பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்கள்! ராணுவ முகாமில் நடந்தது என்ன?
Punjab Bathinda Firing Attack: பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இரண்டு தமிழ்நாடு வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அந்த சம்பவம் குறித்து முழு தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.
Punjab Bathinda Firing Attack: பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அதில் இரண்டு பேர் தமிழர்கள் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவிலுள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.35 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. உடனடியாக, ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இரு தமிழர்கள் மரணம்
உயிரிழந்தவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ராணுவ முகாம் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு, அனைத்து வாயிற்கதவுகளும் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வந்தது. ராணுவ முகாமில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்று பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தமிழக வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தேனி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த சூழலில் தான் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. முதலில் தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்தியதாக சந்தேகம் எழுந்தது. உடனடியாக அங்கிருந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சத்தம் கேட்ட இடம் நோக்கி சென்ற போது 4 ராணுவ வீரர்கள் கிடந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சாகர் பன்னே, சந்தோஷ் நகரல், கமலேஷ், யோகேஷ்குமார் ஆகியோர் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளனர். இதில் கமலேஷ், யோகேஷ் குமார் தான் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள்.
மேலும் படிக்க | பஞ்சாப் பதிண்டா தாக்குதல்: உயிரிழந்த நால்வரில் இருவர் தமிழர்... உடல் நாளை வருகை
முதலில் தீவிரவாத தாக்குதல் என கூறப்பட்ட நிலையில், அதனை ராணுவ அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அதே நேரம் இந்த ராணுவ முகாமில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கி ஒன்று தொலைந்து போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு என்ன காரணம் என்பது தற்போது வரை தெரியவில்லை. வெளிநபர்கள் யாரேனும் இப்படி செய்தார்களா அல்லது உள்ளுக்குள் ஏதேனும் பிரச்சனையா என்பதும் தெரியவில்லை.
சோகத்தில் மூழ்கிய சேலம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள வனவாசி பணங்காடு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் தான் கமலேஷ். 24 வயதாகும் இவர் இந்திய ராணுவத்தில் 2019ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். இவர் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததை அடுத்து இன்று அவரது உடல் சொந்த ஊருக்குகொண்டுவரப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
19 வயதில் ராணுவம்
அதேபோல உயிரிழந்த மற்றொரு வீரரான யோகேஷ் குமார் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். 24 வயதாகும் இவர் தனது 19-வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவரது உடலை அடக்கம் செய்வதற்காக இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர்களின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வனவாசி பணங்காடு, மூனாண்டிபட்டி கிராமமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ