சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
பேசுவதும் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதும் எளிது. ஆனால் அதை கடைபிடிப்பது என்பதே மிகப் பெரிய சவால்... இது அனைவருக்கும் பொருந்தும். காதலனாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி... பெற்றோராக இருந்தாலும் சரி, பிள்ளைகளாக இருந்தாலும் சரி..
தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று அந்தக் காலத்தில் சொன்னால், இந்த காலத்தில் அது பழமொழி என்று ஒதுக்கினாலும், இதே பொருள் கொண்ட பல புதுமொழிகளை இன்று அனைவரும் அடுக்கிவிடுவார்கள்.
ஆனால் எக்காலத்திலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சில விஷயங்கள் உண்டு. அதுதான் மன அமைதி. மனம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் பலவிதமான செயல்களை செய்கின்றனர். ஆனால் அனைத்திற்கும் அடிப்படை நேர்மறை எண்ணங்களை வளர்த்திக் கொள்வதே. ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும், நேர்மறையான எண்ணங்களும் இருந்தால், எந்த ஒரு கவலைக் கடலையும் நம்பிக்கை என்ற படகில் அமர்ந்து கடந்துவிடலாம்.
நம்பிக்கை ஒன்றே மனிதனுக்கு யானையின் தும்பிக்கைப் போன்று பலம் தர வல்லது. நம்பிக்கை மட்டும் இருந்தால் மலையையும் மடுவாக்கலாம். மடுவிலும் பல மாடி கட்டடங்கள் கட்டலாம். அந்த நம்பிக்கையை வளர்த்திக் கொள்வதற்கு அடிப்படை தன்னம்பிக்கை. முதலில் தன் மீது நம்பிக்கை வைத்தால், பிறர் மீது தானாகவே நம்பிக்கை வந்துவிடும் என்பது அடிப்படையான விஷயம். மனிதர்களை பிணைத்து வைப்பதும், பிரித்து ஒதுக்குவதும் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மை என்ற இரண்டு காரணிகள் மட்டுமே...
நம்பிக்கை அற்றவன் வெல்வது கடினம் என்றால், நம்பிக்கை உள்ளவன் வீழ்வது கடினம்... நாம் சுமக்கும் நம்பிக்கையே நாம் வீழும் போது நம்மைக் காக்கும் அருமருந்து. அருமருந்தான நம்பிக்கையை வளர்ப்போம்.
Real Also | உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...எண்ணமே செயலாகும்... சிந்தனையே சிறப்பாகும்..
நான் அனைவரையும் நம்பி ஏமாந்துவிடுவேன் என்று புலம்பாதவர்களே இருக்க முடியாது. ஆனால் அது நம்பிக்கை வைத்தவரின் தவறல்ல, தவறான மனிதர்களின் மீது நம்பிக்கை வைத்தவரின் கணிப்பின் தவறு...
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள் - என்ற வள்ளுவனின் வாக்கை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்துப் பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது என்பது எல்லோர்க்கும், எந்நாளும் பொருந்தும் சத்திய வாக்கு...
யார் மீது, எதன் மீது எதற்காக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடம்... வாழ்க்கை நமக்கு நம்பிக்கையைக் கற்றுக் கொடுக்கும் என்று நம்பினால், எவ்வித தடை வந்தாலும் வாழ்வு என்பது சுகமான பயணமே...