COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.இந்தப் போட்டி மும்பை வான்கடேவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. 


டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை பின்பற்றி டெல்லி அணியும் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணிக்கு பின்ச்சும், வெங்கடேஷும் தொடக்கம் தந்தனர். 


ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் சக்காரியா பந்துவீச்சில் மூன்று ரன்களில் பின்ச் வெளியேறி கொல்கத்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.



அதன் பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடும் எதிர்பார்த்த சூழலில் அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் வெங்கடேஷ் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.


பின்னர் களமிறங்கிய இந்திரஜித்தும், சுனில் நரைனும் வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து குல்தீப் யாதவ் ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் கொல்கத்தா அணி 35 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.


விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தும் நோக்கில் ஸ்ரேயாஸ் ஐயரும், ராணாவும் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினர். இதன் காரணமாக அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 56 ரன்களை சேர்த்தது.



ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடியது. ஆனால் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 42 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அந்த அணி 83-5 விக்கெட்டுகள் என்ற நிலையில் திணறியது.


அதன் பின் அதிரடி ஆட்டக்காரர் ரஸல் களமிறங்கினார். டீசன்ட் ஸ்கோருக்கு செல்ல ரஸல் களத்தில் நிற்க வேண்டுமென்று கொல்கத்தா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவர் தான் சந்தித்த மூன்றாவது பந்திலேயே குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஸ்டம்ப்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.


அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிங்கு, நிதிஷ் ராணாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி டெல்லியின் பந்துவீச்சை நிதானமாகவும், தேவையான நேரத்தில் அதிரடியாகவும் எதிர்கொண்டது. குறிப்பாக நிதிஷ் ராணா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதோடு மட்டுமின்றி அரை சதத்தையும் அடித்தார். 



இந்த ஜோடி 20ஆவது ஓவரில் பிரிந்தது. ரிங்கு 23 ரன்களிலும், நிதிஷ் ராணா 57 ரன்களிலும் ஆட்டமிழக்க முடிவில் அந்த அணி 9 விக்கெடுகள் இழப்புக்கு 146 ரன்களை எடுத்தது.டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முஸ்தஃபிஸுர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர்.


147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ப்ரித்வி ஷாவும், வார்னரும் தொடக்கம் தந்தனர். முதல் பந்திலேயே உமேஷ் யாதவ் ப்ரித்வியின் விக்கெட்டை எடுத்து அசத்தினார்.


ஒன் டவுனாக இறங்கிய மிட்சல் மார்ஷ் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். ஆரம்பம் முதலே அக்ரஸிவாக விளையாடிய அவர் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஹர்சித் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி இரண்டாவது ஓவரில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது. 



அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லலித் யாதவ் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்ற இந்த ஜோடி கொல்கத்தாவின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு 50 ரன்களை சேர்த்தது. ராணா வீசிய ஒன்பதாவது ஓவரில் வார்னர் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளையும், லலித் யாதவ் ஒரு பவுண்டரியையும் அடித்தனர்.


இந்த ஜோடியை பிரித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உமேஷ் யாதவை மீண்டும் பந்துவீச அழைத்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். அதற்கு பலனாக பத்தாவது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் 42 ரன்களில் வார்னரை வெளியேற்றினார்.


ஓவருக்கு 6 ரன்கள் தேவை என்ற சூழலில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் லலித் யாதவுடன் இணைந்தார். ஆனால் லலித் யாதவ் சுனில் நரைன் ஓவரில் 22 ரன்களுக்கு வெளியேறினார். இது சுனில் நரைனுக்கு 150ஆவது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. லலித் வெளியேறியதைத் தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் இரண்டு ரன்களில் உமேஷ் யாதவ் ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.


இதனால் டெல்லி அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அணியை சரிவிலிருந்து மீட்க வேண்டிய பொறுப்புடன் அக்சர் பட்டேலும், பவலும் இணைந்தனர். 


மேலும் படிக்க | டெல்லி அணிக்கு சேவாக் கொடுத்திருக்கும் முக்கிய டிப்ஸ்


பொறுப்புடன் விளையாடிய இருவரும் அணியை மெல்ல மெல்ல சரிவிலிருந்து மீட்டனர். இந்த சூழலில் அக்சர் 24 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதனையடுத்து ஷர்துல் தாக்கூர் களமிறங்கினார். கடைசி இரண்டு ஓவர்களில் 4 ரன்கள் தேவை என்ற சூழலில் ஷ்ரேயாஸ் ஐயர் வீசிய 19ஆவது ஓவரில் டெல்லி அணி இலக்கை எட்டி வெற்றியடைந்தது. இதன் மூலம் அந்த அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.


மேலும் படிக்க | மேக்ஸ்வெல் கொடுத்த பார்டி - விராட்கோலி போட்ட குத்தாட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR