சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட உணவகங்களில் காலை 6 முதல் இரவு 9 மணி வரை பார்சல் வழங்க அனுமதி..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இரவுடன் முழு முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை 6 முதல் புதிய கட்டுப்பாடுகள்  - தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை நள்ளிரவுடன் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், திங்கள்கிழமை காலை முதல் கடைகள் திறப்பு குறித்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் மத்திய அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.


இதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. இருப்பினும், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு நாளை (ஜூலை 5) வரை அமலில் இருக்க உத்தரவிட்டிருந்தேன். தற்போது, அதாவது, 6-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.


பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.


READ | தமிழகத்தில் முழுமுடக்கம் என்பதால் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது..!


தேநீர்க் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். காய்கறிக் கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.


வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை), ஏற்கெனவே அறிவித்து இருந்த வழிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.


மற்ற செயல்பாடுகளைப் பொறுத்தவரை, கடந்த ஜூன் 19-க்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.