திமுக அரசின் தொலைநோக்கு திட்டங்கள்... பாராட்டு மழையில் முதல்வர் ஸ்டாலின்!
TN People On CM Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் இரண்டரை ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதன் பின் அவரின் அரசு செயல்படுத்திய பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுகுறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.
TN People On CM Stalin: 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற நான்' என அவர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு காலகட்டம் என்பது ஒரு வழக்கமான, சாதரணமான சூழல் இல்லை. உலகமே கொரோனா என்ற பெருந்தொற்றுடன் தங்களது உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் நடுவே போராடி வந்த பெரும் இக்கட்டான காலம்கட்டம். அப்போது நிலவிய பொருளாதார நெருக்கடி, சுகாதார நெருக்கடி என்பது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மட்டுமல்ல 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கட்டிலில் ஏறிய திமுக அரசுக்கும் முன்னிருந்த மிகப்பெரிய சோதனையாகும்.
அரசின் முன்னிருந்த அத்தனை சோதனைக் கற்களையும் நேர்த்தியான செயல்பாடுகள் மூலமாகவும், சரியான திட்டமிடல் மூலமாகவும் சுக்கு நூறாக தகர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்டது மட்டுமின்றி அந்த சமயத்தில் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியதே கொரோனா தொற்று என்று பெருந்துயரில் மக்களுக்கு நிவாரணத்தை அளித்தது எனலாம்.
அரசு கொடுத்த நம்பிக்கை
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக கையெழுத்திட்ட உடன் ஐந்து முக்கிய அறிவிப்புகளுக்கு ஆணை பிறப்பித்தார். கொரோனா நிவாரணத் தொகையாக ரூ. 4000 கொடுக்கப்படும் என்ற அறிவிப்பும், கொரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் செலவை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசே ஏற்கும் என சொன்னது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வேலையும், வாழ்வாதாரமும் மொத்தமாக மாறியவிட்ட சூழலில் அரசு கொடுக்கும் நிதியும், சிகிச்சைக்கான செலவுக்கு பொறுப்பேற்றதும் தங்களின் அடுத்தக் கட்ட வாழ்வுக்கு பெரும் நம்பிக்கையை விதைத்ததாக கூறியிருந்தனர். அந்த சமயத்தில், ஒரு அரசு கொடுத்த நிவாரணத் தொகையினால் மனமகிழ்ந்த ஒரு முதாட்டி சிரித்த புகைப்படம் இன்றும் பலராலும் மறக்க முடியாதது. அதுவே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஒற்றை சாட்சியாக அமைந்துவிட்டது.
இது பெண்களுக்கான ஆட்சி
அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற மாபெரும் திட்டம் பெண்களின் அன்றாட வாழ்வில் மிகப்பெரும் நிம்மதியை அளித்தது. கிராமத்தில் இருக்கும் மூதாட்டி காலை 4 மணிக்கு எழுந்து, தூரமாக இருக்கும் சந்தைக்கு புறப்பட்டு அங்கு தான் விற்பனை செய்ய வாங்கவேண்டிய காய்கறிகள்/மீன்களை வாங்கிவிட்டு, தான் விற்பனை செய்ய நினைக்கும் ஊர்களுக்கெல்லாம் செல்ல பேருந்தைதான் நம்பியிருக்க வேண்டும்.
இது தமிழ்நாட்டை பொறுத்தவரை அதன் பரந்துப்பட்ட பொது போக்குவரத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அத்தகைய பேருந்து பயணத்தை பெண்களுக்கு இலவசமாக வழங்குவதன் மூலம் அவர்களின் அன்றாடத்தை எளிதாக்கிவிட்டது. 10, 20 கி.மீ., தூரத்திற்கு மேல் சென்று வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளே இந்த திட்டத்தின் முக்கிய பயனாளிகள் ஆவார்.
அவர்கள் இந்த திட்டம் குறித்து கூறுகையில், பேருந்து செலவு மிச்சம் பிடித்து தாங்கள் சேமிக்கும் அந்த தொகையை வைத்து முக்கிய செலவுகளுக்கும், கல்வி சார்ந்த செலவுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்கின்றனர். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களை முதன்மையாக வைத்து திட்டமிடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர். இதுமட்டுமின்றி, புதுமைப் பெண் திட்டம், தற்போது தொடங்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை பெண்கள் சுயமரியாதை உடனும், சுயமாக வருமானம் பெற்று தங்களுக்கு என தனித்த சிந்தனை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பளிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | உரிமைத் தொகை: பெண்களின் பொருளாதார தற்சார்பு
அனைவருக்குமான திட்டங்கள்
நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், பள்ளியில் மதிய சத்துணவுடன் காலை உணவும் வழங்கும் திட்டம் போன்றவற்றை அனைத்து தரப்பினரையும் சென்றடைந்த ஒரு திட்டமாக காணப்படுகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு தேவைக்கான திறனை மேம்படுத்துவதிலும், பொது நிர்வாகத்தில் காணப்படும் தொய்வை நீக்குவதில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டமும், மாணவர்களின் ஊட்டச்சத்தில் குறைப்பாடு இல்லாமல் கல்வியில் அவர்களின் கவனத்தை முழுமையாக செலுத்த காலை உணவுத் திட்டமும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கல்வி ஒன்றே எதிர்காலத்தை சீராக்கும் என வெறும் வாய்மொழியாக வழக்கமாக பேசாமல், அதில் அதிக கவனம் செலுத்தி மாநிலத்திற்கும், நாட்டிற்கும் எது தேவை என்ற நீண்டகால நோக்கில் திட்டமிட்டு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது என்பது திமுக அரசையும், மக்களையும் நெருக்கமடையச் செய்துள்ளது எனலாம். மழை பாதிப்புகளை நேரில் கண்டு மக்களின் கருத்துகளை கேட்டது, கிராம சபைக்கு புத்துயிர் அளித்தது, இலங்கை தமிழர் முகாம்களுக்கு அடிக்கடி ஆய்வு செய்வது, நாங்குநேரி மாணவர்கள் மோதலில் உடனடியாக செயல்பட்டது என மக்களுடன் நிற்பது தமிழ்நாடு அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது எனலாம். இதில் நேற்றைய மகளிர் உரிமைத் தொகை திட்டம் அரசுக்கு மக்களுடனான உறவில் உச்சத்தை அடைந்துள்ளது என்ற சொன்னால் அது மிகையல்ல.
மேலும் படிக்க | குடும்பங்களின் வளர்ச்சியில் பெண்களுக்கான உரிமைத் தொகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ