இதுதான் நடப்பு சாம்பியனுக்கு அழகு... ஸ்டோக்ஸ் மிரட்டல் சதம் - 340 ரன்கள் இலக்கு
ENG vs NED: நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்தது.
ENG vs NED: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்றின் கடைசி கட்டம் நெருங்கிவிட்டது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. 4ஆவது இடத்தில் இடம்பிடிக்கப்போவது யார் என்ற கேள்விதான் தற்போது அடுத்தடுத்த போட்டிகளின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது சாம்பியன்ஸ் டிராபிக்கான போராட்டம்
ஆனால், இன்றைய இங்கிலாந்து - நெதர்லாந்து போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 1இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 5 தோல்விகளை அந்த அணி சந்தித்து, அரையிறுதி ரேஸில் இருந்து வெளியேறியது. நெதர்லாந்து அணியோ தென்னாப்பிரிக்காவையும், வங்கதேசத்தையும் வீழ்த்தியது. 10ஆவது இடத்தில் இங்கிலாந்தும், 9ஆவது இடத்தில் நெதர்லாந்தும் உள்ளன.
2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு, நடப்பு உலகக் கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களுக்குள் தற்போது நிறைவு செய்ய வேண்டும். அதாவது, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் நேரடியாக தகுதிபெற்றுவிட்ட நிலையில், டாப் 7 அணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துகொள்ளப்படும்.
இங்கிலாந்து ஆதிக்கம்
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பிடிக்க கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்பட்டது. இங்கிலாந்துக்கு மட்டுமல்ல நெதர்லாந்து அணியும் இதில் கடுமையாக போராடும். இந்த போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றால் டாப் 8 இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, இரண்டு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாகும்.
அந்த வகையில், புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியின் டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஓப்பனிங்கில் பேர்ஸ்டோவ் வழக்கம்போல் சொதப்பினாலும் மலான் நிதானம் காத்து ரன்களை அடித்தார். ரூட்டும் சொற்ப ரன்களில் அவுட்டாக மலான் - ஸ்டோக்ஸ் இணை நிதானம் காட்டியது. ஆனால், மலானும் 87 ரன்களில் ரன்அவுட்டாக மொத்த அழுத்தமும் ஸ்டோக்ஸ் மீது சாய்ந்தது.
ஸ்டோக்ஸ் முதல் சதம்
அடுத்து வந்த ப்ரூக், பட்லர், மொயின் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கிறிஸ் வோக்ஸ், ஸ்டோக்ஸ் (Stokes) உடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். அரைசதம் கடந்தும் ஸ்டோக்ஸ் பவுண்டரிகளை விளாச, வோக்ஸ் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை பறக்கவிட்டார். வோக்ஸ் தனது அரைசதத்தையும் பதிவு செய்தார்.
இந்த ஜோடி 129 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைக்க வோக்ஸ் 51 ரன்களில் நடையைக் கட்டினார். தொடர்ந்து, ஸ்டோக்ஸ் உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்ய, அடுத்து வந்த டேவிட் வில்லி 6 ரன்களில் கிளம்ப, கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் அவுட்டானார். அவர் 84 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 108 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை குவித்தது. நெதர்லாந்து பந்துவீச்சாளர் பாஸ் டி லீட் 3, ஆர்யன் தத், லோகன் வான் பீக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 340 ரன்கள் என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி (ENG vs NED Match Update) களமிறங்கி உள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவுடன் அரையிறுதியில் இந்த அணியும் மோதலாம்... வாய்ப்பு இன்னும் இருக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ