நேர்மையாக பணிசெய்யும் டிராஃபிக் போலீஸுக்கு ‘கிஃப்ட்’ கொடுத்த 6 வயது சிறுமி
![நேர்மையாக பணிசெய்யும் டிராஃபிக் போலீஸுக்கு ‘கிஃப்ட்’ கொடுத்த 6 வயது சிறுமி நேர்மையாக பணிசெய்யும் டிராஃபிக் போலீஸுக்கு ‘கிஃப்ட்’ கொடுத்த 6 வயது சிறுமி](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/03/24/217298-new-project-3.png?itok=Wd0YL2SO)
போக்குவரத்துத் தலைமைக் காவலரின் சிறப்பான பணியைப் பாராட்டி ஆட்சியரின் மகள் டைரி ஒன்றைப் பரிசாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் பரிசு தான். ஆனால், அது மனதில் ஏற்படுத்தும் தாக்கம் பிரம்மாண்டமானது. மிகப்பிரபலமான கூற்றொன்று உண்டு. ஒருவருக்கு என்ன பரிசு தருகிறோம் என்பது முக்கியமேயல்ல ; பரிசு தருகிறோம் என்பதே முக்கியமானது. பரிசைவிடுங்கள். பாராட்டையாவது மனமார யாருக்காவது சொல்லி வாழ்த்தி இருக்கிறோமா.? பரபரக்கும் தினசரி அவசரங்களில் பிறரை பாராட்டும் எண்ணம் வெகுவாக குறைந்து வரும் சூழ்நிலையில், குழந்தைகளே நமக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறார்கள். ஒருவரின் நேர்மையான செயல் நமக்குப் பிடிக்கிறது. அவரிடம் சென்று நம்மை அறிமுகம் செய்துகொண்டு, மனதார பாராட்ட முடியாமல் ‘எது’ நம்மைத் தடுக்கிறது. ஆனால், குழந்தைகளின் உலகில் அப்படியில்லை.!
மேலும் படிக்க | ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! ஆத்திரத்தில் தீக்குளித்த வாலிபர்!
சென்னை நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் தலைமைக் காவலர் சாலமன் சதீஷ்(44). மணப்பாக்கம் சந்திப்பைச் சுற்றிலும் ஐடி நிறுவனங்கள் இருப்பதால் காலை மற்றும் மாலை வேளைகளில் ஐடி ஊழியர்கள் அதிகளவில் சென்றுவருகின்றனர். பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைவரும் ‘பீக் ஹவர்ஸ்’ நேரத்தில் குவிவதால், அந்தப்பகுதி பரபரப்புடன் காணப்படும். கடுமையான போக்குவரத்து நெரிசல்களைத் தாண்டித்தான் அவரவர்களுக்கான இடங்களை பொதுமக்கள் சென்றடைகின்றனர்.
ஆனால் போக்குவரத்துத் தலைமைக் காவலர் சாலமன் சதீஷ் இந்த நெருக்கடிகளை பணிச்சுமையாக கருதாமல் மிகவும் சுறுசிறுப்புடன் இயங்கி வருகிறார். தனது பணியை அர்ப்பணிப்பு உணர்வுடனும், சுறுசுறுப்புடனும் செய்யும் சாலமன் சதீஷ், சிக்னலை மீறும் வாகன ஓட்டிகளிடமும் கனிவாக அறிவுரைச் சொல்லி அனுப்பிவைக்கிறார்.
மேலும் படிக்க | மாணவியின் நன்றியுணர்ச்சி புதிதாக இருந்தது: அரசுப் பள்ளி ஆசிரியர் நெகிழ்ச்சிப் பதிவு
அவரின் இந்த நடவடிக்கை அந்தப் பகுதியில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், சாலமன் சதீஷ் வழக்கம்போல் சிக்னலில் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு கார் ஒன்று வந்துள்ளது. அதில் இருந்து இறங்கிய 6 வயது சிறுமி, நேராக சாலமனிடம் வந்து, ‘அங்கிள்...உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இந்த வழியாத்தான் டெய்லியும் ஸ்கூலுக்குப் போயிட்டு வர்ரேன். உங்கள காரில் இருந்து பார்ப்பன். நீங்க நல்லா டியூட்டி பாக்குறீங்க. எல்லா டிராஃபிக் போலீஸ் அங்கிள் மாதிரி உட்கார்ந்துனு இருக்காம ‘ஹானஸ்டா’ உங்க டியூட்டிய பாக்குறீங்க’ என்று கூறி டைரி ஒன்றை பரிசாகக் கொடுத்தார். இதனால் அந்த இடத்திலேயே சாலமன் நெகிழ்ந்துப் போனார். திடீரென குழந்தை இறங்கி வந்து, பாராட்டி வாழ்த்துவிட்டு பரிசையும் தந்துவிட்டுப்போவது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளதாக சாலமன் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவத்தில் கூடுதலான இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. காவலருக்கு டைரியை பரிசாக கொடுத்த 6 வயது சிறுமி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியனின் மகள். அந்தச் சிறுமியின் பெயர், ‘மோனா மிர்தண்யா’!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR