இறுதிப்போட்டியில் இந்தியா... சுருண்டது இங்கிலாந்து - பக்காவான பழிக்குப் பழி!
IND vs ENG: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
India vs England Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் (ICC T20 World Cup 2024) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. கயானா நாட்டின் ஜார்ஜ் டவுண் நகரில் உள்ள பிரோவிடன்ஸ் மைதானத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி 8 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டியின் டாஸ் போடுவது தள்ளிப்போனது. இருப்பினும், இரவு 8.50 மணிக்கு டாஸ் போடப்பட்டது. ஆட்டம் இரவு 9.15 மணிக்கு தொடங்கியது.
மழையால் தாமதம்
சுமார் 1.15 மணிநேரம் தாமதமாக தொடங்கினாலும் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. மழை காரணமாக இங்கிலாந்து கேப்டன் இந்த முடிவை எடுத்திருந்தார். இருப்பினும், ரோஹித் சர்மா தான் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங்கையே எடுத்திருப்பேன் என்றார். காரணம், ஆடுகளம் மிகவும் உலர்ந்து காணப்படுவதாகவும் இப்போது சற்று வெயிலும் அடிப்பதால் ஆடுகளம் போக போக மெதுவானதாக மாறும் என்பதால் பேட்டிங் முடிவையே எடுத்திருப்பேன் என்றார்.
விராட் கோலி மீண்டும் சொதப்பல்
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியிலும் விராட் கோலி சொதப்பினார். ஒரு சிக்ஸரை மட்டும் அடித்த கோலி 9 ரன்களுக்கு ரீஸ் டாப்லி ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்டும் பவர்பிளேவின் கடைசி ஓவரில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் 6 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் - சூர்யகுமார் நல்ல பார்ட்னர்ஷிப்பிற்கு அடித்தளம் இட்டனர். 8 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 65 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
மேலும் படிக்க | 'பந்தை சேதப்படுத்தும் இந்தியா' பாகிஸ்தான் முன்னாள் வீரரின் குற்றச்சாட்டு - ரோஹித்தின் பதில் என்ன?
172 ரன்கள் இலக்கு
மழை தொடர்ந்ததால் ஆட்டம் சற்று தாமதமானது. இந்திய நேரப்படி இரவு 11.10 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்கியது. ரோஹித் - சூர்யகுமார் ஜோடி விட்ட இடத்தில் இருந்து மீண்டும் அதே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து. ரோஹித் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். சற்று நேரத்திலேயே சூர்யகுமார் யாதவும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜடேஜா ஆகியோர் கைக்கொடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், டோப்லி, ஆர்ச்சர், சாம் கரன், அடில் ரஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அச்சாரம் போட்ட அக்சர் படேல்
தொடர்ந்து, 172 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முத ஓவர்கள் சைலன்டாக போய்கொண்டிருக்க நான்காவது ஓவரின் முதல் பந்தில் இருந்து இங்கிலாந்து அணிக்கு சோதனை தொடங்கியது. அக்சர் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே செட்டிலாகி இருந்த கேப்டன் பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்த ஓவரை பும்ரா வீச அவருக்கு பில் சால்டின் விக்கெட் கிடைத்தது.
இங்கிலாந்தை குதறிய குல்தீப்
அதற்கடுத்த ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் டக்அவுட்டானார். இதனால் பவர்பிளே ஓவரில் 39 ரன்களில் 3 ரன்களை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் ஆதிக்கம் மட்டும் நிற்கவேயில்லை. இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலில் குல்தீப் யாதவும் இணைந்துகொண்டார். அக்சர் படேல் வீசிய 8ஆவது ஓவரின் முதல் பந்தில் மொயில் அலி ரிஷப் பண்டின் அற்புதமான ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார். அடுத்து சாம் கரனை எல்பிடபிள்யூ முறையில் குல்தீப் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். மறுமுனையில் பவுண்டரிகளை அடித்து வந்த ஹாரி ப்ரூக்கையும் தனது வலையில் சிக்கவைத்து போல்ட் எடுத்தார் குல்தீப் யாதவ். ஜோர்டனும் 1 ரன்னில் குல்தீப் யாதவிடம் ஆட்டமிழக்க இங்கிலாந்தின் தோல்வி நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது எனலாம்.
இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களிலேயே 103 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007, 2014 ஆகிய தொடர்களுக்கு பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் மற்றும் அக்சர் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பழிக்குப் பழி
இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கணிக்க இயலாமல் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் சரணடைந்து விக்கெட்டை பறிகொடுத்த காட்சியை பார்க்கும்போது, கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் தங்களை வீழ்த்திய இங்கிலாந்து அணியை இந்தியா சரியாக பழிதீர்த்ததை பார்க்க முடிந்தது.
இறுதிப்போட்டியில் IND vs SA
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்திய அணி மோதும். இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் உள்ள கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஜூன் 29ஆம் தேதி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும் எனலாம். பார்படாஸ் நேரப்படி பார்த்தோமானால் ஜூன் 28ஆம் தேதி காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
மேலும் படிக்க | இந்திய அணிக்கே அதிக சாதகம்... ஐசிசி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு - என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ