சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கம்: நனவாகும் 15 ஆண்டு கனவு!
தாம்பரம் - செங்கல்பட்டு 6 வழி பறக்கும் பாதை, செங்கல்பட்டு - திண்டிவனம் 8 வழிப் பாதை ஆகியவற்றுக்கான ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடிக்க பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!
தாம்பரம் - செங்கல்பட்டு 6 வழி பறக்கும் பாதை, செங்கல்பட்டு - திண்டிவனம் 8 வழிப் பாதை ஆகியவற்றுக்கான ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடிக்க பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; தமிழ்நாட்டின் மிக முக்கியமான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம்- திண்டிவனம் இடையிலான பகுதியை 8 வழிச்சாலையாகவும், 6 வழி பறக்கும் சாலையாகவும் விரிவாக்குவதற்கான பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழக மக்களின் 15 ஆண்டு கனவு இதன்மூலம் நனவாகிறது. இது பா.ம.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
சென்னை தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு இடையிலான 24.5 கி.மீ நீள பாதை ரூ. 3,309 கோடியில் பறக்கும் சாலையாக அமைக்கப்படுகிறது. அதேபோல், செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான 68.50 கி.மீ நீள சாலை ரூ.3,062 கோடியில் 8 வழிச்சாலையாக அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான முன் தகுதி காண் ஒப்பந்தப்புள்ளிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கோரியிருக்கிறது. இந்த ஆயத்த பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி முடிவடைந்தால் அடுத்த ஓராண்டுக்குள் தாம்பரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தாம்பரம் - திண்டிவனம் 4 வழிச்சாலை கடந்த 2005-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அப்போதிலிருந்தே இந்த சாலையை 6 வழிச்சாலையாகவும், பின்னர் 8 வழிச்சாலையாகவும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்கு 2012-ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்ட போதிலும், பணிகள் தொடங்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் இந்தத் திட்டத்திற்கான நிதி வேறு பணிகளுக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் சாலை விரிவாக்கம் கைவிடப் பட்டது. அதுமட்டுமின்றி திண்டிவனம் - திருச்சி நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டமும் முடக்கப்பபட்டது.
தாம்பரம் - திண்டிவனம் சாலை விரிவாக்கத்திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்திட்டம் முடக்கப்பட்டதால் மக்கள் அனுபவித்த சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் நிலையில், 4 வழிச்சாலையில் அகலம் போதுமானதாக இல்லாததால் செங்கல்பட்டு முதல் சென்னை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும் வாடிக்கையாகி விட்டன. சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிப்பதே அதிசயமாகிவிட்டது.
இந்திய சாலைகள் சங்கம் வகுத்துள்ள விதிகளின்படி ஒரு சாலையில் ஒரு நாளைக்கு 12,000-க்கும் கூடுதலான வாகனங்கள் பயணித்தால் அந்த சாலை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், அதை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அளவுக்கு, அதாவது ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணம் செய்யும் போதிலும் தாம்பரம் - திண்டிவனம் சாலை 4 வழிச்சாலையாகவே தொடர்வது நல்வாய்ப்புக் கேடாகும். இந்த நிலைக்கு இப்போதாவது முடிவு கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும் முக்கியக் காரணம் என்பது பெருமிதம் அளிக்கிறது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தான் வட மாவட்டங்களையும் தென் மாவட்டங்களையும் இணைக்கும் உயிர்நாடிப் பாதையாகும். இந்த சாலை விரிவாக்கப்பட்டால், அது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். எனவே, தாம்பரம் - செங்கல்பட்டு 6 வழி பறக்கும் பாதை, செங்கல்பட்டு - திண்டிவனம் 8 வழிப் பாதை ஆகியவற்றுக்கான ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடித்து, கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, திண்டிவனம்- திருச்சி இடையிலான பகுதியையும் 8 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.