது எப்படியிருந்தாலும், என் கணவரும் நானும் எங்களால் முடிந்தவரை அஃப்ஷருக்கு ஆதரவளிப்போம், என் மகளை வெற்றியின் மிக உயர்ந்த உச்சங்களுக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்."


தற்போதைக்கு, அத்தகைய கனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸின் தாக்கமே.. இரான் மற்றும் மலேசியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு  motocross குழு அழைக்கப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அந்தத் திட்டங்களை சீர்குலைத்துவிட்டது...


பாதை கரடுமுரடானதாக இருக்கலாம்... ஆனால் அதில் தொடர்ந்து பயணித்தால் தான் பாதைகள் சீரடையும், இலக்கையும் அடையமுடியும்..