சித்ரா பௌர்ணமி... வெள்ளிங்கிரி மலை ஏற திட்டமா... ‘இந்த’ பரிசோதனைகள் அவசியம்..!
கோவை வெள்ளிங்கிரி மலையில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி மலை ஏறுபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சித்ரா பௌர்ணமியை ஒட்டி வெள்ளிங்கிரி மலைக்குச் செல்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. கோவை வெள்ளிங்கிரி மலையில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி மலை ஏறுபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வனத்துறை அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டும் பக்தர்கள் செல்லவும், மாற்று பாதைகளில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வனத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கவும், பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் போட வேண்டாம் என தெரிவித்துள்ள வனத்துறையினர், மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவளிக்க கூடாது எனவும் எளிதில் தீ பற்றகூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர். அதே போல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் எங்கும் தீ மூட்டகூடாது எனவும், வெள்ளிங்கிரி 6-வது மலை ஆண்டி சுனையில் குளித்து விட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை
பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு கடந்த மாதங்களில் சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்து உள்ள நிலையில், இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுதிணறல் உள்ளவர்கள், உடல்பருமனாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், வயதில் மூத்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் என வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்தபின் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல தமிழக வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
வனத்துறைக்கு கடும் சவால்
வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல அறிவுறுத்தியுள்ள வனத்துறையினர் மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும் போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர். உயிரிழப்புகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும் நபர்களை
அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கு கடும் சவாலாக உள்ளதால் அனைவரின் நலன்கருதி வெள்ளிங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் அறிவுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. தமிழக கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ