கேடுகளுக்கு வழிவகுக்கும் கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிடுங்கள்: ராமதாஸ்

சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்னுற்பத்தி செய்யும் எரிஉலை (Incinerator) திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. சுற்றுச் சூழலில் தொடங்கி மனித உயிர்கள் வரை பல்வேறு வகையானக் கேடுகளை குப்பை எரிஉலைத் திட்டம் ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்திருந்தும் அதை செயல்படுத்த மாநகராட்சி துடிப்பது கண்டிக்கத்தக்கது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 27, 2024, 11:13 AM IST
  • 66 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குவிந்து கிடக்கின்றன.
  • 75 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
  • எரிஉலை திட்டம் அதற்கு நேர் எதிரான கேடுத்திட்டம் ஆகும்.
கேடுகளுக்கு வழிவகுக்கும் கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிடுங்கள்: ராமதாஸ் title=

சென்னை கொடுங்கையூரில் 342 ஏக்கரில் குப்பைக் கொட்டும் வளாகம் உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் 66 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குவிந்து கிடக்கின்றன. அவ்வப்போது தீப்பிடித்து எரியும் குப்பைகளால் அப்பகுதியில் வாழும் 20 லட்சத்திற்கும் அதிக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையான தீமைகள் ஏற்படுகின்றன. இதற்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் உதவியுடன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் (Bio -Mining) திட்டத்தின் மூலம் அகற்றி, நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ரூ.640 கோடியில் சென்னை மாநகராட்சி செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் மீட்டெடுக்கப்படும் சுமார் 250 ஏக்கர் நிலம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படும் என்பதாலும், இனி வரும் காலங்களில் அப்பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், நோய்பரவும் வாய்ப்புகளும் குறைவு என்பதால் இந்தத் திட்டம் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

அதேநேரத்தில், அதே குப்பைக் கொட்டும் வளாகத்தில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரூ.1026 கோடியில், 75 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி அப்பகுதியில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரிப்பதற்கான எரிஉலை நிறுவப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் உற்பத்து செய்யப்படும். உயிரி அகழாய்வு திட்டம் சுற்றுச் சூழலை காக்கக் கூடிய திட்டம் என்றால், எரிஉலை திட்டம் அதற்கு நேர் எதிரான கேடுத்திட்டம் ஆகும்.

குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும். அதனால், டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10 நச்சுத் துகள்கள் (Suspended Particulate Matter), ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (Volatile Organic Compounds) ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலில் அழியாமல் நிலைத்திருக்கக் கூடியவை (POPs - Persistent Organic Pollutants), மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் இருந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களிலேயே மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது எரிஉலை தான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகின்றன. இத்தகைய நச்சுப்பொருட்களால் புற்றுநோய், இதய நோய், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு, தோல் நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் இது கடுமையாக பாதிக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர். போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட அழிவு சென்னையில் குப்பை எரிஉலையால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது.

மேலும் படிக்க | Naam Tamilar Patry: அனுமதி இன்றி லாரியில் ஜல்லி ஏற்றிவந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கைது!

சென்னை மாநகரில் உருவாக்கப்படும் குப்பையில் மிக அதிக அளவு காய்கறிக் கழிவுகளும் உணவுக் கழிவுகளும் உள்ளன. இவை ஈரமாகவும் (Higher Moisture Content) எரிப்பதற்கான கலோரி மதிப்பு குறைவாகவும் (Low Calorific Value), மண், புழுதி கலந்ததாகவும் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு குப்பை எரிஉலை (Incinerator) அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்தியாவில் உருவாகும் குப்பை - எரிஉலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்ட எரிஉலைத் திட்டங்கள் படுதோல்வி அடைந்தன. அவை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன.

கடந்த 2017 ஆம் ஆண்டில் சென்னை பெருநகராட்சி நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் குப்பை எரிஉலை திட்டங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மீண்டும் 27.06.2023 அன்று தண்டையார்பேட்டையில் நடைபெற்ற மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் பசுமைத் தாயகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இத்தகைய திட்டங்களை கைவிட வேண்டும் என்று 07.09.2023 அன்று சென்னை மாநகராட்சி ஆணையரை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், அதன்பிறகும் இப்பேரழிவு திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டுவதை அனுமதிக்க முடியாது.

குப்பை உருவாகாமல் தடுப்பது, பிளாஸ்டிக் குப்பைக்கு உற்பத்தியாளரை பொறுப்பாக்குவது, குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, மறுசுழற்சி கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது, கழித்துக்கட்டும் கழிவுகளை நிலநிரப்புவது உள்ளிட்ட அறிவியல்பூர்வமான சுழிய குப்பை மேலாண்மை முறைகளை விட, குப்பை எரிஉலை மிக அதிக செலவு பிடிக்கக் கூடியது ஆகும். கொடுங்கையூர் குப்பை எரிஉலையால் சென்னை மாநகராட்சி பெரும் பொருளாதார இழப்பினை சந்திக்கும் என்பது உறுதி.

எனவே, கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக, சுழியக் குப்பை எனப்படும் குப்பையில்லா சென்னை (Zero Waste Chennai) கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மேலும் படிக்க | அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாகூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த கோரும் நாகூர் தர்கா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News