ஹைதராபாத்தை உலுக்கிய ஆணவக் கொலை : திருமணமான 2 மாதத்தில் வெறிச்செயல்! #JusticeForNagaraju
கொடூரமான முறையில் அரங்கேறிய ஆணவக்கொலை - தெலுங்கானாவில் பரபரப்பு
நவீன தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளரும் அதே சூழ்நிலையில் இந்தியாவில் ஆணவக்கொலையும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எத்தனையோ உயிரிழப்புகள் ஆணவக்கொலை என தெரியாமலேயே மூடி மறைக்கப்படும் அவல நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், ஹைதரபாத்தில் பட்டப்பகலில் நடந்த ஓர் ஆணவப்படுகொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞரான நாகராஜ் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பதால், இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
மேலும் படிக்க |காதலை கண்டித்த பெற்றோர் : மாணவி தற்கொலை..!
இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் உள்ள பெற்றோர்களுக்கு இடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இரு வீட்டாரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகராஜும், சுல்தானாவும் குடும்பத்தினரை எதிர்த்து பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். யாருக்கும் எந்த பிரச்சனையுமின்றி ஹைதராபாத்தில் வீடு எடுத்து காதலர்கள் வசித்து வந்தனர். அந்த பெண் இந்துவாக மதம் மாறி, பல்லவி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். அத்துடன், இருவருக்கும் இந்து முறைப்படியே திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், நாகராஜ், தனது மனைவி சுல்தானாவுடன் கடந்த புதன்கிழமை இரவு இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் அருகே வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் அவர்கள் வந்த போது, அவரது நாகராஜின் இருச்சக்கர வாகனத்தை 4 பேர் கொண்ட கும்பல் திடீரென மறித்துள்ளது. மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் மனைவி சுல்தானாவின் கண்முன்னே நாகராஜை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. அப்போது, கணவரைத் தாக்குவது தனது உறவினர்கள்தான் என்பதை தெரிந்துகொண்ட சுல்தானா, அந்தக் கும்பலிடம் கணவரை விட்டுவிடும்படி கெஞ்சிக் கதறினார். ஆனாலும் சுல்தானாவை கீழே தள்ளிவிட்டு நாகராஜை சரமாரியாக அந்த கும்பல் அடித்துக் கொலை செய்த பின்னரே அங்கிருந்து சென்றது.
மேலும் படிக்க | பேஸ்புக் மூலம் காதல் திருமணம்! தடையில்லா சான்று தேவையா? மணப்பெண் மனு
பட்டப்பகலில் சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அனைவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கொலையான நாகராஜின் சடலத்தைப் பார்த்தும் வெறியடங்காத அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர், மீண்டும் இரும்புக் கம்பியால் நாகராஜின் சடலத்தைத் தாக்கினார். இதனை சுல்தானா தடுக்க முற்பட்ட போது, அந்த நபர் சுல்தானாவையும் தாக்குவதற்கு கம்பியை ஓங்கினார். இதனைக் கண்டு ஆவேசமான பொதுமக்கள், கையில் இருந்த ஹெல்மெட் உள்ளிட்டவற்றைக் கொண்டு அந்த கொலையாளி மீது தாக்கினர். தொடர்ந்து அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மனதை உலுக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நாகராஜின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைதான நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தங்கள் வீட்டுப்பெண்ணை வேறு மதத்தை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து கொண்டதை ஏற்க முடியாததால், ஆத்திரத்தில் திட்டமிட்டு இந்தக் கொலையை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் 4 பேரை பிடித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | காதலர் தினத்திற்கு எதிர்ப்பு: காவலர்களிடம் கடுமையான வாக்குவாதம்
இதனிடையே, இந்த விவகாரத்தை தெலங்கானா பாஜக கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜக எம்எல்ஏ ராஜா சிங், "இந்த விவகாரத்தின் பின்னணியில் பெண்ணின் குடும்பத்தினர் மட்டும்தான் உள்ளனரா ?, அல்லது இவர்களுக்குப் பின்னால் மத குழுக்கள் உள்ளனரா ? என விசாரிக்க வேண்டும். முழு விசாரணை செய்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆணவக்கொலை ஹைதரபாத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பலர் JusticeForNagaraju என்ற ஹேஷ்டேக்கைப் பகிர்ந்து வருகின்றனர். காதல் மட்டுமே செய்து கொலையுண்ட நாகராஜுவின் மரணத்துக்கு உரிய நீதி வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ஹைதராபாத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மேலும் படிக்க | நிஜத்தில் ஒரு காதல்கோட்டை; எதிர்ப்பை மீறி மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பெண்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR