கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம், வேலைநிறுத்த போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சங்கத்தினரை அரசு அழைத்து பேசும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் ‘அங்கீகாரம் பெற்ற சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ‘போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் இடத்துக்கு புதிய மருத்துவர்கள் நியமிப்படுவார்கள்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.


எனினும் அரசின் எச்சரிக்கையை பொருட் படுத்தாமல்  மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். 


இதனிடையே நேற்று பிற்பகல் 2 மணி வரை கெடு விதித்திருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் பணிக்கு திரும்பாமல் இருந்தனர். அரசு மருத்துவர்கள் இன்று காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் தமிழக அரசு கெடு விதித்து இருந்தது. பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.


இந்நிலையில் 8-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். சென்னையில், அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது,  முதல்வர் பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தார். மேலும் போராட்டத்தின் போது அரசு மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.