கொரோனா நான்காவது அலை அச்சம்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?
கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் நான்காவது அலை சீனா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமடைந்துள்ளதை அறிய முடிகிறது. இந்தியாவில் எப்போது தொடங்கும் எனத் தெரியாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர். G.R.இரவீந்திரநாத், டாக்டர் A.R.சாந்தி, டாக்டர்.ஜி.ரமேஷ்,டாக்டர்.முத்தமிழன்,டாக்டர் சத்தியா, P.காளிதாஸன், எஸ்.சிவகுரு, ராஜசேகர், திண்டுக்கல் சாந்தி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அதில் அவர்கள் கூறியதாவது:
''தமிழ்நாடு அரசு, சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை் உருவாக்குவது வரவேற்புக்குரியது. பாராட்டுக்குரியது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் தென் கொரியா, ஹாங்காங், சீனா போன்ற நாடுகளிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் குறித்து அலட்சியம் காட்டக் கூடாது என உலக நல நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்று கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்களின் ஆய்வு கூறுகிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர். அனைவரும் முகக் கவசம் அணிவதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
இத்தகைய சூழலில் கொரோனா நான்காவது அலை ஏற்பட்டாலும் , அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு தனது மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
அதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்.
தமிழகத்தில் இன்னும் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.2 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட வேண்டியிருக்கிறது. அது மட்டுமின்றி, சிறார்களுக்கான தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கும் பணி இருக்கிறது. நான்காவது அலை ஏற்படுகிறதா? எனக் கண்காணிக்க கொரோனா பரிசோதனைகளும் தினந்தோறும் செய்ய வேண்டியுள்ளது.
மேலும் படிக்க | அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்..? அறிக்கை வெளியிட்ட திமுக அரசு..!
கொரோனா தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசிக் குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டியுள்ளது. கொரானா தடுப்பு, கொரோனா சிகிச்சை, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் நல்ல அனுபவம் பெற்ற இம் மருத்துவப் பணியாளர்களின் சேவை இந்த நேரத்தில் அவசியப்படுகிறது.
இச்சூழலில் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை, மருத்துவர்களை, செவிலியர்களைப் பணி நீக்கம் செய்வது சரியல்ல. அது மக்கள் நலனுக்கு எதிரானது.
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மினி கிளினிக் பல் நோக்கு மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் இதர பணியாளர்களையும், கோவிட் பணிக்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்களையும், முதுநிலை மருத்துப்படிப்பை முடித்த மருத்துவர்களையும் இம்மாத இறுதியில் பணி நீக்கம் செய்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அத்தகைய முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும்.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், கொரோனா பணியில் சேரப் பலரும் தயங்கிய நேரத்தில், இந்த மருத்துவப் பணியாளர்களும், மருத்துவர்களும், செவிலியர்களும் தான் தங்கள் உயிரையும் துச்சமென கருதி,அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவப் பணியில் சேர்ந்தனர்.
இதை மனதில் கொண்டு,அவர்களது சேவையை மதித்து, அவர்களுக்குப் பணி நீட்டிப்பும், பணிப் பாதுகாப்பும் மனிதநேய அடிப்படையில் வழங்கிட வேண்டும். அதே போல், ஏற்கெனவே எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏறத்தாழ 120 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ,கொரோனா முதல் அலை பரவிய காலம் தொட்டே, பல மாதங்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக கொரோனா பணி ஆற்றிவரும் அத்தகைய மருத்துவர்களுக்கு, உடனடியாக சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொண்டு பணி நிரத்தரம் வழங்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
"அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வு காண முயல்வேன். அனைவருக்கும் அவரவர் படிப்புக்கேற்ற, தகுதிக் கேற்ற வேலை என்பது அரசின் லட்சியம் "என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில், "ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படும்" என உறுதிமொழி அளித்துள்ள நிலையில், மருத்துவத் துறை பணியாளர்கள் பணி நீக்கம் என்பது சரியான நடவடிக்கையாக அமையாது,என்பதை கவலையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29.03.2022 காலை சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்''.
இவ்வாறு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | முதலமைச்சர் ஐயா நாங்க என்னபாவம் பண்ணினோம் ? கதறும் திருநங்கைகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G