எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை: 7 பேருக்கு ஆயுள் தண்டனை
எம்.ஜி.ஆ-ன் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு மர்ம கும்பல் அவரது காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது. இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின்போது, சொத்து பிரச்சினையில் விஜயனின் மனைவி சுதாவின் தங்கை பானுதான் கூலிப்படை மூலம் விஜயனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. கருணா என்ற போலீஸ்காரர் பானுவுக்கு உதவி செய்யும் விதமாக, இந்த கூலிப்படையை ஏற்பாடு செய்து, கொலை சம்பவத்தை நிகழ்த்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து பானு, போலீஸ்காரர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், எம்.கார்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பானுவின் தோழி புவனா வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதால், அவரை தேடப்படும் நபராக அறிவித்து, இதுநாள் வரை அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த கொலை வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் தீர்ப்பு கூறினார். ‘இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என்று முடிவு செய்து, அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்’என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பு குறித்து சுதா நிருபர்களிடம் கூறியதாவது:-‘என் கணவர் விஜயன் மிகவும் நல்லவர். அவரை சொத்துக்காக இப்படி அடித்துக் கொலை செய்துவிட்டனர். என் கணவர் உயிருடன் திரும்பி வரப்போவதில்லை. அதே நேரம், இந்த தீர்ப்பு, அவரது ஆத்மாவை சாந்தியடைய செய்யும். கொலை செய்தால், தண்டனை கிடைக்கும் என்று தமிழக அரசும், சி.பி.சி.ஐ.டி. போலீசும், இந்த நீதிமன்றமும் நிரூபித்து இருக்கிறார்கள். நீதித்துறை மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைத்து இருக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கும், போலீசுக்கும் அரசு வக்கீலுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறினார்.