புது டெல்லி: நேற்று திகார் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னால் நிதியமைச்சர் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், இன்று பாராளுமன்றத்துக்கு சென்றார். அப்பொழுது அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். அந்த சமயத்தில், நேற்று மக்களவையில் நிர்மலா சீதாராமன் "நான் வெங்காயத்தை சாப்பிடுவதில்லை" எனக் கூறினார் என கேட்டனர். அதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம், நேற்று நிதியமைச்சர் வெங்காயத்தை சாப்பிடுவதில்லை எனக் கூறியிருந்தார். பிறகு அவர் என்ன தான் சாப்பிடுகிறார்? ஆனைக்கொய்யாவை (Avocado) சாப்பிடுகிறாரா? எனக் கேள்வி எழுப்பினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் வெங்காயத்தை பற்றி தான் பேச்சாக இருக்கிறது. பாராளுமன்றம் முதல் பொது மக்களை வரை வெங்காயத்தின் விலை பற்றி தான் பேச்சு. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் விலை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. 


வெங்காய விலை உயர்வு குறித்து நேற்று பாராளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் காய்கறியை அதிகம் உட்கொள்வதில்லை என்றும், அது பயன்படுத்தப்படாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். நான் வெங்காயம் - பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயத்துடன் அதிகம் சம்பந்தமில்லாத ஒரு குடும்பத்திலிருந்து நான் வந்திருக்கிறேன் எனக் கூறினார். இவரின் இந்த பேச்சு பெரும் விவதத்தை ஏற்படுத்தி உள்ளது. 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சை, சமூக வலைதளங்களில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி உள்ளது. 


106 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு சிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம்,"106 நாட்களுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார். மேலும் இன்று காலை காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்கள் மத்தியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பொருளாதாரத்தை கையாளுவதில் உள்ள குறைகளை குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். 


இதனையடுத்து அவர் பாராளுமன்றம் சென்றார். அங்கு தான் அவரிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வெங்காயம் கருத்தை குறித்து கேள்வி எழுப்பினர்.