இனி பிப்., 24 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதலமைச்சராகவும், AIADMK-வின் பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு (J. Jayalalithaa) சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். இதை தொடர்ந்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) இன்று திறந்து வைத்தார். 


பெண் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்ததற்காகவும், பெண் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டுவந்ததற்காகவும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ‘ஜெயலலிதா வளாகம்' என்று பெயர் சூட்டப்படும் என்றும், உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்றும் சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


அந்த அறிவிப்பின்படி, உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலையை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. சிலை நிறுவுவதற்கான பீடம் அமைக்கப்பட்ட நிலையில், மின்விளக்குகளால் சிலை ஒளிரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று ஜெயலலிதாவின் வேதா இல்லம் (Vedha Illam) திறந்து வைக்கப்பட்ட பிறகு, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.


ALSO READ | மெரினாவில் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி


துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (O. Panneerselvam), அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் 9 அடி உயர முழு உருவ சிலை திறக்கப்பட்டது. லேடி வெலிங்டன் கல்லூரியில் பெயர் மாற்றப்பட்ட ஜெயலலிதா வளாகத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ஜெயலலிதா பெயர் சூட்டி திறக்கப்பட்டது. மெரினாவில் ஜெயலலிதா சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டது. ஜெயலலிதா சிலை மீது போர்த்தப்பட்டிருந்து பச்சை நிற போர்வையை ட்ரோன் மூலம் அகற்றி முதலமைச்சர் திறந்து வைத்தார். அண்ணா பல்கலை. மாணவர்களின் ட்ரோன் மூலம் ஜெயலலிதா சிலை மீது மலரும் தூவப்பட்டது.



இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, சோதனைகளை வென்று காட்டியவர் ஜெயலலிதா என்றும் பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக தமிழக அரசு இருக்கிறது என்றும் தெரிவித்தார். இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24 ஆம் தேதியன்று ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். ஆண்டு தோறும் ஜெயலலிதா பிறந்தநாளில் சென்னை மெரினாவில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் பழனிச்சாமி.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR