தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிகிறது. சாதாரண மக்கள் சிறிய வீடு கட்ட வேண்டும் என்றாலும் லஞ்சம் கேட்கப்படுகின்றது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்ட தனியார் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு (எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு) 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் 10 மாடியில் கட்டப்பட்டுவரும் எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணியில் ஆழ்துளை அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் அதிக அளவில் ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை எனவும், உரிய கட்டணம் செலுத்தும் பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் எனவும் சி.எம்.டி.ஏ. தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது.
இதையடுத்து, எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திட்ட அனுமதி கோரிய விண்ணப்பம் நிலுவையில் உள்ளபோதே, அருகில் உள்ள செயிண்ட் பிரான்சிஸ் பள்ளிக் கட்டிடத்தில் விரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கடந்த 8ம் தேதி அனுப்பிய கடிதத்தில், மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், புகார் அளித்த பள்ளியின் கட்டிடம் உரிய திட்ட அனுமதி பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் திட்ட அனுமதி தொடர்பாக தற்போது கேள்வி எழ என்ன காரணம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிந்த பிறகு பள்ளி பழுது பார்க்கப்படும் என கூறியிருந்ததாலும், கட்டுமானப் பணிகள் நடக்காது என உத்தரவாதமும் அளித்ததாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | திருச்சி சிவா என்னிடம் வெளிப்படையா சொன்னார்: ரகசியத்தை சொன்ன ஹெச் ராஜா
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாசு கட்டுபாட்டு வாரியம் பிப்ரவரி 2ஆம் தேதி ஆய்வு செய்தபோதும், ஒலி மாசு இருந்ததும், அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்ததாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டவிரோத கட்டுமானங்களுக்கு லஞ்சம் பெற்று கொண்டு திட்ட அனுமதிகளை அதிகாரிகள் வழங்குவதாக கடும் கண்டனம் தெரிவித்தனர். சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிவதாகவும், சாதாரண மக்கள் சிறிய வீடு கட்ட வேண்டும் என்றால் கூட லஞ்சம் கேட்பதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில் கட்டுமான பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், ஏற்கனவே விதிக்கபட்ட இடைக்கால தடையை நீக்கியதுடன், திட்ட அனுமதியை பின்பற்றிதான் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், விதிமீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித்ததன் மூலம் கடமை தவறி விட்டதாக அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றிற்கு தலா 5 லட்சம் ரூபாய், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திற்கு 2 லட்ச ரூபாய், எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.
இந்த அபராத தொகை 37 லட்ச ரூபாயை அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எம்.ஜி.எம் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் குறித்து, சி.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சி, மாசு கட்டுபாட்டு வாரியம் ஆகியவை 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
மேலும் படிக்க | தமிழகம் வரும் மோடி! பல்லடத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ