போலீஸார் மாமூல் வாங்கினால் கிரிமினல் நடவடிக்கை - உயர்நீதிமன்றம் அதிரடி!
மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரியார் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை அருகில் பெட்டிக் கடை நடத்திவந்தவரிடம் வாரந்தோறும் 100 ரூபாய் மாமூல் வாங்கியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் கே.குமாரதாசுக்கு மூன்றாண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குமாரதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகமானது அல்ல என்று கூறி அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த தண்டனையிலிருந்து மாமூல் பெறுவதை காவல் துறை உயரதிகாரிகள் தீவிரமாக கருதவில்லை என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதி மாமூல் வாங்குவதும் குற்றம் என்றாலும் அவர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுவதாகவும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தார்.
இந்த சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் செல்லரிக்கச் செய்கிறது என வேதனை தெரிவித்த நீதிபதி, ஊழலை கையாள அமைக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை நேர்மையான அதிகாரிகளை நியமித்து வலுப்படுத்த வேண்டுமென்றும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்ற அரசு ஊழியர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையினர் மாமூல் வாங்குவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும், நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வாங்கி கொண்டு ஆக்கிரமிக்க அனுமதிப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மாமூல் வாங்குவதை கட்டுப்படுத்த உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதி சம்பந்தப்பட்டவர்கள் மீது வெறும் துறை ரீதியான நடவடிக்கையை மட்டும் எடுக்காமல் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | களமிறங்கும் சசிகலா - ஓபிஎஸ்ஸின் டெல்லி மூவ்! எடப்பாடி முக்கிய ஆலோசனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR