அண்ணா சாலையும், கருணாநிதி சிலையும்.! - 47 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன ?
Karunanidhi Statue Story : அண்ணா சாலையில் வரிசையாக நிற்கும் திராவிடத் தலைவர்களின் சிலைகள். கருணாநிதி சிலைக்கு மட்டும் நடந்த வரலாறு என்ன ? உடைக்கப்பட்ட பின்னணிக் கதை.!
அது 1971ம் ஆண்டு. இன்னும் சரியாச் சொன்னால் ஆகஸ்டு மாதம் 14ம் தேதி. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் முக்கியமான ஒரு பாராட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்ததற்குப் பாராட்டு தெரிவித்து, பெரியார் தலைமையில் நடைபெற்ற விழா அது. அந்த விழாவில், பெரியார் தனது உரையில் முக்கியமான ஒரு கோரிக்கையை விடுத்தார். ‘செயற்கரிய சாதனை செய்த தம்பிக் கருணாநிதிக்கு தலைநகரில் சிலை வைக்க வேண்டும்’ என்ற கோரிக்கைதான் அது.
இந்த அறிவிப்பை முதன்முறையாக பெரியார் அப்போது சொல்லவில்லை. அதற்கு முன்னதாக, அறிஞர் அண்ணா இருக்கும் போதே, அதாவது 1968ம் ஆண்டே கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் பெரியார்தான். ஏன் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று இரண்டு அறிக்கைகளையும் வெளியிட்டார் பெரியார். அந்தக் கோரிக்கை அப்படியே கிடப்பில் இருந்தது. பின்னர்தான் இந்த மேடையில் அந்த அறிவிப்பை மீண்டுமொருமுறை பெரியார் அறிவித்தார்.
மேலும் படிக்க | காவி நிறத்திலிருந்து பழைய நிலைக்கு மாறிய அம்பேத்கர்!
அப்போது மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் மகிழ்ச்சியில் எழுந்து நன்கொடை கொடுத்தார் என்று இப்போதும் திராவிட கழகத்தினர் பதிவு செய்வதுண்டு. திமுகவின் அத்தனைத் தலைவர்களும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட பெரியாரின் இந்த அறிவிப்பில், கலைஞர் கருணாநிதிக்கு மட்டும் உடன்பாடில்லை. தீவிரமாக மறுத்தார் கருணாநிதி. ‘முதலில் பெரியாருக்கே சிலை. அதன்பிறகு மற்றதை பார்த்துக்கொள்ளலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்தார்.
மறுத்த கருணாநிதி...நிறைவேற்றிய திராவிடர் கழகம்
மேடையில் அறிவித்தபடியே, அண்ணா சாலையில் உள்ள சிம்சன் பகுதியில் கம்பீரமாக பெரியார் சிலை ஒன்றை அமைத்தார் கருணாநிதி. பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் மணியம்மை முன்னிலையில் இந்தச் சிலையை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி திறந்துவைத்தார். ‘சொன்னபடியே பெரியாருக்கு சிலை வைத்தாயிற்று. அதேபோல் பெரியார் விருப்பபடி திராவிடர் கழகம் சார்பில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும். இனியும் சாக்குப் போக்கு, மறுப்புக் கூறி, எங்களிடமிருந்து கருணாநிதி தப்பித்துக் கொள்ள முடியாது. அடுத்து உடனடியாக திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலைச் சிலை அமைத்துத் திறப்போம். இதற்கு மறுப்பு ஏதும் கூறக்கூடாது'' என்று அந்த நிகழ்ச்சியிலேயே மணியம்மை அறிவித்தார்.
அதற்கான பணிகளை திராவிடர் கழகம் மேற்கொண்ட போது, ‘திராவிடர் கழகம் தனக்கு சிலை வைப்பதில் உடன்பாடில்லை’ என்று அறிவித்தார் கருணாநிதி. இந்த சிலை திறப்பு விவகாரத்தில் சட்ட ரீதியிலான சில சிக்கலையும் அப்போதைய அதிமுக கொடுத்துள்ளது. அதனை சட்ட ரீதியாக திராவிடர் கழகம் எதிர்கொண்டு வென்றுள்ள ‘மினி’ வரலாறும் உண்டு. பின்னர், பலதரப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு 1975ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. சரியாக அண்ணா சாலையில் அமைந்துள்ள தர்கா அருகே கருணாநிதியின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. சொன்னபடியே கருணாநிதியின் சிலையை அமைத்த மணியம்மை, விழாவுக்குத் தலைமைத் தாங்கினார். குன்றக்குடி அடிகளார் சிலையை திறந்துவைத்தார். அந்தச் சிலையில், இரண்டு விரல்களை மடக்கியபடியும், மூன்று விரல்களை காட்டியபடியும் கருணாநிதி நின்றுகொண்டிருப்பார்.!
அண்ணா சாலையின் கதையும், திராவிடத் தலைவர்களும்.!
முதலில், அண்ணா சாலையில் அமைந்துள்ள தர்கா இடத்தை கருணாநிதியின் சிலையை வைக்கத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அதற்கு முன்னதாக அண்ணா சாலை எனப்படும் மவுண்ட் ரோட்டின் கதையை பட்டென தெரிந்துகொள்ளலாம். கோட்டையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசித்த ஆங்கிலேயர்கள், இப்போதைய பரங்கிமலை எனப்படும் புனித தோமா (St.Thomas Mount) மலை தேவாலயத்துக்குச் செல்வது வழக்கம். வாரந்தோறும் வழிபடுவதற்காக தேவாலயத்துக்குச் செல்வதற்காகவே உருவாக்கப்பட்ட சாலைக்கு அப்போதைய ஆங்கிலேயர்கள் மவுண்டன் பிரபுவின் பெயரையே வைத்தார்கள்.
மேலும் படிக்க | பெரியார், அண்ணா சிலைகளுக்கு காவிதுணி போர்த்திய மர்ம நபர்கள்
அதுவே மவுண்ட் ரோடு. அதன்பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்து, வரலாறு மாறி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து, மவுண்ட் ரோட்டை ‘அண்ணா சாலை’ என்று பெயர் மாற்றம் செய்தது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததும், சென்னை நகரின் இதயப் பகுதியாக விளங்குவதுமான அண்ணா சாலையின் கடற்கரை ஒட்டிய சிம்சன் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. அங்கிருந்து சிறிது தூரம் வந்தால் அண்ணா சாலையின் வாலாஜா சாலை சந்திப்பு.
அந்த இடத்தில் பேரறிஞர் அண்ணா சிலை. அங்கிருந்து சில தூரம் நடந்துசென்றால் மிகப்பழமையான தர்கா அமைந்துள்ள இடத்தில்தான் கருணாநிதி சிலை அமைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டு, அதனை சாத்தியமாக்கினர். பின்னாளில் கருணாநிதியின் சிலையைத் தாண்டி இன்னும் சற்று முன்னே வந்தால் ஸ்பென்சர் ப்ளாஸா எதிரில் எம்.ஜி.ஆர் சிலை அமைக்கப்பட்டது. இப்படியாக, அண்ணா சாலையை பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று வரிசையாக திராவிடத் தலைவர்கள் அலங்கரித்தார்கள்.!
எமர்ஜென்சியும், எம்.ஜி.ஆர் மரணமும்
வெற்றிகரமாக நிறுவப்பட்ட கருணாநிதியின் சிலை வெகுநாட்கள் நிலைக்கவில்லை. 1975ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதன்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன் பிறகு 13 ஆண்டுகள் கருணாநிதி எதிர்கட்சித் தலைவராகவே இருந்துவந்தார். இப்போதும், ஒரு கட்சியின் தொண்டர்களை தொய்வடைய விடாமல் இயக்கும் தலைவராகவும், தமிழக அரசின் எதிர்கட்சித் தலைவராகவும் ஒருவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று கலைஞர் கருணாநிதியை உதாரணமாக அரசியல் விமர்சகர்கள் சொல்வது, இந்த 13 ஆண்டுகால கருணாநிதியைத்தான்.!
‘அவர் முதலமைச்சராக இருப்பதைக் காட்டிலும் எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது இன்னும் துடிப்புடனும், அயராத உழைப்பையும் செலுத்தக்கூடியவர். அவர் வேகத்துக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியாது. கோப்பைகளை எடுத்துக்கொண்டு சட்டமன்றத்துக்கு எதிர்கட்சித் தலைவராக கேள்வி கேட்க கிளம்பிய பின்னர், அவர் வேறொரு கருணாநிதி.!’ என்று பல ஆண்டுகள் கலைஞர் கருணாநிதியுடன் இருந்த துரைமுருகன் நெகிழ்வுடன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | பங்கேற்ற 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே தீர்ப்பாக பெற்ற தலைவர் கருணாநிதி
இந்தச் சூழலில்தான், அதிமுக நிறுவனத் தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் 1987ஆம் ஆண்டு காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது எம்.ஜி.ஆர் தொண்டர்கள் சிலர் கருணாநிதியின் சிலையைத் தாக்கினர். அதில் ஒருவர், கடப்பாறையைக் கொண்டு சிலையைச் சேதப்படுத்தி, ஆக்ரோஷமாக இடித்துத் தள்ளினார். இந்தப் புகைப்படம் அப்போதே பத்திரிக்கைகளில் இடம்பெற்றது. 12 ஆண்டுகள் மட்டுமே கருணாநிதியின் சிலை அந்த இடத்தில் இருந்தது. சிலையுடைப்பால் திமுக தொண்டர்கள் கொதித்தெழுந்த நிலையில், கலைஞர் கருணாநிதி தனக்கே உரித்தான பாணியில் முரசொலியில் ஒரு கவிதை எழுதினார். அது இதுதான்,
‘உடன்பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்தச் சின்னத் தம்பி
என் முதுகில் குத்தவில்லை,
நெஞ்சிலேதான் குத்துகிறான்
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!!"
47 ஆண்டுகளுக்குப் பிறகு.!
கருணாநிதி சிலை உடைக்கப்பட்ட பின்னர், மீண்டும் அதே இடத்தில் சிலையை நிறுவ வேண்டும் என்று திராவிடர் கழகம் முன்வந்தது. அந்த இடத்தில் வேறு யாருக்கும் சிலை வைக்க கூடாது என்று முறையாக பதிவும் செய்துகொண்டது. ஆனால், கருணாநிதியோ விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அதுமட்டுமில்லாமல், அவருடைய சிலை இருந்த அந்த பீடத்தையும் முழுமையாக நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். அதன்பிறகு கருணாநிதி சிலை விவகாரம் வெகு ஆண்டுகளாக அடங்கியிருந்தது.
மேலும் படிக்க | கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க.ஸ்டாலின் - ஹெச்.ராஜா
தொடர்ந்து, 40 ஆண்டுகள் முதலமைச்சராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து வந்த கருணாநிதி, உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், 2018ம் ஆண்டு காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் மறைவை அடுத்து மீண்டும் அவருக்கு சிலை வைக்கும் குரல்கள் மெல்ல எழுந்தன. அதற்கான வாய்ப்பாக, 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துமுடிந்தது. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என்று பதவியேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது தலைமையிலான திமுக அரசு பதவியேற்றதும், மெல்ல எழுந்து வந்த குரல், மீண்டும் வலுப்பெற்றது.
அதற்கான நாளும் வந்தது. தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவித்தார். ரூ.1.56 கோடி செலவில் இந்த சிலை அமைக்கும் பணிகள் நடந்துமுடிந்து நாளை திறக்கப்படுகிறது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார்.
கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருணாநிதியின் சிலை திறக்கப்படுகிறது. திமுகவின் வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க சிதைக்கப்படும் சிலைகளின் கதைகள் வரலாறு நெடுக இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ரஷ்யாவில் ஸ்டாலின் மறைந்த பிறகு அவரது சிலைகள் அத்தனையும் தகர்த்தெறியப்பட்ட வரலாறு உலகமறிந்தது. இந்தியாவில் எத்தனையோ சிலைகள் படையெடுப்பாளர்களால் சேதப்படுத்தப்பட்டது ; தகர்க்கப்பட்டது ; அவமானப்படுத்தப்பட்டது. தலையில்லாத புத்தர் சிலைகள் தற்கால அரசியல் குறியீடாகவே பார்க்கப்படுகின்றன. அரசியலின் மெயின் ஸ்டீரீம் தளத்திலும் சரி, அரசியல் தத்துவச் சண்டையானாலும் சரி, சிலைகள் மிக முக்கியப் பாத்திரத்தை வகிக்கின்றன. ஏனெனில், ‘சிலை’ என்பது வெறும் ‘சிலை’ மட்டுமல்ல.!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR