தொல்.திருமாவளவனின் கண்டனமும் கோரிக்கையும் - உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர்
உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. ஏற்கனவே திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனுடன் தனது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் பட்டியலும் நேற்று ஒதுக்கப்பட்டது.
ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்த விவகாரம் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்த விவகாரத்திற்கு விடுதலை சிறத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து, கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை சிறத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை "ராஜினாமா" செய்ய வைத்து "கூட்டணி அறத்தைக்" காத்திட வேண்டுமென முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க: "பொறுப்பை விட்டு விலகுக" திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
விடுதலை சிறத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கையை அடுத்து, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழகத் தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. மேலும் கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் இடங்கள் பங்கீடு செய்யப்பட்டதும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது. அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் படிக்க: விரிசல் விடுகிறதா திமுக கூட்டணி? என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்!!
பேரறிஞர் அண்ணா சொன்ன "கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்" மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.
எனவே கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன். அதேநேரத்தில் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: திமுக தலைவர் ஸ்டாலின் காட்டிய அதிரடி - அடங்கி போன சேலம் நிர்வாகிகளின் ஆட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR