தன்னிடம் ஆன்லைனில் இயற்பியல் படித்த மாணவிக்குப் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்ததையும், அவர் தனக்குச் செய்த மரியாதை குறித்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஞா.பெர்ஜின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஞா.பெர்ஜின். கற்றல் - கற்பித்தல் அனுபவங்கள், மாணவர்களுடனான உரையாடல், படித்த புத்தகம், மாணவர்களுக்கான ஊக்கம், தன்னம்பிக்கை குறித்து தொடர்ந்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் எழுதிய ஃபேஸ்புக் பதிவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த மாணவியையும், ஆசிரியரின் உன்னதமான பணியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்தப் பதிவு இதோ:
''இரண்டு வருடங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலுள்ள நண்பர் சத்தியவேல் தங்கள் பள்ளிக்கு அருகே இருக்கும் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியப் பணியிடம் காலியாக இருப்பதால் அவர்களுக்கு ஏதாவது வகையில் உதவமுடியுமா என்று கேட்டார். அப்பொழுது (கொரோனாவுக்கு முன்பு) ஆன்லைன் வகுப்பு இப்பொழுது மாதிரி பிரபலமாகவில்லை.
மாலையில் அவர்களது பள்ளியை ஸ்கைப்பில் இணைத்து இயற்பியல் பாடம் நடத்தினேன். அரசு கொடுத்த கணினியின் உதவியோடு அவர்களால் ஆன்லைனில் படிக்க முடிந்தது. அதில் ஒரு மாணவி தான் மஞ்சுமிதா. அப்பொழுதே டாக்டர் ஆவது தான் எனது கனவு என சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. தொடர்ந்து கொரானா வந்தது. இராமநாதபுர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்பட்ட நீட் ஆன்லைன் பயிற்சியிலும் அவரை இணைத்துவிட்டேன். நானும் சில வகுப்புகளை நடத்தியிருக்கிறேன்.
முதல் முயற்சியின் மூலம் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்த வருடம் நடந்த நீட் தேர்வில் அவர் வெற்றி பெற்றார். தான் நினைத்த மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை. ஆனால் பல் மருத்துவப் படிப்பை படிக்கத் தெரிவு செய்யப்பட்டு கல்லூரியிலும் சேர்ந்து விட்டார்.
மேலும் படிக்க | ’தாலிக்கு தங்கம் திட்டம்’ - பயனடைந்தவர்கள் இத்தனை பேரா ? | முழுவிவரம் உள்ளே
நேற்று குமரி அறிவியல் பேரவையின் சார்பில் செஞ்சிக் கோட்டையில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான களப்பயணத்தில் கலந்து கொள்வதற்காக செஞ்சி சென்றிருந்தேன். இதை எப்படியோ கேள்விப் பட்ட மஞ்சுமிதா தன் பெற்றோருடன் அங்கு வந்தார். ஆன்லைன் வகுப்பில் தான் பார்த்திருக்கிறேன். அதனால் நேரில் பார்த்தவுடன் எனக்கு அடையாளம் தெரியவில்லை.
அவர் என்னிடம் வந்து. ''சார் என்னைத் தெரிகிறதா?'' என்று கேட்டார். யோசித்துப் பார்த்தேன். எனக்கு ஞாபகம் வரவில்லை. ''நான் உங்களிடம் ஆன்லைன் வகுப்பில் இயற்பியல் பாடம் பயின்றேன்''. சற்று கூர்ந்து கவனித்த போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.
''நல்லது. இப்போது என்ன செய்கிறாய்? மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததா?'' என்று கேட்டேன். அதற்குள் அவருடைய அம்மா கொண்டுவந்திருந்த பையிலிருந்து ஒரு தட்டை எடுத்தார்கள். அந்தத் தட்டில் ஒரு இனிப்பு பார்சல் அதன் மேல் வெற்றிலை பாக்கு, அதன் மேல் பூ மற்றும் பழம் வைத்து மகளிடம் கொடுத்தார்கள்.
''சார் உங்களுக்கு நான் மரியாதை செய்ய வேண்டும். நான் பல் மருத்துவராக கல்லூரியில் சேர்வதற்கு நீங்களும் உதவியிருக்கிறீர்கள். எனக்குப் பணமெல்லாம் கொடுப்பதற்கு வசதியில்லை. ஆனால் குருவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீங்கள் இங்கு வந்திருப்பதைத் தெரிந்துகொண்டேன். அதான் இங்கு வந்தேன். இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று பேசிக்கொண்டே தட்டை நீட்டினாள். அவர் பேசிக்கொண்டே இருந்தார். எனக்குப் பேச்சே வரவில்லை. நிஜமாகவே எனக்கு அழுகை வந்துவிட்டது. நான் செய்தது மிகச் சிறிய உதவி. அது அவருக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிய உதவியாக இருந்திருக்கிறது.
மேலும் படிக்க | உயிரைப் பணயம் வைத்த மினி கிளினிக் மருத்துவர்களை நீக்குவதா?- அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
இந்தக் குடும்பத்தைப் பார்த்தாலே அவர்கள் ஏழ்மை நிலை உங்களுக்குப் புரியும். அப்பா அம்மா படிக்காதவர்கள். முதல் தலைமுறையாக மருத்துவம் படிக்கச் செல்லவுள்ளார். அந்த ஊர் மக்கள் இப்போதே அவரை எங்கள் டாக்டரம்மா என்று அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். அங்கு வந்த ஊர் தலைவர், எங்கள் ஊரிலிருந்து முதல் டாக்டர் என்று பெருமைப்பட்டுக் கொண்டார். ஊரே அவரைக் கொண்டாடுகிறது. சாதாரணமாக என் வகுப்பில் படித்து முடித்துச் செல்லும் மாணவர்களைப் பார்க்கும் போது அதிகபட்சம் ஒரு புன்னகையோடு முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஆன்லைனில் பயின்ற இந்த மாணவியின் நன்றியுணர்ச்சி (gratitude) எனக்குப் புதியதாக இருந்தது. அந்த மகிழ்ச்சியினை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
டாக்டர் கனவு கண்ட இந்தக் குடும்பம் அந்தக் கனவை எட்டி விட்டது. இந்த நிகழ்வுக்கு வந்த தமிழக அமைச்சர் கே. எஸ்.மஸ்தானின் மகன் (அவர் அந்த ஊராட்சி மன்றத் தலைவர்) இவரின் மேற்படிப்புக்கு உதவி செய்வதாக கூறியிருக்கிறார். இதனைப் படிக்கும் அனைவரும் மஞ்சுமிதா தனது மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கு மனதார வாழ்த்துங்கள். உங்கள் வாழ்த்து அவருக்கு நேர்மறை ஆற்றலை உருவாக்கும்''.
இவ்வாறு ஆசிரியர் ஞா.பெர்ஜின் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G