டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், ஓரிரு நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது. 


போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திகைத்துப் போன மத்திய அரசும், மாநில அரசும் இதுதொடர்பாக ஆலோசனைகளையும் நடத்தின. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நேற்று டெல்லி விரைந்தார். அங்கு பிரதமரைச் சந்தித்தார். ஆனால் பிரதமர் வழக்கம் போல சட்டத்தையும், நீதிமன்றத்தையும் கை காட்டி விட்டு கை விரித்து விட்டார். 


இதையடுத்து இன்று காலை மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அப்போது அவர் முக்கிய தகவலை வெளியிட்டார். 


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்:-


பிரதமரை நேற்று சந்தித்தபோது மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க கேட்டுக் கொண்டேன். அதை பரிவுடன் கேட்டுக் கொண்ட பிரதமர், இப்பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுக்கு தான் மதிப்பளிப்பததாக தெரிவித்தார். 


மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் தமிழக அரசு சட்டரீதியாக எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று அவர் தெரிவித்தார். 


இதையடுத்து நான் டெல்லியிலேயே தங்கி ஜல்லிக்கட்டு நடத்திட வகை செய்யும் வகையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்வது குறித்து சட்ட வல்லுநர்கள், உயர் அதிகாரிகளுடன் விவாதித்தேன். அதன் அடிப்படையில் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்தத் திருத்தத்தை அவசரச் சட்டமாகவும் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி வரைவு அவசரச் சட்டம் மத்திய அரசின் உள்துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும். பின்னர் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்து அதன் அடிப்படையில் ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க இயலும். நேற்றே இந்த வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு உள்துறைக்கு அனுப்பப்பட்டு விட்டது. 


தொடர் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை நான் பணித்துள்ளேன். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு அவசரச் சட்டம் ஓரிரு நாளில் பிறப்பிக்கப்படும். 


ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு ஓரிரு நாளில் அது நடைபெறும் என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிடுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.