திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், ஆரணி, வந்தவாசி, உள்ளிட்ட 12 வட்டாரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் 49 அரசு விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு விடுதிக் காப்பாளர், விடுதி சமையலர், விடுதி தூய்மைப் பணியாளர்கள் என பல பேர் பணி நியமனம் செய்யப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர். மாணவர்கள் நாட்கள் தவறாது விடுதியில் தங்கி பயின்று வருகிறார்களா என்றும் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், கண்காணிப்பாளர், அலுவலக எழுத்தர் உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு விடுதிக்கும் 55 மாணவர்கள் என 49 விடுதிகளில் சுமார் 2ஆயிரத்து 963 மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இங்கு தங்கிப் பயிலும் தாய் தந்தை இழந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு 3 வேளையும் சத்தான உணவு மற்றும் வாரம் ஒருமுறை இறைச்சி உள்ளிட்டவை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக பெரும்பாலான நிதியை அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. அதன்படி, மாணவர் விடுதியில் ஒரு மாணவனுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும், கல்லூரி மாணவர் விடுதிக்கு ஒரு மாணவனுக்கு 1100 ரூபாயும் அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 49 விடுதிகளுக்கு மாணவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்குவதற்காக ஒரு மாதத்திற்கு 32 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 



அப்படி ஒதுக்கப்படும் நிதி மாவட்டம் முழுவதிலும் உள்ள 49 விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு முறையாக சென்று சேருகிறாதா என்றால் அதில் கேள்விக்குறியே வைக்கப்படுகிறது.வாளவெட்டி, தச்சம்பட்டு, அண்டம்பள்ளம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் வட்டத்திலுள்ள மாணவர்கள் விடுதியில் பல மாதங்களாகத் தங்குவதில்லை. ஆனால் விடுதியில் மாணவர்கள் வந்து தங்கிப் பயின்றதாக மாதா மாதம் ஒரு மாணவனுக்கு ஆயிரம் ரூபாய் என 55 மாணவருக்கு 55 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இறைச்சி உள்ளிட்டவற்றை வழங்காமலேயே வழங்கப்பட்டதாக போலி வருகைப்பதிவேடு தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய முறைகேடு நடந்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் முழு காரணம் விடுதி காப்பாளர்கள் என்றும் மாவட்ட அலுவலர்களின் துணையோடு இந்த மோசடி பல லட்சக்கணக்கில் அரங்கேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.



மேலும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர்கள் எவரும் தங்களின் கடமைகளை சரிவரச் செய்வது இல்லை என்றும், விடுதியை நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறது என்றும் மேற்பார்வை செய்வதும் கிடையாது என்று அப்பகுதி மக்கள் குறை கூறுகிறார்கள். மாறாக ஒவ்வொரு விடுதி காப்பாளர்களிடமிருந்து விடுதிக்கு அரசு ஒதுக்கிய நிதியில் அதாவது மாதம் வழங்கப்படும் 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 10சதவீதம் பணத்தை பங்களிப்பாக பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் விட்டுவிடுவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர். மேலும், விடுதி காப்பாளர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு தினந்தோறும் வழங்கும் உணவுக்கான மளிகைப் பொருட்களை அரசின் உத்தரவுப்படி கற்பகம் கூட்டுறவு அங்காடியில் வாங்க வேண்டியது அவசியம். ஆனால்,  அதைத் தவிர்த்து தனியார் மளிகைக்கடையில் வாங்கியதாக போலி ரசீது தயார் செய்யும் விடுதி காப்பாளர்கள் அதற்கான பணத்தை எடுத்து சொந்த செலவுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.



இந்நிலையில், விடுதிக்கு மாணவர்கள் வராமலேயே விடுதி சமையலர் மற்றும் விடுதியின் தூய்மைப் பணியாளர்கள் மட்டும் அடுப்பு மூட்டி விறகு வைத்து சத்தான உணவு சமைத்து படுத்து உறங்கி மாதம் மாதம் அரசு சம்பளத்தை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதோடு விடுதியில் மாணவர்கள் தங்கும் அறை மற்றும் கழிவறை பல மாதங்களாக சுத்தம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல மாதங்களாக விடுதி கதவுகள் பூட்டி வைக்கப்பட்டு முள் புதர் போன்று காட்சி அளிக்கிறது. திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் இதே நிலைமைதான்.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் உள்ள 49 மாணவர் விடுதிகளை 55 பேர் கொண்ட குழுவினர் தனித்தனியாக விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருவண்ணாமலை அரசினர் மாணவிகள் விடுதியில் விடுதி காப்பாளர் கவிதா, சமையலர்கள் ராணி மற்றும் சோலையம்மாள் ஆகிய மூன்று பேர் பணியில் இல்லாததால் மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி


அரசு கருவூலத்திலிருந்து இப்படி மக்களின் பணம் வீணாவதை தடுக்கவும், அரசை நம்பி விடுதியில் தங்கிப் பயில வரும் மாணவர்களின் நலனுக்காகவும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மேலும் படிக்க | நீலகிரியில் விற்பனையாகும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR